Tag Archives: tmb ipo

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

Tamilnad Mercantile Bank(TMB) in Equity IPO

வங்கி மற்றும் நிதிச்சேவையில் நூறு வருடத்திற்கு மேலான அனுபவம் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஒரு வழியாக பங்குச்சந்தைக்கு தயாராகி விட்டது. கடந்த 1921ம் ஆண்டு தமிழக நாடார் சமூகத்தினரால் தொழில் சார்ந்த நிதி சேவைகளுக்காக தொடங்கப்பட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. துவக்கத்தில் ‘நாடார் வங்கி’ என அழைக்கப்பட்ட இவ்வங்கி பின்னர் வணிக மேம்பாட்டின் காரணமாக, ‘தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வங்கிக்கு, நாடு முழுவதும் 509 கிளைகளும், 12 பெரும் அலுவலகங்களும்(Regional offices) உள்ளன. கடந்த 2010 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாட்டின் தனியார் வங்கிகளில் மிக சிறப்பாகவும், வேகமாக வளரும் வங்கியாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சொல்லப்பட்டது. 

1937ம் ஆண்டு இலங்கையில் ஒரு வங்கிக்கிளையை துவக்கியிருந்தாலும், பின்னர் அந்த கிளையை மூடிவிட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. வங்கி கிளைகளில் முதன்முறையாக கணினிமயமாக்கலை ஏற்படுத்திய தனியார் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(1983ம் வருடம்) தான். இன்று அனைத்து கிளைகளும் முழுமையான கணினி தொழில்நுட்பத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் மென்பொருள் இன்போசிஸ்(Infosys) நிறுவனம் உருவாக்கியது என்பது கூடுதல் தகவல்.

தனியார் வங்கிகளில் அன்னிய செலாவணியை பெறுவதில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முதலிடத்தில் உள்ளது. 2019ம் நிதியாண்டில் இவ்வங்கி சுமார் 15,726 கோடி ரூபாய் மதிப்பில் அன்னிய செலாவணி வர்த்தகத்தை புரிந்துள்ளது. மாநிலத்தில் மட்டுமே இயங்கும் வங்கி போல தோற்றமளிக்கும் இவ்வங்கி உலகம் முழுவதும் எச்.டி.எப்.சி. மற்றும் ஐ.டி.பி.ஐ. வங்கிகளுடன் இணைந்து வங்கி சேவையை பகிர்ந்துள்ளது.

2021ம் நிதியாண்டில் வங்கியின் வருவாய் 530 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 4,253 கோடி ரூபாய். நிகர லாபமாக வங்கி 995 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. 2022ம் ஆண்டின் முடிவில் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 52,858 கோடி (7.04 பில்லியன் டாலர்கள்). வங்கிகளில் இணைய வழியிலான வைப்பு நிதி கணக்கு(Deposit) துவங்கும் சேவையை நாட்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது இவ்வங்கியே. 

வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கே.வி. ராமமூர்த்தி உள்ளார். கடந்த காலங்களில் சில சர்ச்சைகளையும், பங்குச்சந்தையில் நுழைய முடக்கங்களையும் மெர்கன்டைல் வங்கி சந்தித்திருந்தது. கடந்த 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஒரு வழியாக பங்குச்சந்தை நுழைவுக்கான விண்ணப்பத்தை செபியிடம்(SEBI) சமர்ப்பித்தது. நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் இதற்கான ஒப்புதலும் பெற்றது.

வரக்கூடிய செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை பங்குகளை வழங்க ஐ.பி.ஓ. வை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு 10 ரூபாயாகவும், ஐ.பி.ஓ.வில் பங்கு ஒன்றின் விலை ரூ.500 – ரூ.525 என்ற அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 28 பங்குகளும்( 1 Lot), அதிகபட்சமாக 364 பங்குகளும்(13 Lots) வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எதிர்கால மூலதன தேவைகளுக்காக பங்கு முதலீட்டை பெற(Initial Public offer) உள்ளதாக வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.பி.ஓ.வில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் பங்களிப்பு முறையே தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள்(QIB) 75 சதவீதத்திற்கு மிகாமல், உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்(HNI) 15 சதவீதத்திற்கு மிகாமல் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் – தனிநபர்கள்(Retail investors) 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொதுவாக ஐ.பி.ஓ.வில் அறிமுகமாகும் நிறுவனங்களின் நிதி விவரங்களை அவ்வளவு எளிதில் பகுப்பாய்வு செய்ய முடியாது. சந்தைக்கு வந்து குறைந்தபட்சம் ஐந்து வருடங்களை கடந்த பின்பு தான், அவற்றின் நிதி அறிக்கைகளை நம்மால் அடிப்படை பகுப்பாய்வுக்கு(Analysis) உட்படுத்த முடியும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com