Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ?

உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ?

Debt to GDP of Developed and Emerging Economies – 2022

உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 798 கோடி(17-10-2022) மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு தோராயமாக 96 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்(தரவு 2021). மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், பொருளாதார மதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்திலும், பொருளாதார மதிப்பில் ஐந்தாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு காலத்தில் உலக பொருளாதாரம் (-3.27) சதவீதமாக வீழ்ச்சியை கண்டிருந்தது. அதே வேளையில் ஊரடங்கு காலத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பொருளாதாரம், 2021ம் ஆண்டின் முடிவில் 5.80 சதவீத வளர்ச்சியுடன் முடிவடைந்தது. 2021ம் வருடத்தில் சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி, கடந்த 48 வருடங்களில் உலகம் காணாத வளர்ச்சியாக இருந்துள்ளது. அதாவது பள்ளத்தில் விழுந்த பூனை மீண்டெழுவது போல (Dead Cat Bounce).

தனிநபர் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில்(GDP per Capita) காணும் போது, கடந்த 1980 களில் 2500 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் 12,260 டாலர்களாக உயர்ந்துள்ளது. தற்போது நாம் உலகின் நான்காம் தொழில் புரட்சி காலத்தில்(Industrial Revolution) டிஜிட்டல் மயத்துடன் இணைந்துள்ளோம். பெருந்தொற்று காலத்திற்கு பிறகு வறுமை அதிகரிப்பு, பருவநிலை மாற்றங்கள், நாடுகளிடையே போர் மற்றும் விநியோக சங்கிலியில்(Supply Chain) சிக்கல் என ஒருபுறம் இருந்தாலும், அடுத்த 20-30 வருடங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளே அதிகம் என உலக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 

உலக பொருளாதார உற்பத்தி மதிப்பில்(GDP) அமெரிக்க நாட்டின் பங்களிப்பு மட்டும் 24 சதவீதமாகும். இதற்கடுத்தாற் போல் சீன நாட்டின் பங்களிப்பு 18.5 சதவீதம், ஜப்பான் 5 சதவீதம் மற்றும் ஜெர்மனியின் பங்களிப்பு 4.4 சதவீதமாக உள்ளது. உலகின் பொருளாதார உற்பத்தி பங்களிப்பு வரிசையில் முதல் 25 நாடுகளை தவிர்த்து பார்த்தால் மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பு, உலக பொருளாதார மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு அளவு கூட இல்லையென்பது கவனிக்கத்தக்கது. 

இதற்கு காரணமாக சொல்லப்படுவது வளர்ந்த மற்றும் விரைவாக வளரும் நாடுகளில் காணப்படும் அதிகபட்ச முதலீட்டு வாய்ப்பு, வேலைத்திறன் மற்றும் நுகர்வு தன்மை தான். பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் கடன்தன்மை அதிகரித்து வந்தாலும், அதற்கான வளர்ச்சியும் சாத்தியப்படுகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பாதுகாப்பு, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மேம்படுவதற்கான முதலீடுகள் அதிகமாக செலவு செய்யப்படுகிறது. 

2021ம் ஆண்டின் தரவின் படி, அமெரிக்காவின் பொருளாதார மதிப்பு 23 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனா மற்றும் ஜப்பான் முறையே 17.7 டிரில்லியன் டாலர்கள் மற்றும் 4.9 டிரில்லியன் டாலர்கள். தனிநபர் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளை காட்டிலும் சீனா மற்றும் இந்தியாவில் குறைவே. அமெரிக்காவில் தனிநபர் பொருளாதார வளர்ச்சி(GDP per Capita) 69,287 அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில், சீனாவில் 12,556 டாலர்களாகவும், இந்தியாவில் 2,277 டாலர்களாகவும் உள்ளது. 

டிசம்பர் 2021 முடிவில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்த பொருளாதார மதிப்பில்(Debt to GDP) 137 சதவீதமாக இருந்துள்ளது. சீனாவில் இது 67 சதவீதமாகவும், ஜப்பானில் 266 சதவீதமாகவும் உள்ளது. ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராச்சியம்(United Kingdom) முறையே 69% மற்றும் 96 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் கடன்தன்மை 74 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா போன்ற நாடுகளில் கடன்தன்மை நூறு சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. வளரும் நாடுகளில் மிகக்குறைவாக தென் கொரியாவில் 42 சதவீதமாக உள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களில் வளர்ந்த நாடுகளின் கடன்தன்மை அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) கூறியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலக நாடுகளின் மொத்த கடன் 226 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கடன் மட்டும் சுமார் 31 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது தனிநபர் ஒருவரின் சராசரி கடன் மட்டும் 93,400 அமெரிக்க டாலர்களாக அந்நாட்டில் உள்ளது. 

உலகளவில் ஜப்பான் நாட்டில் தான் அதன் பொருளாதார மதிப்பில் கடன்தன்மை அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் தேசிய கடன்தன்மை சுமார் 2.3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். ரஷ்யா, ஹாங்காங், வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் அதன் கடன்தன்மை குறைவாகவே காணப்படுகிறது. பொதுவாக வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடன் மூலம் முதலீடுகள் அதிகமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக அதன் வளர்ச்சியும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல் மற்றும் விநியோக சங்கிலியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதன் கடன் மூலம் பெறப்படும் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். அதனால் தான் கடன்தன்மையை சீரமைப்பதும் அவசியம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நமது குடும்பத்தில் காணப்படும் வரவு-செலவு போல தான் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியும், கடன் தன்மையும்…

(தரவுகள் பெறப்பட்ட தளங்கள்: World Bank, IMF, Macro Trends & Trading Economics)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

     

கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும்

கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் 

India’s CPI – Retail Inflation and Unemployment Rate (CMIE Data) – August 2022

நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) 7 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது. 

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவாக 8.28 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. கிராமப்புறங்களை காட்டிலும் நகரத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து 9.57 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம், சந்தை எதிர்பார்த்த அளவை காட்டிலும் சிறிது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் 6.75 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம், ஆகஸ்ட் மாதத்தில் 7.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாமிசம் மற்றும் மீன் பொருட்களின் விலை(CPI)  206 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 192 சதவீதமும், மசாலா பொருட்களின் பணவீக்க விகிதம் 194 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

காய்கறி மற்றும் பழங்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் உயர்ந்ததற்கான காரணியாக உள்ளது. இருப்பினும் எரிபொருட்களின் விலை சற்று தணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 11.8 சதவீதமாக இருந்த எரிபொருட்களின் பணவீக்க விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதம் 10.78 சதவீதமாக குறைந்துள்ளது. 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது. வீட்டுமனை 10 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.60 சதவீதமும், சுகாதாரம் 6 சதவீதமும் மற்றும் கல்வி 4 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. 

நாட்டின் பணவீக்க விகிதம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, மேம்படுத்தப்படாத உட்கட்டமைப்பு, உணவுப்பொருட்களை சந்தைக்கு குறித்த நேரத்தில் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் மற்றும் அதிக நிதி பற்றாக்குறை ஆகியவை உள்ளது.

2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.86 சதவீதமாக இருந்துள்ளது. இது நகர்ப்புறங்களில் 8.64 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.04 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது. படிப்படியாக குறைந்து வந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை 2022ல் 6.83 சதவீதமாக இருந்தது. இது நகர்ப்புறங்களில் 8.22 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.17 சதவீதமாகவும் இருந்துள்ளது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்து காணப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

நாட்டில் அதிகபட்ச வேலைவாய்ப்பின்மை விகிதம்(CMIE Data) காணப்படும் மாநிலங்களாக அரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு உள்ளன. இதற்கடுத்தாற் போல ஜார்கண்ட், திரிபுரா, பீகார் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் பணவீக்க விகிதம் 7.2 சதவீதமாகவும், தெலுங்கானா 6.9 சதவீதம், கேரளா 6.1 சதவீதம், ஆந்திரா 6 சதவீதம் மற்றும் கர்நாடகா 3.5 சதவீதமாகவும் உள்ளது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

Tamilnad Mercantile Bank(TMB) in Equity IPO

வங்கி மற்றும் நிதிச்சேவையில் நூறு வருடத்திற்கு மேலான அனுபவம் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஒரு வழியாக பங்குச்சந்தைக்கு தயாராகி விட்டது. கடந்த 1921ம் ஆண்டு தமிழக நாடார் சமூகத்தினரால் தொழில் சார்ந்த நிதி சேவைகளுக்காக தொடங்கப்பட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. துவக்கத்தில் ‘நாடார் வங்கி’ என அழைக்கப்பட்ட இவ்வங்கி பின்னர் வணிக மேம்பாட்டின் காரணமாக, ‘தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வங்கிக்கு, நாடு முழுவதும் 509 கிளைகளும், 12 பெரும் அலுவலகங்களும்(Regional offices) உள்ளன. கடந்த 2010 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாட்டின் தனியார் வங்கிகளில் மிக சிறப்பாகவும், வேகமாக வளரும் வங்கியாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சொல்லப்பட்டது. 

1937ம் ஆண்டு இலங்கையில் ஒரு வங்கிக்கிளையை துவக்கியிருந்தாலும், பின்னர் அந்த கிளையை மூடிவிட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. வங்கி கிளைகளில் முதன்முறையாக கணினிமயமாக்கலை ஏற்படுத்திய தனியார் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(1983ம் வருடம்) தான். இன்று அனைத்து கிளைகளும் முழுமையான கணினி தொழில்நுட்பத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் மென்பொருள் இன்போசிஸ்(Infosys) நிறுவனம் உருவாக்கியது என்பது கூடுதல் தகவல்.

தனியார் வங்கிகளில் அன்னிய செலாவணியை பெறுவதில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முதலிடத்தில் உள்ளது. 2019ம் நிதியாண்டில் இவ்வங்கி சுமார் 15,726 கோடி ரூபாய் மதிப்பில் அன்னிய செலாவணி வர்த்தகத்தை புரிந்துள்ளது. மாநிலத்தில் மட்டுமே இயங்கும் வங்கி போல தோற்றமளிக்கும் இவ்வங்கி உலகம் முழுவதும் எச்.டி.எப்.சி. மற்றும் ஐ.டி.பி.ஐ. வங்கிகளுடன் இணைந்து வங்கி சேவையை பகிர்ந்துள்ளது.

2021ம் நிதியாண்டில் வங்கியின் வருவாய் 530 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 4,253 கோடி ரூபாய். நிகர லாபமாக வங்கி 995 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. 2022ம் ஆண்டின் முடிவில் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 52,858 கோடி (7.04 பில்லியன் டாலர்கள்). வங்கிகளில் இணைய வழியிலான வைப்பு நிதி கணக்கு(Deposit) துவங்கும் சேவையை நாட்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது இவ்வங்கியே. 

வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கே.வி. ராமமூர்த்தி உள்ளார். கடந்த காலங்களில் சில சர்ச்சைகளையும், பங்குச்சந்தையில் நுழைய முடக்கங்களையும் மெர்கன்டைல் வங்கி சந்தித்திருந்தது. கடந்த 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஒரு வழியாக பங்குச்சந்தை நுழைவுக்கான விண்ணப்பத்தை செபியிடம்(SEBI) சமர்ப்பித்தது. நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் இதற்கான ஒப்புதலும் பெற்றது.

வரக்கூடிய செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை பங்குகளை வழங்க ஐ.பி.ஓ. வை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு 10 ரூபாயாகவும், ஐ.பி.ஓ.வில் பங்கு ஒன்றின் விலை ரூ.500 – ரூ.525 என்ற அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 28 பங்குகளும்( 1 Lot), அதிகபட்சமாக 364 பங்குகளும்(13 Lots) வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எதிர்கால மூலதன தேவைகளுக்காக பங்கு முதலீட்டை பெற(Initial Public offer) உள்ளதாக வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.பி.ஓ.வில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் பங்களிப்பு முறையே தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள்(QIB) 75 சதவீதத்திற்கு மிகாமல், உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்(HNI) 15 சதவீதத்திற்கு மிகாமல் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் – தனிநபர்கள்(Retail investors) 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொதுவாக ஐ.பி.ஓ.வில் அறிமுகமாகும் நிறுவனங்களின் நிதி விவரங்களை அவ்வளவு எளிதில் பகுப்பாய்வு செய்ய முடியாது. சந்தைக்கு வந்து குறைந்தபட்சம் ஐந்து வருடங்களை கடந்த பின்பு தான், அவற்றின் நிதி அறிக்கைகளை நம்மால் அடிப்படை பகுப்பாய்வுக்கு(Analysis) உட்படுத்த முடியும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை 

India’s Balance of Trade – Trade Deficit July 2022

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜூலை மாதத்தின் முடிவில் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. நாட்டின் இறக்குமதி 43 சதவீதம் அதிகரித்தும், ஏற்றுமதி 2.5 சதவீதம் அதிகரித்தும் காணப்படுகிறது. ஏற்றுமதியின் அளவு 66.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி அளவு 36.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாவும் இருந்துள்ளது.

பொதுவாக, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியே வர்த்தக பற்றாக்குறையாக சொல்லப்படுகிறது. கனிம எரிபொருட்கள், எண்ணெய், இரும்பு மற்றும் எஃகு, முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், நகைகள் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் இறக்குமதியாக கொண்டிருக்கிறோம். ஏற்றுமதியில் பெட்ரோலிய பொருட்கள், ஆபரணங்கள், வாகனங்கள், தானியங்கள், இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் ரசாயனங்களை அதிகமாக கொண்டுள்ளோம்.

இறக்குமதியில் நாம் பெரும்பாலும் சீனாவிடமிருந்து தான் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுகிறோம். 2021ம் ஆண்டில் நாட்டின் இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு 16 சதவீதமாகவும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து 7.6 சதவீதமும் மற்றும் அமெரிக்காவில் 7.3 சதவீதத்தையும் கொண்டுள்ளோம். சீனாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 87.50 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனாவிடமிருந்து மின் மற்றும் மின்னணு உபகரணங்கள், இயந்திரங்கள், கொதிகலன்கள், அணு உலை, ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் உரங்களை பெறுகிறோம்.

ஏற்றுமதியில் நாம் அமெரிக்காவிற்கு அதிகமாக அனுப்பி கொண்டிருக்கிறோம். நாட்டின் ஏற்றுமதி பங்களிப்பில் அமெரிக்கா 18 சதவீதம், ஐக்கிய அரபு நாடு 6.5 சதவீதம் மற்றும் சீனா 5.9 சதவீதமாக இருந்துள்ளது. முத்துக்கள் விலையுயர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், மருந்துகள் மற்றும் துணிமணிகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி 121 பில்லியன் அமெரிக்க டாலர்களும், இறக்குமதி 190 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. இது கடந்த வருடத்தின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில், ஏற்றுமதி 26.82 சதவீதமும், இறக்குமதி 49.76 சதவீதமுமாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதியின் அளவு உயர்ந்து வருவது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா 2022 –  அடுத்து என்ன ?

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா 2022 –  அடுத்து என்ன ?

US enters into Technical Recession – Things to know

ஜூன் மாதத்தில் வல்லரசான அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது வருடங்களில் இல்லாத அளவாக கருதப்படுகிறது. எரிபொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்ததால் சொல்லப்பட்ட பணவீக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. 

எரிவாயு (Gasoline) விலை 60 சதவீதம் உயர்ந்தும், எரிபொருட்களின் எண்ணெய்(Fuel oil) 99 சதவீதமும், மின்சாரம் 14 சதவீதம் என்ற அளவிலும் ஜூன் மாதத்தில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் 10.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 

நடப்பாண்டின் முதலாம் காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(Q1 GDP 2022: -1.6 %) ஆக இருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் (-0.9) சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பது உறுதியாகியுள்ளது.

2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு மீண்டும் மந்தநிலைக்கு அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்க நாட்டின் வளர்ச்சி 0.5 சதவீதமாக இருக்கும் என பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது  பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பொருளாதார மந்தநிலைக்கு காரணமாக வீட்டுமனை முதலீடும் குறைந்திருப்பது ஒரு காரணியாக சொல்லப்படுகிறது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், உக்ரைன்- ரசிய போர் இவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், நாட்டின் ஏற்றுமதி கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவு  வளர்ச்சியை பெற்றுள்ளது.

நடப்பு ஜூலை மாதம் நடைபெற்ற அமெரிக்க மத்திய வங்கி(US Fed) அறிக்கையில் வட்டி விகிதம் 75 புள்ளிகளாக அதிகரிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ச்சியாக நான்காவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மாத அறிக்கையின் படி, வட்டி விகிதம் 2.25 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை உள்ளது. 

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடப்பு நிதியாண்டில் மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். 2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் வட்டி விகிதம் 3.5% – 3.8% என்ற அளவில் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. 

எனவே அடுத்து வரும் மாதங்களில் மீண்டுமொரு வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கலாம். பணவீக்க அதிகரிப்பு மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய வட்டி விகித உயர்வு ஆகியவை தொழில் நிறுவனங்களின் வருவாயை பாதிக்கலாம். மக்களிடையே ஏற்பட்டுள்ள நுகர்வு தன்மை தேக்கம் மேலும் சில மாதங்கள் தொடரலாம். 

விநியோக சங்கிலியில்(Supply Chain) ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், உக்ரைன் – ரசிய போர் நீடிக்கும் வரை, உலக பொருளாதார மந்தநிலையை தொடர செய்யும். கொரோனா காலத்தில் சந்தையை மீட்டெடுக்க செய்யப்பட்ட அதிகப்படியான பொருளாதார ஊக்குவிப்பு, இப்போது பணவீக்க அதிகரிப்பில் காணப்படுகிறது. எனினும், இது பொருளாதாரவியலில் அடிப்படையான ஒன்று தான். 

வரக்கூடிய வாரங்களில் டாலருக்கு நிகரான மற்ற நாணயங்களின் மதிப்பு அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம். வட்டி விகித அதிகரிப்பின் தாக்கம் நிறுவனங்களின் வருவாயில் வெளிப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் அல்லது காலாண்டுகள் தேவைப்படலாம். நடப்பாண்டில் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் நல்ல வருவாயை அளித்த பங்குச்சந்தையாக இந்தோனேசிய சந்தையும், மோசமான இழப்பை ஏற்படுத்திய சந்தையாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் உள்ளன.

சொல்லப்பட்ட காலத்தில் இந்தோனேசிய ஜகார்த்தா குறியீடு 3 சதவீதமும், கடந்த ஒரு வருட காலத்தில் 13 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. இதுவே இந்திய நிப்டி 500 குறியீடு நடப்பு வருடத்தில் 5 சதவீத வீழ்ச்சியையும், கடந்த ஒரு வருடத்தில் 5 சதவீதம் ஏற்றமும் அடைந்துள்ளது.

2022ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் வளர்ந்த சந்தைகள் முறையே அமெரிக்க எஸ் & பி 500 (-18%), ஐரோப்பிய STXE (-14%), சீன CSI 500 (-14%) மற்றும் ஆஸ்திரேலிய ASX 200 (-9%) வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தை தற்போது ஏற்றம் பெற்று வந்தாலும், இதற்கான பொருளாதார காரணிகள் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. எனவே, நீண்டகாலம் முதலீடு செய்பவர்கள் இது சார்ந்த கவலையை விட்டு விடலாம். கடனில்லா(Debt Free) நல்ல நிறுவனங்களின் பங்குகளை ஆராய்ந்து சிறுகச்சிறுக முதலீடு செய்து வரலாம். குறுகிய காலத்தில் சந்தை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படும் நிலையில், பண இழப்பை தவிர்ப்பது நன்று.

தொடர்ச்சியாக இரு காலாண்டுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்தாலும், அவை பொருளாதார வீழ்ச்சியாக எடுத்து கொள்ளப்பட மாட்டாது என்ற விவாதமும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? ஜூலை 31, 2022 காலக்கெடு

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? ஜூலை 31, 2022 காலக்கெடு 

Income Tax Filing Returns – Deadline for AY 2022-23 (FY 2021-22)

2021-22ம் நிதியாண்டில் தனிநபர் ஒருவர் ஈட்டிய வருமானத்திற்கு 2022-23ம் மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 60 வயதுக்கு உட்பட்டவர்கள் சொல்லப்பட்ட நிதியாண்டில் ஒட்டுமொத்த வருமானமாக ரூ.2.50 லட்சத்திற்கு மிகும் போது, வரி தாக்கல் செய்வது அவசியம். 

2022-23ம் மதிப்பீட்டு ஆண்டில், இதுவரை(16-07-2022) 1.45 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி தாக்கல் தளத்தில் தங்களது பான் எண்ணை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 10.30 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது.

நடப்பில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு அரசின் இணையதளம்(Income Tax Portal) மட்டுமின்றி, சில மூன்றாம் தரப்பு தளங்களும் இந்த சேவையை வழங்குகின்றன. எனினும் வரி தாக்கல் செய்த பின், மின்னணு சரிபார்ப்பை(E-Verification) நிறைவு செய்வது அவசியமாகும். 

E-Verification ஐ நிறைவு செய்யும் நிலையில் மட்டுமே அது வரி தாக்கல் செய்ததாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். மேலே சொல்லப்பட்ட 1.45 கோடி பேர் வரி தாக்கல் செய்திருந்தாலும், இதுவரை 1.21 கோடி நபர்கள் மட்டுமே மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்துள்ளனர்.

2022-23ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான (2021-22ம் நிதியாண்டு) வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 31, 2022 என சொல்லப்பட்டுள்ளது. காலங்கடந்த வரி தாக்கலுக்கு அபராத கட்டணம் செலுத்த நேரிடும். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு மதிப்பீட்டு ஆண்டுகளில்(AY 2020-21, AY 2021-22) வரி தாக்கலுக்கான காலக்கெடு அந்த வருடத்தின் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக இரத்தக்கொடை தினம் இன்று – உங்களுக்கான நிதி பாடங்கள் என்ன ?

உலக இரத்தக்கொடை தினம் இன்று – உங்களுக்கான நிதி பாடங்கள் என்ன ?

Blood Donors Day – June 14 – Ready for your Personal Finance

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் 14ம் நாள், உலக இரத்தக்கொடை தினமாக சிறப்பிக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் கிடைக்கப்பெறும் பலன்கள் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் தான். இரத்த தானம் செய்வதன் மூலம் நமது இதயத்தை பாதுகாப்பது, புற்றுநோய் ஏற்படுவதை பெரும்பாலும் தவிர்ப்பது, இரும்பு சத்தினை கட்டுக்குள் வைத்திருப்பது, உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை மேம்படுத்துதல், உடல் எடையை சரியான முறையில் பராமரித்தல் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை குறைத்தல் போன்ற பல நன்மைகள் உண்டு.

நம்மிடம் உள்ள இரத்தத்தை நாம் சிறந்த முறையில் நிர்வகிப்பது போல, நாம் ஈட்டும் வருமானத்தையும் சிறப்பாக நிர்வகிக்க  கற்று கொண்டால், நாமும் செல்வந்தர்களை போன்று செல்வச்செழிப்புடன் வாழலாம். சரியான நிதித்திட்டமிடலை ஏற்படுத்துவதன் மூலம், பின்னாளில் மற்றவர்களின் நிதி ஆதாரத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லை. நம்மை ஆளும்(Governing) அரசையும் நாம் குறை கூற வேண்டிய நிலை இருக்காது.

நிதித்திட்டமிடலில் நாம் செய்ய வேண்டிய உடனடி வழிமுறைகள் இதோ…

  • நிதி பாதுகாப்பு:  நமக்கும், நமது குடும்பத்திற்கு தேவையான மருத்துவ காப்பீட்டை எடுத்து கொள்ளுதல், போதுமான டேர்ம் காப்பீட்டு தொகையை உறுதி செய்தல், விபத்து காப்பீட்டின் தேவையை அறிதல்.
  • உங்களது ‘ஆல் டைம் கிரெடிட் கார்டு’: அவசர கால நிதியை(Emergency Fund) ஏற்படுத்துதல், நிதி இலக்குகளை நிர்ணயித்து சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ளுதல். உங்களது நிதி இலக்குகள் குறுகிய காலம் முதல் நீண்டகாலம் வரை இருக்கலாம்.
  • தலைமுறைக்கான பெரும் செல்வம்: பங்கு முதலீட்டின் மூலம் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை ஏற்படுத்தலாம். ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது போல பங்குச்சந்தையிலும் நீண்டகாலத்தில் முதலீடு செய்து வருவதன் மூலம் பெரும் செல்வத்தை காணலாம். வெறுமனே நாள் வணிகத்தில் ஈடுபடுவதும், பங்குச்சந்தையை குறுகிய காலத்தில் அணுகுவதும் ஆபத்தான மற்றும் விரயமான ஒன்று.  
  • ‘உலக நாயகன்’ எனும் அஸெட் அலோகேஷன்(Asset Allocation): எந்தவொரு தனிப்பட்ட முதலீட்டு சாதனமும்(Investment product) எல்லா வருடமும் லாபத்தை மட்டுமே அளிக்காது. பொருளாதாரம் சரியில்லை என்றால், பங்குச்சந்தையும், ரியல் எஸ்டேட் துறையும் சுணக்கம் காணும். அதே வேளையில் தங்கம் போன்ற முதலீடுகள்(Hedging) ஏற்றத்தை பெறும். பொருளாதாரம் சீராகும் போது, தங்கத்தின் மீதான முதலீட்டு தேவை குறைந்து அவற்றின் வருவாயும் குறைந்து காணப்படும். ஆனால் நீண்டகாலத்தில் பெரும்பாலான சர்வதேச மற்றும் பொருளாதாரம் சார்ந்த முதலீடுகள் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை அளிக்கும். எனவே, எந்தவொரு முதலீட்டு சாதனத்திலும் அதன் எதிர்கால வருவாயை கணிக்க முற்படாமல், கலவையாக முதலீடு செய்து வருவதன் மூலம் கணிசமான வருவாய் விகிதத்தை நீண்டகாலத்தில் ஏற்படுத்தலாம்.
  • ரிஸ்க் புரொபைலிங்(Risk Profiling): சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த விழிப்புணர்வை நாம் எப்போதும் ஏற்படுத்தி கொள்வது அவசியம். நமக்கு தெரிந்த மற்றும் புரியக்கூடிய திட்டங்களில் மட்டும் முதலீடு செய்வது, புரியாத விஷயங்களை பற்றி, அதன் துறை சார்ந்த நபர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது, நம்மால் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய முடியும் மற்றும் எந்தளவு இழப்பை தாங்க கூடிய திறன் நமக்கு உண்டு என்பதனை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பணவளக்கலை சார்ந்த புத்தகங்களை படிப்பதன் மூலம், நாம் இவற்றை அறிந்து கொள்ளலாம். 

