Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

260 கோடி ரூபாய் முதலீடு, பங்குச்சந்தைக்கு தயாராகும் – திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி

260 கோடி ரூபாய் முதலீடு, பங்குச்சந்தைக்கு தயாராகும் – திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி 

Rs. 260 Crore Private Equity raised by Dindigul Thalappakatti Biriyani 

 

“ என்னை ஊக்குவிக்க பழமொழி அவசியமில்லை, ஊக்கமூட்டும் பேச்சும் தேவையில்லை. எனக்கு கொஞ்சம் பிரியாணி மட்டும் கொடுங்கள் “ – இது சாப்பாட்டின் புதுமொழி.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தமிழகத்தின் பிரியாணி கடைகளில் பிரபலம் என்றாலே அது திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி தான். 1957ம் ஆண்டு திரு. நாகசாமி அவர்களால் துவங்கப்பட்ட பிரியாணி உணவகம் தான் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி. நாவில் சுவை நுகர இன்று உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது தலப்பாக்கட்டி பிரியாணி(Dindigul Thalappakatti).

 

முன்னர் திண்டுக்கல்லில் ஆனந்த விலாஸ் பிரியாணி கடை என்று இயங்கி வந்த சிறு உணவகம் தான் பின்னாளில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி என்ற பிராண்டு உணவகமாக மாறியது. சீரக சம்பா அரிசியில் தயாராகும் பிரியாணி, அசைவத்திற்காக கன்னிவாடி மற்றும் பரமத்தி சந்தைகளில் இருந்து உயர் ரக கால்நடை இனங்கள் பெறப்படுகின்றன.

 

தற்போதைய நிலையில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணிக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்களும், தினமும் 5 லட்சம் பிரியாணிகளும் விற்பனையாகி வருகின்றன. ஆண்டு வருவாய் 300 கோடி ரூபாயாக சொல்லப்படும் இந்த நிறுவனம் தற்போது தொழிலை மேம்படுத்த முதலீடுகளை பெறுவதற்கு களமிறங்கியுள்ளது.

 

திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சேவையில் சி.எக்ஸ். பார்ட்னர்ஸ்(CX Partners) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் 260 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. சி.எக்ஸ். பார்ட்னர்ஸ் நிறுவனம் நிதித்துறை, மருத்துவம்(Health Care), நுகர்வோர் பொருட்கள் மற்றும் அதனை சார்ந்த சேவை, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறைகளில் முதலீடு செய்வதை தொழிலாக கொண்டுள்ளது.

 

சொல்லப்பட்ட முதலீட்டின் மூலம், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி நிறுவனத்தின் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அதிக தொழில்முறை வேலையாட்களை பணிக்கு அமர்த்துவது, உணவகத்தில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.

 

மேலும், நிறுவனம் சார்ந்த தகவல்கள் கூறப்பட்ட நிலையில் அடுத்த சில வருடங்களில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும் எனவும், இதன் மூலம் இந்திய பங்குச்சந்தைக்கு வருவதற்கான(Initial Public Offering – IPO) சாத்திய கூறுகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

நிறுவனங்களுக்கான வரி குறைப்பு அதன் லாபத்தை அதிகரித்துள்ளதா ?

நிறுவனங்களுக்கான வரி குறைப்பு அதன் லாபத்தை அதிகரித்துள்ளதா ?

Has the Corporate Tax cut for Companies increased its Profitability ?

 

கடந்த மாதம் நிதி அமைச்சகத்தின் சார்பில் இரண்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. முதலாவதாக நிறுவனங்களுக்கான வருமான வரி குறைப்பு(Corporate Tax) மற்றும் இரண்டாவதாக சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி.(GST) வரி விகித குறைப்பு சொல்லப்பட்டது.

 

இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையும் தொடர்ச்சியாக இரு நாட்கள் ஒரு சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றன. பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், முதலீடுகளை அதிகரிப்பது சார்பாகவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

30 சதவீதத்திற்கு மேலாக இருந்த நிறுவனங்களுக்கான வருமான வரி 22 சதவீதமாக சொல்லப்பட்டது. இதன் தாக்கம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் நிறுவனங்களிடம் தெரிந்ததா என்பதே பலருடைய கேள்வி. சில துறைகளில் உற்பத்தி அதிகமானதும், அதனை தொடர்ந்து பலவீனமான தேவை நுகர்வுகளும்(Weak Demand) இருந்ததே பெருவாரியான நிறுவனங்களின் விற்பனையை பாதித்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உற்பத்தி பொருட்கள் அதிக அளவில் இருந்தாலும், நம்மை போன்ற வளரும் நாட்டில் தேவை நுகர்வு குறைந்து வருவது சந்தைக்கு சாதகமாக இல்லை. பொதுவாக அரசின் சார்பில் மானிய தொகையும், வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டாலும், தனியார் முதலீடு, வேலை மற்றும் அதன் வளர்ச்சியே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

 

பொதுத்துறையில் மற்றும் அரசு மானியம் மூலம் கிடைக்கப்பெறும் வேலைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவை சேவை மூலம் உருவாக்கப்பட்ட திட்டமாக மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். இதுவே தனியார் சேவை என வரும் போது, அவற்றுக்கான பொருளாதார ஊக்குவிப்பு பெரும்பாலும் அரசாங்கத்திடம் இருந்தே பெறப்படுகிறது. 

 

வரி குறைப்பு, அரசின் கொள்கைகளில் மாற்றங்கள், நிலம் கையகப்படுத்தல் போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. இவற்றை சார்ந்தே தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியும் இருக்கும். வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் அரசு-தனியார் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. இருப்பினும், அரசாங்கம் தனது சேவையை சிறப்பாக செய்வதும், தனியார் நிறுவனங்கள் தனக்கான முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் தான் அவசியமான ஒன்று.

 

சமீபத்திய வரி குறைப்பு, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் எவ்வாறு இருந்துள்ளது என பார்ப்போம். 2019-20ம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன. யாரும் எதிர்பார்க்காத வகையில் நிறுவனங்களின் நிகர லாபங்கள் அதிகரித்துள்ளன. இதனை டி.வி.எஸ். மோட்டார், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இதர நிறுவனங்களின் முடிவுகளில் காணலாம்.

 

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனங்களின் விற்பனை பெரிய அளவில் இல்லையென்றாலும், இதர வருமானமும், வரி குறைப்பும் அதன் லாபத்தை சாதகமாக்கி உள்ளன. வாகனத்துறையில் உள்ள சில நிறுவனங்களின் லாபங்கள் பெரும்பாலும், வரி குறைப்பு நடவடிக்கையை சார்ந்தே உள்ளன. நுகர்வோர் பொருட்கள் துறையை சார்ந்த நிறுவனங்களிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

 

இதுவரை வெளிவந்த காலாண்டு முடிவுகளின் படி, பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கு முன்பு 30 சதவீதத்திற்கு மேல் வரியை செலுத்தியுள்ள நிலையில், செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் 20-22 சதவீத அளவில் வரியை செலுத்தியுள்ளதாக கூறியுள்ளன. இதன் தாக்கம் நிறுவனங்களின் லாபத்திலும் வந்துள்ளது. எதிர்பாராத வகையில், இது போன்ற பொருளாதார மந்த நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் லாபங்களை அதிகரித்து வருவது முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயமே.

 

நிறுவனங்கள் தங்கள் லாபங்களை எவ்வாறு கையாள போகிறது என்பது தான் நாம் காண வேண்டிய விஷயம். நிறுவனங்கள் தங்கள் லாபங்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். தாங்கள் பெற்ற கடனுக்கான தொகையை செலுத்த இதனை பயன்படுத்தி கொள்ளலாம். முதலீட்டாளர்களுக்கு கூடுதலான டிவிடெண்ட்(Dividend) தொகையை அறிவிக்கலாம். போனஸ் அல்லது நிறுவனமே பங்குகளை திரும்ப பெற(Buyback of Shares) ஏதேனும் அறிவிப்பை ஏற்படுத்தலாம்.

