Tag Archives: exports

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை 

India’s Balance of Trade – Trade Deficit July 2022

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜூலை மாதத்தின் முடிவில் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. நாட்டின் இறக்குமதி 43 சதவீதம் அதிகரித்தும், ஏற்றுமதி 2.5 சதவீதம் அதிகரித்தும் காணப்படுகிறது. ஏற்றுமதியின் அளவு 66.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி அளவு 36.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாவும் இருந்துள்ளது.

பொதுவாக, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியே வர்த்தக பற்றாக்குறையாக சொல்லப்படுகிறது. கனிம எரிபொருட்கள், எண்ணெய், இரும்பு மற்றும் எஃகு, முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், நகைகள் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் இறக்குமதியாக கொண்டிருக்கிறோம். ஏற்றுமதியில் பெட்ரோலிய பொருட்கள், ஆபரணங்கள், வாகனங்கள், தானியங்கள், இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் ரசாயனங்களை அதிகமாக கொண்டுள்ளோம்.

இறக்குமதியில் நாம் பெரும்பாலும் சீனாவிடமிருந்து தான் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுகிறோம். 2021ம் ஆண்டில் நாட்டின் இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு 16 சதவீதமாகவும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து 7.6 சதவீதமும் மற்றும் அமெரிக்காவில் 7.3 சதவீதத்தையும் கொண்டுள்ளோம். சீனாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 87.50 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனாவிடமிருந்து மின் மற்றும் மின்னணு உபகரணங்கள், இயந்திரங்கள், கொதிகலன்கள், அணு உலை, ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் உரங்களை பெறுகிறோம்.

ஏற்றுமதியில் நாம் அமெரிக்காவிற்கு அதிகமாக அனுப்பி கொண்டிருக்கிறோம். நாட்டின் ஏற்றுமதி பங்களிப்பில் அமெரிக்கா 18 சதவீதம், ஐக்கிய அரபு நாடு 6.5 சதவீதம் மற்றும் சீனா 5.9 சதவீதமாக இருந்துள்ளது. முத்துக்கள் விலையுயர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், மருந்துகள் மற்றும் துணிமணிகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி 121 பில்லியன் அமெரிக்க டாலர்களும், இறக்குமதி 190 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. இது கடந்த வருடத்தின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில், ஏற்றுமதி 26.82 சதவீதமும், இறக்குமதி 49.76 சதவீதமுமாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதியின் அளவு உயர்ந்து வருவது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com