இளம்வயதில் உள்ள நல்ல வருமானம் ஈட்டும் ஒருவர், நிதி திட்டமிடலில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது – தனது ஓய்வுக்காலத்தில் ஓய்வூதியத்தை மட்டுமே கொண்டு வாழும் ஒருவர், பங்குச்சந்தையில் அதிக ரிஸ்க் எடுத்து லாபமீட்டலாம் என எண்ணுவது – இரண்டும் தவறு தான்.

      

நிதி சார்ந்த விழிப்புணர்வு அவசியம் !

சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ளுவதன் மூலம், நாம் மட்டுமில்லாமல் நமது நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் !

சிறு துளி பெருவெள்ளம் – உயிர்த்துளி இரத்த தானம் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம் – எப்படி ?

2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம் – எப்படி ?

India’s GDP in the Financial year 2021-22 – 8.7 Percent

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால், 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் (-6.6) சதவீத வீழ்ச்சியை  சந்தித்திருந்தது. 2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 20.1 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 8.4 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் 5.4 சதவீதம் மற்றும் நான்காம் காலாண்டில் 4.1 சதவீதமுமாக இருந்தது.

2020-21ம் நிதியாண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காணும் போது, 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்துள்ளது. இருப்பினும் இந்த வளர்ச்சி, பொருளாதார மந்தநிலையிலிருந்து மீட்கப்பட்ட வளர்ச்சியாகவே பொருளாதார வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. 

அதாவது கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை ஒப்பிடுகையில் இது மிகக்குறைந்த வளர்ச்சியாக அமைந்துள்ளது. 2020ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு சுமார் 2.62 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் இது 2.32 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதார மதிப்பில்(GVA) சேவை துறை 54 சதவீதமும், விவசாயம் 20 சதவீதமும் மற்றும் தொழிற்துறை 26 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில், விவசாயத்துறை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

2021-22ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதமாக சொல்லப்பட்ட நிலையில், இது சந்தை எதிர்பார்த்த அளவினை எட்டியுள்ளது. நடப்பு 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) 2022 – சிறு பார்வை

நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) 2022 – சிறு பார்வை 

India’s rising Retail Inflation 2022 – Economy Insights

நாட்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த எட்டு வருடங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக 7.79 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது கவனிக்கத்தக்கது. ஏப்ரல் மாத பணவீக்கம், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த அளவை காட்டிலும் அதிகமாக சென்றுள்ளது.

உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், பணவீக்க விகிதம் அதிகரித்து வந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 17.28 சதவீதமும், காய்கறிகள் 15.41 சதவீதமும் உயர்ந்துள்ளது. இது போல மசாலா பொருட்களின்(Spices) விலை எதிர்பாராத விதமாக 10.56 சதவீதம் என அதிகரித்து காணப்படுகிறது.

பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக பணவீக்க விகிதம், இரண்டு சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கடந்த நான்கு மாதங்களாக இந்த இலக்கை கடந்து தான் பணவீக்க விகிதம் இருந்துள்ளது. 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதத்தில்(Consumer Price Index) உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக உள்ளது. இதற்கடுத்தாற் போல் வீட்டுமனை 10.07 சதவீத பங்களிப்பையும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.59 சதவீத பங்களிப்பையும், சுகாதாரம் 5.89 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதமாக உள்ளது.

பொதுவாக எரிசக்தியில் இறக்குமதியை சார்ந்து இருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, உட்கட்டமைப்பு சார்ந்த மேம்பாடு நிகழாதிருத்தல், உணவுப்பொருட்கள் விநியோக சங்கிலியில் அத்தியாவசியமான பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் மற்றும் நிதி பற்றாக்குறை ஆகியவை நாட்டின் பணவீக்க விகித மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

இதற்கு முன்பு சில்லரை விலை பணவீக்கம் அதிகமாக காணப்பட்ட காலமாக 2013ம் வருடத்தின் நவம்பர் மாதம் இருந்துள்ளது. சொல்லப்பட்ட வருடத்தின் மே மாதத்தில் 9.38 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து நவம்பர் மாதத்தில் 12.17 சதவீதமாக முடிவடைந்தது. 2013ம் ஆண்டு முதல் சில்லரை விலை பணவீக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, மொத்த விலை(Wholesale price index -WPI) அடிப்படையில் தான் நாட்டின் பணவீக்கம் கணக்கிடப்பட்டு வந்தது.

india-inflation-cpi-5 yrs - april - 2022

நடப்பில் மொத்த விலை பணவீக்கம் மற்றும் சில்லரை விலை பணவீக்கம் என இரு கணக்கீடுகளும் இருக்கும் நிலையில், சில்லரை விலை பணவீக்க விகிதம் தான் பொருளாதார முன்னுதாரணத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. 

ஒரு நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் போது, வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது பொருளாதாரத்தின் அடிப்படை நிகழ்வு. அதாவது உயரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படும். இது தொழில் சார்ந்த பங்குச்சந்தைக்கு பாதகமாகவும், வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு சற்று சாதகமாகவும் அமையும். எப்போதெல்லாம் அரசு கடன் பத்திரங்களின் வருவாய்(தேவை) குறைகிறதோ, அப்போது வங்கி டெபாசிட்க்கான வருவாய் அதிகரித்துள்ளது எனலாம்.  

2013-14ம் ஆண்டு காலத்தில் கடனுக்கான வங்கி வட்டி விகிதம் பத்து சதவீதத்திற்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வட்டி விகிதம் ஒன்பது சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. 2013ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்திற்கு அரசின் கடன்(Debt to GDP) 67 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பில் இது 74 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி-கடன் விகிதம் சற்று குறைவாக இருப்பது சாதகமான ஒன்று.

இருப்பினும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஏப்ரல் 2022 கால நிலவரப்படி, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 20.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அளவு அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் இறக்குமதியில் கனிம எரிபொருட்கள், எண்ணெய், முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் நகைகளின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளது.

சீனா, சவுதி அரேபியா, ஈராக், இந்தோனேஷியா மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகளிடம் வர்த்தக பற்றாக்குறையும், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்(UAE), இங்கிலாந்து மற்றும் வியட்நாம் நாடுகளிடம் உபரியாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது.

மிதமான பணவீக்க விகிதம், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும். பணவாட்டத்தை(Deflation) காட்டிலும் பணவீக்கம் பெரும்பாலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது. அதே வேளையில், அதிகப்படியான பணவீக்க விகிதம் சேமிப்பையும், வாங்கும் திறனையும் குறைத்து விடும். 

பணவீக்க விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, அதனை சமாளிக்கும் வகையில் வருவாய் மற்றும் முதலீடுகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால், விலைவாசி உயர்வு பொதுவாக சந்தையில் போட்டியை மழுங்க செய்யும். இதன் மூலம் முதலீட்டின் அளவும் குறைந்து, பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்த நேரிடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

  

எகிறும் விலைவாசி உயர்வு – நாட்டின் மார்ச் மாத பணவீக்கம் 6.95 சதவீதம்

எகிறும் விலைவாசி உயர்வு – நாட்டின் மார்ச் மாத பணவீக்கம் 6.95 சதவீதம்

India’s Retail Inflation to 6.95 Percent – March 2022

உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டுறவில் உள்ள நாடுகள், மார்ச் மாதம் முதல் தான் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் 8.5 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

தற்போது சொல்லப்பட்ட அமெரிக்க பணவீக்க விகிதம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வாகும். எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களில் ஏற்பட்ட விலை மாற்றமும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. 

ஏற்கனவே 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, உலக நாடுகளிடையே பொருட்கள் மற்றும் சேவை விநியோக சங்கிலியில் இடையூறு(Supply chain Disruption) ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் தீர்க்கப்படவில்லை.

இன்று(12-04-2022) இந்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால்(MOSPI) வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டின் சில்லரை விலை (நுகர்வோர்) பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக இருந்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக சொல்லப்படுகிறது.

மார்ச் மாதத்தில் சொல்லப்பட்ட பணவீக்கம், சந்தை மதிப்பீட்டை தாண்டிய அளவாக தற்போது உள்ளது. 6.35 சதவீதமாக சில்லரை விலை பணவீக்கம் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், மார்ச் மாத முடிவில் 6.95 சதவீதமாக இருந்துள்ளது.

உணவு பொருட்களின் விலை தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக உயர்ந்து வந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 18.79 சதவீதமும், காய்கறிகள் 11.64 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் வகைகள் 9.63 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 7.52 சதவீதமாகவும் விலை உயர்ந்துள்ளது. 

பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால பணவீக்க இலக்கு 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையில் இருக்கும் போது, தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக சில்லரை விலை பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேலாக இருப்பது கவனிக்கத்தக்கது.

உயர்ந்து வரும் எரிபொருட்களின் விலையால் ஏப்ரல் மாத பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. நாட்டின் பணவீக்க விகிதத்தில் உணவுப்பொருட்களின்(Food and Beverages) பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக உள்ளது. 

எகிறும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வரக்கூடிய காலங்களில் பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com