Tag Archives: january 2022

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.01 சதவீதம்

நாட்டின் ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.01 சதவீதம் 

India’s CPI Retail Inflation in January 2022 – 6.01 Percent

 

சில்லறை விலை பணவீக்கம் என சொல்லப்படும் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம், கடந்த சில மாதங்களாக குறைந்து வந்திருந்த நிலையில் ஜனவரி மாதத்தில் 6 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் முதல் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் 6.01 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

 

அதே வேளையில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(|Unemployment rate) சற்று குறைந்துள்ளது. ஜனவரி மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் நகர்புறத்தில் 8.16 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.84 சதவீதமாகவும் இருந்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.57 சதவீதமாக ஜனவரி மாதத்தில் இருந்துள்ளது. 

 

கடந்த சில மாதங்களாக கிராமப்புறங்களை காட்டிலும் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. ஜனவரி மாத நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் அதிகரித்ததற்கான காரணமாக உணவுப்பொருட்களின் விலை இருந்துள்ளது. 

 

பருப்பு வகைகள் 3 சதவீதமும், காய்கறிகள் 5.19 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 18.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கு பிறகான காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாக ஜனவரி மாத விலைவாசி உள்ளது. ஒளி மற்றும் எரிபொருட்களின் விலையும் 9.32 சதவீதமாக அதிகரித்து வந்துள்ளது.

 

துணிமணிகள் மற்றும் காலணிகள் 8.84 சதவீதம், வீட்டுமனை 3.52 சதவீதம் மற்றும் புகையிலை பொருட்கள் 2.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க(Consumer price index) குறியீட்டில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டுமனை 10.7 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு 8.6 சதவீதமும், சுகாதாரம் 5.9 சதவீதம் மற்றும் கல்வி 4.46 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

 

பாரத ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்திற்கான குறுகிய கால இலக்கு 2% முதல் 6% வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட நுகர்வோர் விலை பணவீக்கம் இலக்கை தாண்டியுள்ள நிலையில், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே சொல்லப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

Advertisement