 

நிறுவனங்களின் தற்போதைய லாபம் ஒரு முதலீட்டாளராக நாம் பயனடையலாம். அதே வேளையில் நுகர்வு தன்மையை ஏற்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு, தனது வளர்ச்சியை பகிரும் போது தான் அது மென்மேலும் வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்போதைய வரி குறைப்பு நிறுவனங்களின் நிதி நிலைமையை தக்க வைக்க உதவும். 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

லாபத்தை பெருக்கிய ஜியோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள்

லாபத்தை பெருக்கிய ஜியோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள் 

Jio’s Net profit rises to 990 Crore – Reliance Industries Q2FY20 Results

இந்திய பங்குச்சந்தையில் ரூ. 8.97 லட்சம் கோடி சந்தை மதிப்பை கொண்டிருக்கும் முதல் நிறுவனம், திரு. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries). நேற்றைய (18-10-2019) வர்த்தகத்தில் முதன்முறையாக ரூ. 9 லட்சம் கோடி சந்தை மதிப்பை கடந்த நிறுவனமாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு அடுத்தாற் போல் உள்ள நிறுவனம் ரூ. 7.71 லட்சம் கோடி மதிப்பை கொண்டுள்ள டி.சி.எஸ்.(TCS) நிறுவனம்.

2019-20ம் நிதியாண்டுக்கான தனது இரண்டாம் காலாண்டு (ஜூலை-செப்டம்பர்) முடிவை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. செப்டம்பர் காலாண்டில்(Quarterly Results) நிறுவனத்தின் விற்பனை ரூ. 1,48,526 கோடியாக உள்ளது. செலவினங்கள் ரூ. 1,26,374 கோடியாகவும், இயக்க லாபம் 22,152 கோடி ரூபாயாகவும் உள்ளது.

இதர வருமானமாக செப்டம்பர் காலாண்டில் 3,668 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 15,055 கோடியாகவும், காலாண்டு நிகர லாபம் 11,262 கோடி ரூபாயாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு, கடந்த ஒரு வருடத்தில் 24 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) கடந்த ஐந்து வருடங்களில் 6 சதவீத அளவிலும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாகவும் உள்ளது.

இது போல லாப வளர்ச்சி, கடந்த ஐந்து வருடங்களில் 14 சதவீதமும், பத்து வருட காலத்தில் 10 சதவீதமும் இருந்துள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 2.5 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸின் துணை நிறுவனமான ஜியோ(JIO) இரண்டாம் காலாண்டு முடிவில் ரூ. 990 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. 

கடந்த 2018ம் வருடத்தின்  இதே காலத்துடன் ஒப்பிடும் போது, ஜியோவின் லாபம் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 681 கோடி ரூபாயாக உள்ளது. லாபம் அதிகரித்து இருந்தாலும், ஒரு பயனருக்கான சராசரி வருவாய்(ARPU) சரிந்துள்ளது.

355 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டிருக்கும் ஜியோ நிறுவனம், ஒரு பயனருக்கான சராசரி வருவாயை 120 ரூபாயாக கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் செப்டம்பர் காலாண்டில் சற்று குறைந்துள்ளது.

சில்லரை வணிகத்தின்(Retail Business) மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சேவையை பொறுத்தவரை இணைய பயன்பாடு அதன் வாடிக்கையாளர்களிடம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் பேசக்கூடிய நிமிடங்களின்(Voice Calls) எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

டி.வி.எஸ். மோட்டார் நிறுவன காலாண்டு நிகர லாபம் – ரூ. 255 கோடி

டி.வி.எஸ். மோட்டார் நிறுவன காலாண்டு நிகர லாபம் – ரூ. 255 கோடி

TVS Motor Company Net Profit rises to Rs. 255 Crore – Q2FY20

இந்தியாவின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவனமாகவும், தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு வாகன தயாரிப்பு நிறுவனம் தான் டி.வி.எஸ். நிறுவனம்(TVS Motor). 1978ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் நாட்டின் 2வது மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாளராகவும் திகழ்கின்றன.

தனது வாகனங்களை உலகளவில் 60 நாடுகளுக்கும் மேலாக ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகளை சந்தையில் வெளியிட்டிருந்தது. செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை ரூ. 4,348 கோடியாகவும், செலவினங்கள் 3,966 கோடி ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாபம் 382 கோடி ரூபாய் மற்றும் இயக்க லாப அளவு(Operating Profit Margin) கடந்த 10 காலாண்டுகளில் சராசரியாக 7-8 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக 81 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. தேய்மான செலவுகளாக 124 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் லாபம் 22 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இருப்பினும் விற்பனை 9.27 சதவீதம் குறைந்துள்ளது. தற்போதைய லாபத்திற்கு வருமான வரி குறைப்பும் ஒரு காரணமாக செயல்பட்டுள்ளது. ஜூன் 2019 காலாண்டில் நிறுவனம் செலுத்திய வரி 32 சதவீதமாக இருந்த நிலையில், தற்போதைய வரி செலுத்தப்பட்ட விகிதம் 18 சதவீதம் மட்டுமே.

வரிக்கு முந்தைய லாபம் 310 கோடி ரூபாயாகவும், இரண்டாம் காலாண்டின் நிகர லாபம்(Net Profit) 255 கோடி ரூபாயாகவும் உள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் பங்கு கடந்த ஒரு வருட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 17.50 சதவீத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஐந்து வருட காலத்தில் 14 சதவீதமும், கடந்த பத்து வருட காலத்தில் 30.80 சதவீதமும் வருவாயை(CAGR) தந்துள்ளது.

டி.வி.எஸ். நிறுவனத்தின் விற்பனை கடந்த ஐந்து வருடங்களில் 18 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. லாப வளர்ச்சி ஐந்து வருட காலத்தில் 21 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 37 சதவீதமாக இருந்துள்ளது.

இருப்பு நிலை அறிக்கையில் நிறுவனத்தின் கையிருப்பாக ரூ. 3,645 கோடி என கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20,900 கோடி ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம்(Debt-Equity) 0.40 என்ற அளவிலும், கடன் ரூ. 1,484 கோடி ரூபாயாகவும் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் செப்டம்பர் மாத ஏற்றுமதி 6.5 சதவீத வீழ்ச்சி

நாட்டின் செப்டம்பர் மாத ஏற்றுமதி 6.5 சதவீத வீழ்ச்சி 

India’s Exports fell to 6.5 Percent in September 2019

கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 10.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இது சந்தை எதிர்பார்த்த 12.85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை விட குறைவாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 14.95 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாட்டின் ஏற்றுமதி(Exports) செப்டம்பர் மாதத்தில் 6.57 சதவீதம் குறைந்து 26.03 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, நகைகள் மற்றும் கற்கள், பொறியியல் பொருட்கள்(Engineering Goods) மற்றும் எரிபொருட்கள் ஆகியவற்றில் காணப்பட்ட ஏற்றுமதி குறைவே ஆகும்.

நகைகள் மற்றும் கற்கள் 5.56 சதவீத வீழ்ச்சியும், பொறியியல் பொருட்கள் 6 சதவீதமும் மற்றும் எரிபொருட்களின் ஏற்றுமதி 18.6 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே நேரத்தில், மின்னணு பொருட்கள்(Electronic Goods) 33 சதவீதமும், மசாலா பொருட்கள் 28.44 சதவீதமும், மைக்கா, நிலக்கரி, தாதுக்கள் மற்றும் பிற பொருட்கள் 16.7 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதே போல, மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடி பொருட்களின் ஏற்றுமதி அளவும் 11 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளன. இறக்குமதியில் 13.85 சதவீதம் குறைந்து 36.89 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. நிலக்கரி, கோக்(Coke), பெட்ரோலியம், கச்சா எண்ணெய் பொருட்கள், முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள், கரிம மற்றும் கனிம ரசாயனங்களின் இறக்குமதி அளவு குறைந்துள்ளது.

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான காலத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Balance of Trade) 44.95 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இது கடந்த 2018-219ம் நிதியாண்டின் இதே காலத்தில் 60.16 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது கவனிக்கத்தக்கது.

நம் அண்டை நாடான சீனாவின் வர்த்தக உபரி(Trade Surplus) தொகை செப்டம்பர் மாதத்தில் 39.65 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. சீன நாட்டிற்கு வர்த்தக பற்றாக்குறை ஏதுமில்லை என்பதை நினைவில் கொள்ளவும். அங்கும் செப்டம்பர் மாத ஏற்றுமதி 3.2 சதவீதம் மற்றும் இறக்குமதி 8.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதன் ஏற்றுமதி அளவு அதிகமாகவும், இறக்குமதி செய்யும் அளவு குறைவாக இருப்பதும் அவசியமாகும். இருப்பினும், உள்நாட்டில் தேவை பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே ஏற்றுமதியில் கவனம் செலுத்துவது சிறந்தது. உள்நாட்டில் உற்பத்திக்கான வாய்ப்பு இருந்தும், ஒரு நாடு இறக்குமதி அளவை அதிகரிப்பது, அதன் வளர்ச்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 3.99 சதவீதம் – செப்டம்பர் 2019

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 3.99 சதவீதம் – செப்டம்பர் 2019

India’s CPI – Retail Inflation at 3.99 Percent in September 2019

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த 14 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக செப்டம்பர் மாதத்தில் உள்ளது. ஜூலை மாதத்தில் 3.28 சதவீதமாக இருந்த பணவீக்கம், கடந்த மாதத்தில் 3.99 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது சந்தை எதிர்பார்த்த 3.7 சதவீதம் என்ற அளவை காட்டிலும் சற்று அதிகமாகியுள்ளது.

உணவு பொருட்களில் காணப்பட்ட விலை உயர்வால், செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதத்தில் உணவு பொருட்களின் விலை 5.11 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்று வருடங்களில் காணப்பட்ட அதிகபட்ச சதவீதமாகும்.

காய்கறிகள் விலை 15.40 சதவீதமும், மாமிசம் மற்றும் முட்டையின் விலை 10.29 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 8.40 சதவீதமாகவும் உள்ளது. அதே வேளையில் சர்க்கரை மற்றும் இனிப்பு பொருட்களின் விலை 0.35 சதவீதம் குறைந்துள்ளது.

வீட்டுமனை(Housing Inflation) 4.75 சதவீதமும், துணிமணிகள் மற்றும் காலணிகள் விலை 0.96 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், எரிபொருட்களின் விலை 2.18 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கிராமப்புற சில்லரை விலை பணவீக்கம் 3.24 சதவீதமாகவும், நகர்புறத்தில் சில்லரை விலை பணவீக்கம் 4.78 சதவீதம் என்ற அளவிலும் காணப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் கிராமப்புற பணவீக்கம் 2.25 சதவீதம் மற்றும் நகர்புறத்தில் 4.49 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

நாட்டின் மொத்த விலை பணவீக்கம்(WPI Inflation) செப்டம்பர் மாதத்தில் 0.33 சதவீதமாக இருந்துள்ளது. நடப்பில் சொல்லப்பட்ட சில்லரை விலை பணவீக்கம், பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்கான 4 சதவீதம் என்ற அளவிற்குள் உள்ளது. இதனால் வரும் நாட்களில், வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வங்கி சேமிப்புக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பயன்படுத்துவது எப்படி ?

வங்கி சேமிப்புக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பயன்படுத்துவது எப்படி ?

How to use  Mutual Funds Schemes instead of Bank Savings or Deposits ?

கடந்த மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டது. நடப்பில் வங்கிகளுக்கான ரெப்போ விகிதம்(Repo Rate) 5.15 சதவீதமாக உள்ளது. இந்த வருடத்தில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் ஐந்து முறை குறைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின் (Bonds) தேவை அதிகரித்து அவற்றின் வட்டி விகிதமும் அதிகரிக்கும். இதே போல வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, கடன் பத்திரங்களின் தேவை குறைந்து அதனுடைய வட்டி குறையும். எனவே இந்த சூழ்நிலையை ஒருவர் கருத்தில் கொண்டு முதலீடு செய்தால், குறிப்பிடத்தக்க வட்டி வருவாயை பெறலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எஸ்.பி.ஐ. (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக குறைத்துள்ளது. வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் ஒரு வருடத்திற்கு 7 சதவீதத்திற்கு குறைவாகவும், ஐந்து வருட காலத்திற்கு 9 சதவீதத்திற்கு கீழாகவும் உள்ளது.

இது போன்ற காலத்தில், இதற்கு மாற்றாக பரஸ்பர நிதி (Mutual Funds) திட்டங்களை பயன்படுத்தலாம். பண பரிவர்த்தனைகளுக்கு ஒருவர் வங்கி சேமிப்பு கணக்கை சார்ந்திருந்தாலும், சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு வங்கிகளை காட்டிலும் சற்று கூடுதலான வட்டி வருவாயை கொடுக்கும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

லிக்விட் பண்டுகள் (Liquid Funds):

வங்கி சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் 4 சதவீதத்திற்கு குறைவான வட்டி விகிதத்திற்கு பதிலாக பரஸ்பர நிதிகளின் லிக்விட் பண்டுகளை(Liquid Funds) பயன்படுத்தலாம். இவற்றில் பணப்புழக்கமும் நன்றாக உள்ளது, ரிஸ்க் அதிகமில்லா முதலீடாக கருதப்படுகிறது. மேலும் வங்கி சேமிப்பு கணக்கை காட்டிலும், அதாவது ஆண்டுக்கு 6-7 சதவீத வருவாயை கொடுக்கும். லிக்விட் பண்டுகளை மிகவும் குறுகிய காலத்திற்கு(Alternative for Bank Savings Rate) பயன்படுத்தி கொள்ளலாம்.

எச்.டி.எப்.சி.(HDFC), நிப்பான் இந்தியா(Nippon India), ஆதித்ய பிர்லா, ஆக்ஸிஸ் போன்ற பரஸ்பர நிதி நிறுவனங்களில் லிக்விட் பண்டுகளின் முதலீடு எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த பண்டுகளில் முதலீடு செய்த தொகையை வெறும் இரண்டு நிமிடத்தில் நமது வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யும் வசதியும் உள்ளது. சில லிக்விட் திட்டத்தில் இலவச ஏ.டி.எம்.(ATM) கார்டு சேவையும், வரம்பற்ற பரிவர்த்தனைகளையும்(Unlimited Withdrawal Transaction) கிடைக்கப்பெறுகிறது.

கடன் சார்ந்த பண்டுகள் (Debt Funds):

ஒரு வருடம் முதல் ஐந்து வருட காலத்திற்கான முதலீட்டுக்கு பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திர திட்டங்களை(Debt Funds) தேர்ந்தெடுக்கலாம். இவற்றில் தற்போது 7-10 சதவீதம் வரை வட்டி வருவாய் அமைகிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக முதலீடு செய்யும் பட்சத்தில், வரி சலுகையும்(Indexation Benefit) உள்ளது. இது போன்ற வசதி வங்கி டெபாசிட்களில் கிடைப்பதில்லை. கால அளவுகளை கொண்ட கடன் பத்திர திட்டங்களை(Duration Funds), நமது இலக்குகளுக்கு தகுந்தாற் போல் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

கலப்பின பண்டுகள் (Hybrid Funds):

ஐந்து வருட கால இலக்குகளுக்கு ஒருவர் பரஸ்பர நிதிகளின் கலப்பு முதலீட்டு திட்டத்தினை (Hybrid Funds) தேர்ந்தெடுக்கலாம். இவற்றின் சராசரி வருமானம் 10-12 சதவீதமாக இருக்கும். கலப்பு முதலீடு என்பது பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும். இதன் மூலம் ஒருவர் தனது பணத்தை முழுமையாக பங்குகளில் முதலீடு செய்யாமல், கடன் பத்திரங்களின் வாய்ப்பையும் பயன்படுத்தலாம்.

முதலீட்டு பரவலாக்க பண்டுகள் (Asset Allocation Funds):

நீண்டகால இலக்குகள் மற்றும் தேவைகளை கொண்டுள்ளோர் பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் பங்குகளில் முதலீடு செய்யும் போது, நல்ல வருமானத்தை ஈட்டலாம். குறுகிய காலத்தில் பங்குகள் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டு இருப்பதால் பங்குகளை குறுகிய கால தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது. அதே வேளையில், பன்முக முதலீட்டையும் ஒருவர் பரிசீலிக்கலாம். பன்முக முதலீட்டின்(Asset Allocation) வாயிலாக ஒருவர் பங்கு, கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பிற தொழில்களில் முதலீட்டை பரவலாக்கலாம்.

வரி சேமிப்பு பண்டுகள் (Tax Savings – ELSS Mutual Funds):

வரி சேமிப்புக்கு மட்டுமே வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பை சார்ந்தவர்கள், ஒரு முறை பரஸ்பர நிதி வழங்கும் வரி சேமிப்பு பண்டுகளை(Tax Savings Mutual Funds) தேர்ந்தெடுக்கலாம். குறைந்த கால லாக்-இன்(Lock-in) வசதியை கொண்ட இது போன்ற பண்டுகளில் நீண்ட காலத்தில் வருமானமும் சற்று அதிகம்.

வங்கிகள் வழங்கும் சேமிப்பு  மற்றும் முதலீட்டு திட்டங்களை நாம் அறவே ஒதுக்க முடியாது. வங்கிகளை போல நிலையான அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம்(Fixed Returns) பரஸ்பர நிதிகளில் சொல்லப்படுவதில்லை. இருப்பினும், வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் சூழ்நிலையில் பரஸ்பர நிதி திட்டங்களை திறமையாக பயன்படுத்துவது  சாதகமான விஷயமே. எதிர்காலத்தில் வங்கி கணக்குக்கு மாற்றாக பரஸ்பர நிதிகளும் தினசரி பரிவர்த்தனைக்கான சேவையை வழங்க முன்வரலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக  மதுரை 

www.varthagamadurai.com

இந்திய வங்கிகள் நலம் தானா ?

இந்திய வங்கிகள் நலம் தானா ? 

Are Banks in India good ? Financial Crisis & Non Performing Assets

ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனத்தில் பிரச்சனை ஆரம்பித்து தற்போது பி.எம்.சி. வங்கி (PMC Bank) வரை நிதி சிக்கலை மட்டுமே கொண்டு நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வலுவிழந்து கொண்டிருக்கின்றன. இந்த சிக்கல் களையப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியுமா என்பது அனைவருடைய கேள்வியாக உள்ளது.

பொதுவாக ஒரு நாட்டில் வங்கித்துறை என்பது மக்களின் அசைய முடியாத நம்பிக்கையை கொண்டிருப்பதாகும். பொதுத்துறையை சேர்ந்த ஒரு உற்பத்தி அல்லது சேவை நிறுவனம் திவால் நிலைக்கு சென்றாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய சாமானியர்கள் வங்கிகள் மூடப்படும் நிலையை ஒருபோதும் நினைத்து பார்ப்பதில்லை.

அவ்வாறாக ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையும் வங்கியின் மீது உள்ளது. அதே வேளையில் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலையில், இந்த நிலைமை பலரின் நம்பிக்கையை குலைப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகள் (PSU Banks)  மட்டுமில்லாமல், தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின்(NBFC) வாராக்கடன் விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ரூ. 4500 கோடி முறைகேடு என சொல்லப்பட்ட பி.எம்.சி. வங்கியில் பெரும்பாலும் அதன் வங்கி வாடிக்கையாளர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக பாரத ரிசர்வ் வங்கி, முறைகேடு உள்ள வங்கிகளின் மீது நடவடிக்கை எடுத்து வந்தாலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து 1000 ரூபாய் மட்டுமே மாதந்தோறும் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. பின்பு இந்த விதி 10,000 மட்டுமே எனவும், அதற்கு பிறகு இதனை அதிகரித்து தற்போது மாதம் ரூ. 25,000 வரை தங்கள் வங்கிக்கணக்கிலிருந்து எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையளவில் வங்கி சேவை என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. பண மதிப்பிழப்பு(Demonetization) நடவடிக்கைக்கு பிறகு, வங்கி கணக்கு மற்றும் அதன் சேவை என்பது மறைமுகமாக ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலானோர் வங்கி சேவையை நம்பியிருக்கும் சூழ்நிலையில் வங்கிகளில் நடைபெறும் முறைகேடுக்கு வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவது மறுப்பதற்கில்லை.

வங்கி டெபாசிட்தாரர்களுக்கு பாரத ரிசர்வ் வங்கி முன்னுரிமை அளித்து வருவதாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். வங்கி பண பரிவர்த்தனையில் செயலிழப்பு ஏற்படும் போது, அதற்கு வங்கி சேவை காரணமாக இருக்கும் நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதெல்லாம் செய்திகளாக இருப்பினும், உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு பயனை தருமா என்பது சந்தேகமே. டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிப்பு என சொல்லப்பட்டாலும், அதன் பாதுகாப்பு நம் நாட்டில் உறுதி செய்யப்படவில்லை.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி(SBI) சேவையில் இணைய பரிவர்த்தனையின் போது, வாடிக்கையாளர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பாலும் பரிவர்த்தனை முடியாமல் வங்கி கணக்கில் பணம் மட்டும் பற்று வைக்கப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர் ஒருவர் மீண்டும் அந்த பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நிலைக்கு நேரம் மற்றும் பணத்தை ஒதுக்க வேண்டும்.

பிடிக்கப்பட்ட பணத்தை திரும்ப பெறுவதிலும் கால தாமதம் ஏற்படுகிறது. அப்படியிருக்கும் நிலையில், வங்கிகளிடம் இருந்து இழப்பீட்டு தொகை அவ்வளவு விரைவாக கிடைத்திடுமா என்பது கருத்துரையை பொறுத்தே உள்ளது. வாராக்கடன்களை தனியார் வங்கிகள் சில, அந்த தொகை இனி கிடைக்கப்பெறாது என நஷ்டத்தில் கணக்கை முடித்து கொண்டன. இதே பாணியில் தற்போது பொதுத்துறை வங்கிகளிலும் பணம் வராது என கணக்கு எழுதி கொண்டிருக்கின்றன.

கடந்த நான்கு வருடங்களில் இந்திய வங்கிகள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான வாராக்கடன் தொகை இனி வராது என கணக்கை முடித்து கொண்டன. இவற்றில் அதிகமான தொகையை கணக்கில் முடித்து கொண்டது பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ. வங்கி மட்டும் ரூ. 76,600 கோடி அளவில் வாராக்கடன் வராது என முடித்து கொண்டுள்ளன. 100 கோடி ரூபாய்க்கு மேலாக கடன் பெற்றவர்களில் 220 நபர்கள் திவாலாகி உள்ளனர்.

மோசமான கடன்களின்(Bad Loans) எண்ணிக்கையையும், அதற்கான தொகையும் வங்கிகள் குறைத்த வண்ணம் உள்ளன. வங்கிகள் இனி புதிய கடன்களுக்கு தயாராக உள்ளன. அரசும் அதற்கான தொகையை தயார் செய்த வண்ணம் உள்ளன. இனியாவது இது போன்ற பிரச்சனை அதிகப்படியாக நடைபெறாமல் இருக்க வேண்டும். எந்தவித பாகுபாடும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் சேவை நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ. 4,019 கோடி

இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ. 4,019 கோடி

Infosys Q2Fy20 Net profit to Rs. 4,019 Crore – Quarterly Results

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய பன்னாட்டு ஐ.டி. நிறுவனம் இன்போசிஸ்(Infosys). இந்த நிறுவனம் அதன் இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெள்ளிக்கிழமை அன்று (11-10-2019) சந்தையில் வெளியிட்டது. 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 22,629 கோடி ரூபாயாக உள்ளது.

நிறுவனத்தின் செலவினங்கள் 16,990 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம்(Operating Profit) ரூ. 5,639 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 626 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. ஆக இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் ரூ. 4,019 கோடி. வரிக்கு முந்தைய லாபம் 5,496 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த 12 மாதங்கள் அடிப்படையில் நிறுவனத்தின் நிகர லாபம் 15,500 கோடி ரூபாயாகவும், வருவாய் ரூ. 87,371 கோடியாகவும் உள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 10.52 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 7.45 சதவீதமாகவும் உள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கையில் கையிருப்பு தொகை(Reserves) 58,400 கோடி ரூபாயாக உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது நிறுவன வருவாய் 3.79 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே வேளையில் கடந்த வருட செப்டம்பர் மாத காலாண்டுடன் பார்க்கும் போது, 9.80 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2.21 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இயக்க லாப அளவு(Operating profit Margin) கடந்த ஒரு வருடத்தில் சராசரியாக 24 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தற்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.47 லட்சம் கோடியாக உள்ளது.

முதலீட்டு பங்கு மீதான வருவாய்(Return on Equity) கடந்த ஐந்து வருட கால அளவில் 24 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 25 சதவீதமும் உள்ளது. பங்கு முதலீட்டாளர்களுக்கு இது சாதகமான விஷயமும் கூட. நிறுவனத்திற்கு கடன் எதுவும் இல்லை. தற்போதைய கடன் பொறுப்புகளாக(Current Liabilities) ரூ. 19,211 கோடியும், சொத்துக்களாக 48,850 கோடி ரூபாயும் உள்ளது கவனிக்கத்தக்கது.

வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 258 மடங்குகளில் உள்ளது. அதாவது நிறுவனத்திற்கு ஏதேனும் கடன் இருந்தால், அந்த தொகையை போல 258 மடங்குகளில் சொத்து உள்ளதை குறிக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com