சிக்கலில் இந்திய ஐ.டி. நிறுவனம் இன்போசிஸ்
Indian Tech Firm Infosys trouble in Whistleblower Complaint
நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 3.27 லட்சம் கோடி ரூபாய். 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 82,675 கோடியாகவும், ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ. 15,404 கோடியாகவும் இருந்தது.
நிறுவனத்தின் கையிருப்பாக செப்டம்பர் காலாண்டு முடிவில் ரூ. 58,400 கோடி என இருப்பு நிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. டி.சி.எஸ்.(TCS) நிறுவனத்திற்கு அடுத்தாற் போல், மிகவும் கவுரமாக பார்க்கப்படும் நிறுவனம் தான் இன்போசிஸ்.
பொதுவாக பெரு நிறுவனங்கள் ஏதேனும் செய்திகள் அல்லது சிக்கலில் மாட்டி கொண்டால், அதன் தாக்கம் சந்தை முழுவதையும் தொற்றி கொள்ளும். இதனை நாம் டாட்டா, ரிலையன்ஸ், சன் பார்மா போன்ற பெரிய நிறுவனங்களிடம் காணலாம். முன்பு நிர்வாக குறைபாடு என குற்றம் சாட்டப்பட்ட்டிருந்த இன்போசிஸ் நிறுவனம், பின்னர் அந்த பிரச்சினையை களைந்து மீண்டு வந்தது.
தற்போது மீண்டும் ஒரு சிக்கலில் இன்போசிஸ் நிறுவனம், இந்த சமயம் சிக்கல் இன்போசிஸ் ஊழியர்களிடம் இருந்து துவங்கியுள்ளது. அவர்களின் குற்றசாட்டு, ‘ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) மற்றும் தலைமை நிதி அதிகாரி(CFO) இருவரும் பல காலாண்டுகளாக நெறிமுறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ‘ கூறியுள்ளனர்.
இந்த குற்றசாட்டை இன்போசிஸ் நிறுவனம் தனது புகார் பட்டியலில் பெற்றுள்ளது. மேலும் இதனை சந்தை அமைப்புகளிடமும்(Stock Exchange) நிறுவனம் சார்பில் சமர்ப்பித்துள்ளது. குற்றம் சாட்டியுள்ளவர்கள் எழுதிய இரண்டு பக்க கடிதத்தில், தாங்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எனவும், அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு தங்களிடம் மின்னஞ்சல் மற்றும் குரல் வழியிலான சான்றுகள் உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இயக்குனர்கள் மற்றும் தணிக்கையாளர்களிடம்(Audit) இருந்து தகவல்களை மறைக்க உயர் நிர்வாகம் சில ஊழியர்களை கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது. வெரிசோன்(Verizon), இன்டெல் மற்றும் கூட்டு முயற்சிகள்(Joint Ventures) போன்ற பெரிய ஒப்பந்தங்கள், ஏ.பி.என். அம்ரோ(ABN AMRO) கையகப்படுத்தல் போன்றவற்றில் நெறிமுறையற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக நேற்றைய அமெரிக்க நியூயார்க் சந்தையில்(NYSE) இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 12 சதவீதம் வீழ்ச்சி கண்டது. சந்தை துவங்கும் முன் நடைபெற்ற வர்த்தகத்தில் 18 சதவீதம் வரை இந்த பங்கு இறக்கம் கண்டது. இந்திய பங்குச்சந்தை நேற்று விடுமுறை தினம் என்பதால், இன்று (22-10-2019) வர்த்தகத்தின் போது, இன்போசிஸ் நிறுவன பங்கின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை