எகிறும் விலைவாசி உயர்வு – நாட்டின் மார்ச் மாத பணவீக்கம் 6.95 சதவீதம்
India’s Retail Inflation to 6.95 Percent – March 2022
உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டுறவில் உள்ள நாடுகள், மார்ச் மாதம் முதல் தான் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் 8.5 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.
தற்போது சொல்லப்பட்ட அமெரிக்க பணவீக்க விகிதம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வாகும். எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களில் ஏற்பட்ட விலை மாற்றமும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
ஏற்கனவே 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, உலக நாடுகளிடையே பொருட்கள் மற்றும் சேவை விநியோக சங்கிலியில் இடையூறு(Supply chain Disruption) ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் தீர்க்கப்படவில்லை.
இன்று(12-04-2022) இந்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால்(MOSPI) வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டின் சில்லரை விலை (நுகர்வோர்) பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக இருந்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக சொல்லப்படுகிறது.
மார்ச் மாதத்தில் சொல்லப்பட்ட பணவீக்கம், சந்தை மதிப்பீட்டை தாண்டிய அளவாக தற்போது உள்ளது. 6.35 சதவீதமாக சில்லரை விலை பணவீக்கம் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், மார்ச் மாத முடிவில் 6.95 சதவீதமாக இருந்துள்ளது.
உணவு பொருட்களின் விலை தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக உயர்ந்து வந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 18.79 சதவீதமும், காய்கறிகள் 11.64 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் வகைகள் 9.63 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 7.52 சதவீதமாகவும் விலை உயர்ந்துள்ளது.
பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால பணவீக்க இலக்கு 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையில் இருக்கும் போது, தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக சில்லரை விலை பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேலாக இருப்பது கவனிக்கத்தக்கது.
உயர்ந்து வரும் எரிபொருட்களின் விலையால் ஏப்ரல் மாத பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. நாட்டின் பணவீக்க விகிதத்தில் உணவுப்பொருட்களின்(Food and Beverages) பங்களிப்பு மட்டும் 45.86 சதவீதமாக உள்ளது.
எகிறும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வரக்கூடிய காலங்களில் பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை