ரூ.20,000 முதலீடு… இன்று ஒரு கோடி ரூபாய் – 15 ஆண்டுகளில் !
20,000 rupees investing in 2006, Rs.1 Crore asset today – Fundamental Analysis
1980 களில் நீங்கள் விப்ரோ பங்குகளில் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால்… 1990 களில் நீங்கள் இன்போசிஸ் பங்குகளை வாங்கியிருந்தால்… என்ற ராகங்களை எல்லாம் இனி இங்கே வாசிக்க தேவையில்லை. மல்டிபேக்கர்(Multibagger) என சொல்லப்படும் பல மடங்கு லாபம் தரும் பங்குகள் சந்தையில் ஏராளம். வெறுமென பைசாவில் வர்த்தகமாகும், அடிப்படை பகுப்பாய்வை(Fundamentals) நிறைவு செய்யாத பங்குகளெல்லாம், பல மடங்கு லாபம் அளிக்கும் பங்குகளாக எப்போதும் இருப்பதில்லை. அவை சில சுழற்சி காலங்களில் ஏற்றமடையும், ஆனால் பெரும்பாலான சமயங்களில் விலை வீழ்ச்சியடையும்.
அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்து, நீண்டகாலத்தில் காத்திருந்து முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபமளிக்கும் நிறுவனத்தினை தான் நாம் பார்க்க உள்ளோம். இதற்கான கடந்த கால முதலீட்டு வரலாற்றை காட்டிலும், எதிர்வரும் காலத்தில் தான் வாய்ப்புகள் பெரும்பாலும் உள்ளது. பொதுவாக ஸ்மால் கேப் மற்றும் மைக்ரோ கேப் பங்குகளில் முதலீடு செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஷெல் நிறுவனங்கள்(Shell Companies) என சொல்லப்படும் வணிக நடவடிக்கைகளை ஏதும் மேற்கொள்ளாத நிறுவனங்கள், போலி நிறுவனங்கள் மைக்ரோ மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் உள்ளது கவனிக்கத்தக்கது. எனவே தொழிலை நாணயமாக நடத்தும், அடிப்படை பகுப்பாய்வை நிறைவு செய்யும் நிறுவனங்களை கண்டறிவது சற்று சவாலான காரியம் தான்.
பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி வைத்து விட்டு, சும்மா உட்கார்ந்தால் அனைத்து பங்குகளும் உங்களுக்கு செல்வத்தை தந்து விட முடியாது. அதற்கான திறமான காரணிகளும் இருக்க வேண்டும். இதனால் தான் நிப்டி 50ல் உள்ள சில நிறுவனங்களும் தகிடுதத்தம் போட்ட காலங்களும் உண்டு. அடுத்த எச்.டி.எப்.சி. வங்கி என சொல்லப்பட்ட வங்கிகள் திவால் நிலைக்கு சென்றதும், நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் குழுமம் என ஒரு காலத்தில் சொல்லப்பட்ட பங்குகளும், பல காலங்களாக தொழிலில் லாபமீட்டாமல் நட்டத்தை மட்டுமே கொண்டிருப்பதும் சந்தையின் நிகழ்வு.
இருப்பினும் அடுத்த டாட்டா, இன்போசிஸ், ரிலையன்ஸ், பஜாஜ் போன்று இல்லாவிட்டாலும், நீண்டகாலத்தில் செல்வம் அளிக்கும் ஒரு நிறுவனத்தை கண்டுபிடிப்பதும் நமது பங்குச்சந்தை கற்றலுக்கான அடிப்படை தேடல் தான். அது போன்ற ஒரு நிறுவனத்தை தான் நாம் இங்கு பார்க்க உள்ளோம்.
கடந்த 1932ம் ஆண்டு திரு. செவ்வந்தி லால்(Sevantilal K Shah) அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் எஸ்.கே.குழுமம் – SK Group. ஆரம்ப நிலையில் மும்பை மாநகரில் 500 சதுர அடியில் தனது ரசாயன தொழிலை துவக்கிய இவர் மருந்து துறைக்கு தேவையான மருந்துகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக மாற்றினார்.
பின்னொரு காலத்தில், எஸ்.கே. குழுமம் குடும்பத்தினர் வகிக்கும் தொழிலாகவும் மாறியது. ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற வாக்கிற்கு ஏற்றாற் போல், குழுமத்தில் பல நிறுவனங்களும் தோற்றுவிக்கப்பட்டது. எஸ்.கே. குழுமத்தின் பல நிறுவனங்களில் மற்றொரு புதிய நிறுவனமாக அனுக் பார்மா(Anuh Pharma) எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட வருடமே, மும்பை பங்குச்சந்தையிலும் பதிவு செய்யப்பட்டது.
குழும நிறுவனம் ரசாயனம், தளவாடங்கள், விநியோகம் மற்றும் மருந்து துறையில் சிறந்து விளங்கி வந்த நிலையில், அனுக் பார்மா பாக்டீரியா, மலேரியா, கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் காசநோய் ஆகியவற்றை எதிர்க்க தேவையான மருந்து பொருட்களை உற்பத்தி செய்து வந்தது. இது போல பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டது.
காச நோய்க்கு எதிரான மருந்து தயாரிப்பில் நாட்டின் முக்கிய நிறுவனங்களுள் அனுக் பார்மாவும் ஒன்று. மும்பை சந்தையில் மட்டுமே பங்குகளை வெளியிட்டுள்ள இந்நிறுவனத்திற்கு கடன்கள் எதுவும் பெரிதாக இல்லை. கடன்-பங்கு விகிதம் 0.07 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 16 மடங்குகளிலும் உள்ளது. 2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.166 கோடியாக உள்ளது. இது சந்தை மூலதன மதிப்பில் நான்கில் ஒரு பங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 432 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.28 கோடியாகவும் இருந்துள்ளது.
2006ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அனுக் பார்மா நிறுவனத்தின் முக மதிப்பு(Face value) 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டது. உதாரணமாக 2006 ஜனவரி மாதத்தில் பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஆக வர்த்தகமான நிலையில், நாம் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீட்டு மதிப்பு அன்று 20,000 ரூபாயாக இருந்திருக்கும். முகமதிப்பு மாற்றியமைக்கப்பட்ட பின்பு நமது கையிருப்பு பங்குகள் 2,000 (முதலீட்டு மதிப்பில் மாற்றமில்லை).
அதே வருடத்தில் ஒன்றுக்கு ஒன்று போனஸ்(1:1 Bonus issue) பங்குகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நமது கையில் உள்ள 2,000 பங்குகள் 4,000 பங்குகளாக மாறியிருக்கும். பின்பு 2010ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள்(2:1 Bonus issue) என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது நமது கையிருப்பு 12,000 பங்குகள்.
மீண்டும் 2015ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற அடிப்படையில் போனஸ் பங்குகள். இந்த நிகழ்வுக்கு பின்பு நம்மிடம் 36,000 பங்குகளாக சொல்லப்பட்டிருக்கும். கடந்தாண்டு (செப்டம்பர் 2020) கொரோனா காலத்திலும் 1:1 போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டது. இதனையும் நாம் கணக்கில் கொண்டால் இப்போது 72,000 பங்குகள் நம் கைவசம் இருந்திருக்கும். நடப்பில்(30-07-2021) அனுக் பார்மா நிறுவனத்தின் பங்கு ஒன்று 146 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 15 வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீடு அப்போதைய நிலையில் ரூ.20,000 ஆக இருந்திருக்கும். தற்போதைய விலையில் நம்மிடம் ரூ.1.05 கோடியும், 72000 பங்குகளும் கைவசம் இருக்கும்(பங்குகளை இதுவரை விற்காமல் இருந்திருந்தால் !).
குறைந்தபட்சம் அன்று 100 பங்குகளை 20 ரூபாய் விலைக்கு வாங்கியிருந்தாலும், இன்று அதன் மதிப்பு ரூ.10 லட்சம் ! இது தான் நீண்டகால முதலீட்டின் ரகசியமும் கூட…
ஒரு பங்கு, முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் வருவாயை கொட்டி கொடுத்தாலும், அந்நிறுவனம் நீண்டகாலத்தில் தொழிலை நன்றாக நடத்தி வருவதே முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.
கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை