எச்சரிக்கை மணி – எகிறும் நாட்டின் விலைவாசி உயர்வு (பணவீக்கம்)
Quick Alert: India’s rising CPI – Retail Inflation in January 2020
நாட்டின் பங்குச்சந்தை மட்டுமல்ல, விலைவாசியும் உச்சத்தில் தான் உள்ளது. சில்லரை விலை பணவீக்க வரைபடத்தை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். கடந்த 2019ம் வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை (சில்லரை விலை) பணவீக்கம் 2.57 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது நடப்பாண்டின் ஜனவரி மாத பணவீக்கம் 7.59 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த வருடம் அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பர் 2019ல் 5.54 சதவீதமாகவும், டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாகவும் இருந்துள்ளது. விறுவிறு வேகத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) உயர்ந்து வருவது, நாட்டின் பொருளாதாரத்திற்கு தற்சமயத்தில் சாதகமாக அமையாது. ஏனெனில், தற்போது நாட்டில் நிலவி கொண்டிருப்பது ஒருவித தேக்கநிலை(Stagflation) எனலாம்.
அதாவது விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பு(GDP Growth) குறைவாக உள்ளது. மறுபுறம் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது கவலையளிக்கும் நிகழ்வாக உள்ளது. ஜனவரி மாதத்தின் முடிவில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை(Unemployment rate) விகிதம் 7.16 சதவீதமாக உள்ளது. இதில் பெருத்த ஏமாற்றம் என்னவென்றால், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 9.70 சதவீதம் என்ற உச்சத்தில் உள்ளது. அதே வேளையில் கிராமப்புற விகிதம் 6 சதவீதத்திற்கு அருகில் காணப்படுகிறது.
தற்போது சொல்லப்பட்ட 7.59 சதவீத பணவீக்கம், சந்தை எதிர்பார்த்த 7.4 சதவீதம் என்ற அளவை காட்டிலும் அதிகமாக உள்ளது. ஜனவரி 2019 மாத நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாக உள்ளது. இதுவரை உயர்ந்து வந்த உணவுப்பொருட்களின் விலை தணிந்து இருந்தாலும், எதிர்பாராத வகையில் எரிபொருட்களின் விலை, துணிமணி மற்றும் காலணிகள், பருப்பு வகைகள், பால், பழங்கள் மற்றும் தானியங்களின் விலை உயர்ந்துள்ளது.
ஒளி மற்றும் எரிபொருட்களின்(Light & Fuel) பணவீக்க விலை 3.7 சதவீதமும், பருப்பு வகைகள் 16.7 சதவீதம், தானியங்கள் 5.3 சதவீதம், பால் பொருட்கள் 5.6 சதவீதம் மற்றும் பழங்கள் 5.8 சதவீதமாக உள்ளன. காய்கறி மற்றும் மற்ற உணவுப்பொருட்களின் விலை சற்று குறைந்துள்ளது.
பொதுவாக நம் நாடு எரிசக்தியில் இறக்குமதியை நம்பியிருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தாக்கம், மோசமான சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் தற்போது நிலவும் நிதி பற்றாக்குறை ஆகியவை காரணமாக உணவுப்பொருட்களை சந்தைக்கு சரியான நேரத்தில் சேர்க்க முடிவதில்லை. இதனால் உணவு சார்ந்த பொருட்களின் விலை உயர்வு நிலையற்றதாக காணப்படுகிறது. இவற்றில் தீர்வு காணப்படும் போது, அது பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் மாற்றத்தை கொண்டு வரும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை