Tag Archives: world gdp

உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ?

உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ?

Debt to GDP of Developed and Emerging Economies – 2022

உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 798 கோடி(17-10-2022) மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு தோராயமாக 96 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்(தரவு 2021). மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், பொருளாதார மதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்திலும், பொருளாதார மதிப்பில் ஐந்தாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு காலத்தில் உலக பொருளாதாரம் (-3.27) சதவீதமாக வீழ்ச்சியை கண்டிருந்தது. அதே வேளையில் ஊரடங்கு காலத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பொருளாதாரம், 2021ம் ஆண்டின் முடிவில் 5.80 சதவீத வளர்ச்சியுடன் முடிவடைந்தது. 2021ம் வருடத்தில் சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி, கடந்த 48 வருடங்களில் உலகம் காணாத வளர்ச்சியாக இருந்துள்ளது. அதாவது பள்ளத்தில் விழுந்த பூனை மீண்டெழுவது போல (Dead Cat Bounce).

தனிநபர் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில்(GDP per Capita) காணும் போது, கடந்த 1980 களில் 2500 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் 12,260 டாலர்களாக உயர்ந்துள்ளது. தற்போது நாம் உலகின் நான்காம் தொழில் புரட்சி காலத்தில்(Industrial Revolution) டிஜிட்டல் மயத்துடன் இணைந்துள்ளோம். பெருந்தொற்று காலத்திற்கு பிறகு வறுமை அதிகரிப்பு, பருவநிலை மாற்றங்கள், நாடுகளிடையே போர் மற்றும் விநியோக சங்கிலியில்(Supply Chain) சிக்கல் என ஒருபுறம் இருந்தாலும், அடுத்த 20-30 வருடங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளே அதிகம் என உலக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 

உலக பொருளாதார உற்பத்தி மதிப்பில்(GDP) அமெரிக்க நாட்டின் பங்களிப்பு மட்டும் 24 சதவீதமாகும். இதற்கடுத்தாற் போல் சீன நாட்டின் பங்களிப்பு 18.5 சதவீதம், ஜப்பான் 5 சதவீதம் மற்றும் ஜெர்மனியின் பங்களிப்பு 4.4 சதவீதமாக உள்ளது. உலகின் பொருளாதார உற்பத்தி பங்களிப்பு வரிசையில் முதல் 25 நாடுகளை தவிர்த்து பார்த்தால் மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பு, உலக பொருளாதார மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு அளவு கூட இல்லையென்பது கவனிக்கத்தக்கது. 

இதற்கு காரணமாக சொல்லப்படுவது வளர்ந்த மற்றும் விரைவாக வளரும் நாடுகளில் காணப்படும் அதிகபட்ச முதலீட்டு வாய்ப்பு, வேலைத்திறன் மற்றும் நுகர்வு தன்மை தான். பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் கடன்தன்மை அதிகரித்து வந்தாலும், அதற்கான வளர்ச்சியும் சாத்தியப்படுகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பாதுகாப்பு, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மேம்படுவதற்கான முதலீடுகள் அதிகமாக செலவு செய்யப்படுகிறது. 

2021ம் ஆண்டின் தரவின் படி, அமெரிக்காவின் பொருளாதார மதிப்பு 23 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனா மற்றும் ஜப்பான் முறையே 17.7 டிரில்லியன் டாலர்கள் மற்றும் 4.9 டிரில்லியன் டாலர்கள். தனிநபர் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளை காட்டிலும் சீனா மற்றும் இந்தியாவில் குறைவே. அமெரிக்காவில் தனிநபர் பொருளாதார வளர்ச்சி(GDP per Capita) 69,287 அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில், சீனாவில் 12,556 டாலர்களாகவும், இந்தியாவில் 2,277 டாலர்களாகவும் உள்ளது. 

டிசம்பர் 2021 முடிவில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்த பொருளாதார மதிப்பில்(Debt to GDP) 137 சதவீதமாக இருந்துள்ளது. சீனாவில் இது 67 சதவீதமாகவும், ஜப்பானில் 266 சதவீதமாகவும் உள்ளது. ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராச்சியம்(United Kingdom) முறையே 69% மற்றும் 96 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் கடன்தன்மை 74 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா போன்ற நாடுகளில் கடன்தன்மை நூறு சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. வளரும் நாடுகளில் மிகக்குறைவாக தென் கொரியாவில் 42 சதவீதமாக உள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களில் வளர்ந்த நாடுகளின் கடன்தன்மை அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) கூறியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலக நாடுகளின் மொத்த கடன் 226 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கடன் மட்டும் சுமார் 31 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது தனிநபர் ஒருவரின் சராசரி கடன் மட்டும் 93,400 அமெரிக்க டாலர்களாக அந்நாட்டில் உள்ளது. 

உலகளவில் ஜப்பான் நாட்டில் தான் அதன் பொருளாதார மதிப்பில் கடன்தன்மை அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் தேசிய கடன்தன்மை சுமார் 2.3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். ரஷ்யா, ஹாங்காங், வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் அதன் கடன்தன்மை குறைவாகவே காணப்படுகிறது. பொதுவாக வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடன் மூலம் முதலீடுகள் அதிகமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக அதன் வளர்ச்சியும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல் மற்றும் விநியோக சங்கிலியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதன் கடன் மூலம் பெறப்படும் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். அதனால் தான் கடன்தன்மையை சீரமைப்பதும் அவசியம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நமது குடும்பத்தில் காணப்படும் வரவு-செலவு போல தான் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியும், கடன் தன்மையும்…

(தரவுகள் பெறப்பட்ட தளங்கள்: World Bank, IMF, Macro Trends & Trading Economics)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com