Tag Archives: annual general meeting

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

How to track the Stocks(Shares) fundamentally ?

பங்குச்சந்தையில் நாம் காணும் அனைத்து பங்குகளும் வருடத்தின் எல்லா நாட்களிலும் வர்த்தகமாகும் என சொல்லிவிட முடியாது. பொதுவாக லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் நிறுவன பங்குகள் பெரும்பாலும் அனைத்து நாட்களிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கும். அதே வேளையில் ஸ்மால் கேப் பங்குகள் அப்படியல்ல. அவற்றில் வர்த்தக புழக்கம்(Liquidity) பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) அதிகமாக இருத்தல், பெரு நிறுவன முதலீட்டாளர்களிடம்(Institutional Investors) கைவசம் இல்லாதது மற்றும் பொதுவெளியில் மிகவும் குறைவான பங்குகளே அமைந்திருப்பது அதன் வர்த்தக புழக்கத்திற்கு காரணமாக அமையும். இருப்பினும் ‘மல்டி பேக்கர்(Multibagger)’ என சொல்லக்கூடிய பல மடங்கு லாபத்தை அளிக்கவல்லது இந்த ஸ்மால் கேப் நிறுவன பங்குகள்.

அதிக பங்குகளை கொண்டு வர்த்தகமாகும் அல்லது ஒரே நாளில் வர்த்தக அளவை அதிகமாக கொண்டிருக்கும் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்தில் வருவாயை அளிக்கும் என நாம் சொல்ல இயலாது. இதற்கு உதாரணமாக யூனிடெக், ஜே.பி.அசோசியேட்ஸ், யெஸ் பேங்க்,  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வோடபோன், ஜெட் ஏர்வேஸ் போன்ற பங்குகளை சொல்லலாம். நாள் வணிகத்துக்கு(Day Trading) இவை ஏற்றவையாக தெரிந்தாலும், உண்மையில் முதலீடு செய்பவர்களுக்கு நட்டத்தை மட்டும் தான் கொடுத்துள்ளன.

“A stock is not just a ticker symbol or an electronic blip; it is an ownership interest in an actual business, with an underlying value that does not depend on its share price.” – Benjamin Graham(Father of Value Investing), The Intelligent Investor

“ பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் என்பது வெறும் எண்கள் அல்ல. அவை ஒரு நிறுவனத்தின் தொழிலில் உங்களுக்கான உரிமையாகும். உண்மையான தொழிலின் மதிப்பு என்பது அதன் பங்கு விலையை சார்ந்திருக்க  வேண்டும் என்று அவசியமில்லை “ என முதலீட்டின் தந்தை என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் கூறுகிறார்.

நீண்டகாலத்தில் பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் செல்வத்தை ஏற்படுத்த வெறுமனே பங்குகளை வாங்கி விட்டால் மட்டும் போதாது. அதனை நமது சொந்த தொழிலை போல கண்காணிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • காலாண்டு முடிவுகளும், ஆண்டு பொதுக்கூட்டமும்:

சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் தனது தொழிலுக்கான காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகளை வெளியிட வேண்டியது அவசியம். இது அவர்களுக்கானதல்ல, நம்மை போன்ற முதலீட்டாளர்கள், நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் நிதிநிலை  அறிக்கைகளை(Financial Statements) அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. நிறுவனம் பின்னொரு காலத்தில் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாம் இது போன்ற முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் விற்பனையும், லாபமும் ஒவ்வொரு காலாண்டிலும் எப்படி உள்ளது, இதர வருமானம்(Other income) மட்டுமே அதிகரித்து வருகிறதா, நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு, நிறுவனர்களின் பங்கு அடமானம், பங்குதாரர்களின் பங்களிப்பு(Shareholding Pattern), டிவிடெண்ட் அறிவிக்கப்படும் தேதி என அனைத்து தகவல்களையும் ஒருசேர காலாண்டு முடிவுகளில் பெற்று விடலாம். இதன் வாயிலாக பிற்காலத்தில் நமது முதலீட்டு முடிவை பரிசீலிக்க இவை உதவும்.

காலாண்டு முடிவுகளும், நிதியாண்டுக்கான நிதி அறிக்கைகளும் இணையத்தில்(BSE, NSE, Company website) எப்போதும் கிடைக்கப்பெறுகிறது. அதனை சரியான காலத்தில் வாசிப்பது முதலீட்டாளரான நமது கடமை. நிறுவனம் சார்பாக ஆண்டுக்கொரு முறை பங்குதாரர்கள் கூட்டமும்(Annual General Meeting – AGM) நடைபெறுகிறது. இணையவழி மற்றும் நேரடியாக சென்றும் இது போன்ற நிகழ்வுகளில் நாம் கலந்து கொண்டு, நிறுவனத்தின் மீது நமக்கு ஏற்படும் சந்தேகங்களையும், தொழில் சார்ந்த பொதுவான கேள்விகளையும் நாம் அங்கே கேட்கலாம்.

  • வாக்களிப்பதுஉங்கள் கடமை, பங்குச்சந்தையிலும்: 

ஒரு பங்குதாரராக நிறுவனத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கும், தொழில் கொள்கைகளை தீர்மானிக்கவும் நமக்கான வாக்களிக்கும் உரிமை பங்குச்சந்தையில் உண்டு. “ என்னிடம் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது, நான் அப்படி என்ன செய்து விட போகிறேன் “ என நீங்கள் கேட்கலாம். முன்னொரு காலத்தில் இருந்தது போல, இன்று நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) மற்றும் தொழில் ஆதிக்கம் பெரும்பான்மையாக இல்லை. இன்றையளவில் வங்கிகளும், பரஸ்பர நிதிகளும் தான் குறிப்பிடத்தக்க பங்குகளை ஒரு நிறுவன பங்குகளில் வைத்துள்ளது. இதற்கு அடுத்தாற் போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தான்.

இயக்குனர் குழு மற்றும் நிறுவன பொறுப்புகளில் ஒருவரை நியமனம் செய்தல், நீக்குதல், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றிற்கு உங்களது வாக்கு ஒரு நிறுவனத்திற்கு அவசியமானது. நீங்கள் வாக்களிக்க தவறும் நிலையில், முடிவுகளும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் டாட்டா குழுமத்தில் மிஸ்திரி குடும்ப பங்குகளின் தாக்கம், வேதாந்தா நிறுவனம் பங்குச்சந்தையை விட்டு வெளியேற முடியாமல் சென்ற தருணம், யெஸ் வங்கி பங்குகளின் முடக்கம், நிறுவனங்களின் பங்குகளை திரும்ப பெறும்(Buyback of Shares) முறை, போனஸ் பங்குகள், புதிய பங்கு வெளியீடு என பல்வேறு செயல்பாடுகளுக்கு வாக்களிப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும்.

வாக்குகளை நேரடியாக அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இணைய வழியிலான(E-Voting) வாக்களிக்கும் வசதியும் இன்று நடைமுறையில் உண்டு. இது போன்ற சேவையை NSDL மற்றும் CDSL தளங்கள் நமக்காக செய்து கொடுக்கிறது. இதற்கான சேவை கட்டணத்தை(Brokerage & DP Charges) நாம் ஏற்கனவே பங்குகளை வாங்கும் போதே அந்த நிறுவனத்திற்கு செலுத்தி விட்டோம் என்பதனை நினைவில் கொள்ளவும்.

  • நிறுவனங்களை நேரடியாக காணுங்கள், தொழிற்சாலைக்கு செல்லுங்கள்:

ஒரு நிறுவன பங்கை நாம் இணையம் வழியாக வாங்கி விட்டால், அதனோடு பங்கு முதலீடு முடிந்து விடப்போவதில்லை. இணையம் மட்டும் பங்கு முதலீட்டுக்கான வாழ்க்கையல்ல. அவை நமக்கான எளிய கட்டமைப்பு. நீங்கள் குடியிருக்கும் அல்லது வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில், நீங்கள் வாங்கிய பங்கு நிறுவன அலுவலகம் அல்லது தொழிற்சாலை அமைந்திருந்தால் அங்கே சென்று பாருங்கள்.

நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவை எப்படி என நேரடியாக கண்காணியுங்கள். முடிந்தால், நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவிடம் அனுமதி பெற்று அவர்களது தொழிற்சாலையை சுற்றி பாருங்கள். இதற்கான வசதியை ஒரு நிறுவனத்தின் கம்பெனி செயலாளர்(Company Secretary) பொதுவாக செய்து கொடுப்பார். நிறுவனம் சார்ந்த ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் அவருக்கு மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் எந்த தொழிலையும், அலுவலகத்தையும் கொண்டிருக்காமல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஷெல் நிறுவனங்களும்(Shell companies) உண்டு என்பது சந்தை வரலாறு. சந்தையில் அவற்றின் பங்கு விலை நாள்தோறும் ஏற்றமடைகிறது என்ற ஒற்றை காரணத்திற்காக பங்குகளை வாங்காமல், நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளை கண்காணிப்பதும் அவசியம்.

நண்பர்களோடு சுற்றுலா செல்வது போல, ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு நிறுவனத்தை நேரடியாக சுற்றி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் சேவைகள்:

நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகள் எப்.எம்.சி.ஜி.(FMCG) பொருட்களை விற்கும்(Retail & Super Market) கடைகளாக தான் இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை எப்.எம்.சி.ஜி. துறையில் காணப்படும் பிரபலமான பொருட்கள் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பொருட்களாக தான் இருக்கும். உதாரணமாக இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., டாபர், கோத்ரேஜ், மாரிகோ, கோல்கேட், பஜாஜ், டி-மார்ட் போன்ற நிறுவனங்கள் தான். நமது நகரில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் தென்படும் பிராண்டுகளின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். பேச்சுவாக்கில் கடை உரிமையாளர் அல்லது விற்பனை மேலாளரிடம் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை எப்படி உள்ளதென அறிய முற்படலாம். இதற்கெல்லாம் நாம் நிதி மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (ரியல் எஸ்டேட் முதலீட்டில் விசாரிக்கிறோமே !).

  • துறை சார்ந்த நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள்:

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பல துறைகளை சார்ந்தவை. வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், வாகனம், நுகர்வோர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள்(Consumer Durables), எண்ணெய் சுத்திகரிப்பு, எரிசக்தி, விவசாயம், கல்வி, மின்னணு பொருட்கள், பொழுதுபோக்கு, மருத்துவம், கட்டுமானம்,காப்பீடு, காலணிகள், ஏற்றுமதி, ஜவுளி, தொலைத்தொடர்பு என பல துறைகளை உள்ளடக்கியவை.

நீங்கள் தொழில் செய்யும் நபராக இருந்தால், உங்களது துறையில் உள்ள சாதக-பாதகங்கள் உங்களுக்கு பொதுவாக தெரிந்திருக்கும். பொருளாதார மந்தநிலை காலங்களில் உங்களது தொழில் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும், அரசு கொள்கைகள் உங்கள் தொழிலுக்கு சாதகமாக உள்ளதா எனும் விஷயங்கள் உங்களது முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள். இதனை நீங்கள் பங்குச்சந்தையிலும் பயன்படுத்தலாம்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்கள் துறையில் உள்ள சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் துறை சார்ந்த ஆலோசனைகள், விவாதங்களை முன் வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் உங்களது பங்கு முதலீட்டுக்கு உதவும்.

நண்பர் ஒருவர் அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) துறையின் முக்கிய பதவியில் வேலை பார்த்து வந்தால் அவரிடம் துறை சார்ந்த வளர்ச்சியையும், எதிர்காலத்தில் இவற்றின் தாக்கம் எப்படி உள்ளதென கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இன்று பங்கு முதலீடு சார்ந்த கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் வாயிலாக கிளப் ஹவுஸ், முகநூல்(Facebook Events), வலைப்பக்க நிரல்கள்(Webinars) நாள்தோறும் நடைபெறுகின்றன. இவற்றில் கலந்து கொண்டு பங்கு சார்ந்த தொழில் புரிதலை ஏற்படுத்தி கொள்ளலாம். அதே வேளையில் நாம் அதிகாரபூர்வ மற்றும் அரசு அங்கீகரிக்கும் நிறுவன தளம் மற்றும் ஆலோசகர்களிடம் தகவல்களை பெறுகிறோமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாட்சப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் பரிந்துரைத்தார் என பங்குகளை வாங்கி பின்னர் நட்டமடைவதை தவிர்க்க மேலே சொன்ன விஷயங்கள் நமக்கு நீண்டகாலத்தில் பயனளிக்கும். வெறுமென ஊக விஷயங்களுக்கு பின்னால் நகர்வதை விட, நாமே நமது தொழிலுக்கான(பங்கு முதலீடு) அக்கறையை கொண்டிருப்பது நலம்.

பங்குகளை கண்காணிக்க நேரமில்லை என சொல்பவர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Mutual Funds) உள்ளது. உங்களுக்காக ஒரு பண்ட் மேனேஜர் அங்கே நிர்வகிக்க தயாராக உள்ளார். நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு செல்வமீட்டலாம்.

பங்குகள் உங்களின் செல்ல(செல்வ) குழந்தைகள், அவற்றை வளரும் போது நீங்கள் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்தால், பின்னொரு காலத்தில் அவை உங்களை கவனித்து கொள்ளும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பங்குதாரர் – ஆண்டு பொதுக்கூட்டம்

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பங்குதாரர் – ஆண்டு பொதுக்கூட்டம்

Shareholder of Reliance Group Companies warned the Promoter – Annual General Meeting

ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (30-09-2019) மும்பையில் நடைபெற்றது. திரு. அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் நிப்பான் லைப், ரிலையன்ஸ் பவர், இன்ப்ரா(Reliance Infra) மற்றும் ரிலையன்ஸ் நேவல்(Reliance Naval & Engg) ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.

அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் அனைத்தும் கடன் சிக்கலில் உள்ளன. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அதன் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பெருவாரியான பணத்தை இழந்துள்ளனர்.

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்திற்கு கடனாக ரூ. 46,160 கோடியும், ரிலையன்ஸ் பவர்(Reliance Power) ரூ. 30,450 கோடி, ரிலையன்ஸ் இன்ப்ரா ரூ. 17,770 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ரூ. 47,600 கோடி கடனாகவும் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கும் ரூ. 10,905 கோடி கடனாக உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் நிறுவனர்களின் பங்கு அடமானத்தில்(Pledging) உள்ளது கவனிக்கத்தக்கது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அனில் அம்பானி பேசுகையில், நிறுவனத்தின் கடன்களை குறைத்து வருவதாகவும், அடுத்த 18 மாதங்களில் மேலும் சில கடன்களை அடைப்பதற்கான தீர்வுகளை கண்டுள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் நேவல் நிறுவனமும் பெரும் நிதிச்சிக்கலில் உள்ளது.

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வரும் கடன் சேவை, வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த சேவையை நிறுத்த உள்ளதாகவும் அனில் அம்பானி கூறியுள்ளார். ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிறுவனத்தின்(Reliance ADAG) மீது பல குறைகள் எழுப்பப்பட்டன. பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் பரிசீலிக்கப்படுவதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சமயத்தில், கூட்டத்தில் இருந்த பங்குதாரர் ஒருவர், சொல்லப்பட்ட பிரச்சனைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படவில்லை எனில், நிறுவனத்தின் மீது வழக்கு தொடர போவதாக எச்சரித்தார். அந்த பங்குதாரர் ரிலையன்ஸ் குழும நிறுவனத்தில் இதுவரை 3 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், தற்போதைய நிலையில் தான் 90 சதவீத முதலீட்டை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சொல்லப்பட்ட இழப்பிற்கு நிறுவனமே பொறுப்பாகும் எனவும், நிறுவனத்தில் முதலீடு செய்த பல முதலீட்டாளர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டதற்கு நிறுவனத்தின் நிர்வாக திறமையின்மை தான் காரணம் எனவும் கூறினார். இதுவரை கம்பெனி சட்டம் 2013ன் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மீது பங்குதாரர்கள் சார்பில் முதல் வகுப்பு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு சொல்லப்பட்ட பங்குதாரர் வழக்கை பதிவு செய்யும்பட்சத்தில், நம் நாட்டில் இதுவே முதன்முறையாக இருக்கும்.

ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 380 ரூபாய் என்ற விலையிலிருந்து 28 ரூபாய்க்கு சரிந்துள்ளது. இதே போல ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு விலை 32 ரூபாயிலிருந்து 2 ரூபாய்க்கும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்கு விலை 18 ரூபாயிலிருந்து 65 பைசாவிற்கும் வந்துள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் பங்கு ஒரு வருடத்திற்கு முன்பு 300 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த பங்கின் விலை 24 ரூபாயாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com