உயர்ந்து வரும் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – மார்ச் 2021
Rising Retail Inflation – Consumer Price Index India – March 2021
கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் பணவீக்கம், சில்லரை பணவீக்க விகித அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இதற்கு முன்பு மொத்த விலை பணவீக்க(Wholesale Price Index – WPI) அளவுகளை கொண்டு கணக்கிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சில்லரை விலை பணவீக்கம் 2012ம் ஆண்டில் 100 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் துவங்கப்பட்டது.
சில்லரை விலை பணவீக்க அளவு மார்ச் 2021 முடிவில் 156.8 புள்ளிகளாக இருந்துள்ளது. அதாவது நாட்டின் சில்லரை அல்லது நுகர்வோர் விலை பணவீக்க விகிதம்(CPI) கடந்த மாத இறுதியில் 5.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு ஜனவரி மாதத்தில் இது 4.06 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.
சந்தை எதிர்பார்த்த அளவுக்கு மேலாக தற்போதைய விலைவாசி விகிதம் இருந்துள்ளது. உணவுப்பொருட்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலையேற்றத்தால் மார்ச் மாதத்தில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. உணவு பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 3.87 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் முடிவில் 4.94 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.
பருப்பு வகைகளின் விலை 13 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்து 4.83 சதவீதமாக உள்ளது. எரிபொருட்களின் விலை 3.53 சதவீதத்திலிருந்து 4.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது போல துணிமணிகள் மற்றும் காலணிகள் 4.21 சதவீதத்திலிருந்து 4.41 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டுமனை மற்றும் இதர பிரிவுகளின் சேவைகள் சற்று உயர்ந்திருந்தாலும், புகையிலை பொருட்களின் விலை மார்ச் மாத முடிவில் 10.70 சதவீதத்திலிருந்து 9.81 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டுள்ளது. எனினும் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 2-6 சதவீதம் என்ற இலக்கிற்குள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சில்லரை பணவீக்கத்தில் இடம் பெற்றிருக்கும் பொருட்கள் மற்றும் சேவையில், பெரும்பாலும் உணவுப்பொருட்களின் பங்களிப்பு தான் அதிகமாக உள்ளது. உணவுப்பொருட்கள் 45.86 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.6 சதவீதமும், சுகாதாரம் 5.89 சதவீதம் மற்றும் வீட்டுமனை 10 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை