Category Archives: Stock Analysis

பங்கு முதலீட்டில் வாசிக்க வேண்டிய பத்து காரணிகள்

பங்கு முதலீட்டில் வாசிக்க வேண்டிய பத்து காரணிகள் 

10 Factors to read in a Stock Market Investing

பங்குச்சந்தை முதலீட்டில் பணம் சம்பாதிக்க நீண்ட காலத்தில் பொறுமையுடன் அணுகுவது அவசியமானது. அதே வேளையில், ‘ ஏதோ ஒரு பங்கில் முதலீடு செய்து விட்டு, 10 வருடங்கள் காத்திருந்தேன். பங்கு விலை இப்போது சரிந்து விட்டதே. எனது முதலீட்டில் 70-80 சதவீத தொகையை இழந்து விட்டேன் ‘ என நம்மில் பலர் புலம்புவதை பார்த்திருப்போம். இது பொதுவாக முதலீட்டில் உள்ள அனைவருக்குமான விஷயம் தான்.

நீங்கள் 10 வெவ்வேறு நிறுவன பங்குகளை முதலீட்டில் வைத்திருந்தாலும், அனைத்து பங்குகளும் உங்களுக்கு உடனடியாக முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது. 5-10 வருட சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்குகளும், வேறுபட்ட காலத்தில் தனது ஏற்ற-இறக்கத்தை காணும். நீண்டகாலத்தில் முதலீடு செய்து பண பெருக்கத்தை ஏற்படுத்த பெரிதாக மெனக்கெட தேவையில்லை எனலாம். இருப்பினும் சில அடிப்படை காரணிகளை நாம் வாங்கிய அல்லது வாங்க போகும் பங்கு நிறுவனத்தில் அலசி ஆராய்ந்து விட்டால், நமக்கான வேலை அவ்வளவு தான்.

நல்ல நிறுவன பங்குகளின் விலை குறுகிய காலத்தில் ஏறவில்லை என்றாலும், நீண்டகாலத்தில் முதலீட்டாளருக்கு பயன் தராமல் போகாது. நல்ல நிறுவன பங்குகள் எனும் போது கடனில்லா நிறுவனங்கள், நல்ல நிர்வாக திறமை, நிறுவனர்களின் தொழில் நாணயம், வருவாயில் சராசரி வளர்ச்சியாக இருப்பினும் நெடுங்காலமாக தொழில் செய்து வருவது ஆகியவற்றை சொல்லலாம்.

மேலே சொல்லப்பட்ட நல்ல நிறுவன பங்கின் தன்மையை மேலும் சில காரணிகளை கொண்டு நாம் அறியலாம். அது போன்ற பத்து காரணிகள் இங்கே,

  • இ.ஐ.சி. கட்டமைப்பு (EIC Framework) முறையில் ஒரு நிறுவன பங்கினை புரிந்து கொள்வது
  • நிர்வாகத்திறன் எப்படி என்பதனை அறிந்து கொள்வது அவசியம்
  • நிறுவனத்தின் நிதி அறிக்கையை அடிப்படையாக கற்று கொள்வது
  • விற்பனை மற்றும் லாப வளர்ச்சி எவ்வாறு உள்ளது ?
  • பங்கு முதலீட்டின் மீதான வருவாய் (Return on Equity)
  • மூலதனத்தின் மீதான வருமானம் (Return on Capital Employed)
  • ஒரு பங்கின் வருவாயை அதன் விலையுடன் ஒப்பிட்டு காண்பது (PE)
  • நிறுவனத்தின் கடன் எப்படி ? (கடன்-பங்கு விகிதம் – Debt to Equity)
  • நிறுவனர்களின் பங்கு பங்களிப்பு மற்றும் பங்கு அடமானம்(Holding & Pledging)
  • மதிப்பீடுகள் அவசியமானது, நீங்கள் வாங்க வேண்டிய பங்கு விலை என்ன ? (Price is what you pay, value is what you get)

இந்த பத்து காரணிகளை நாம் ஒரு நிறுவன பங்கில் தேட ஆரம்பித்தாலே நமக்கான நீண்டகால செல்வவளம் பெருக்கும் முதலீட்டை அறியலாம். தரகர் சொன்னார், நண்பர் பரிந்துரைத்தார், ஊடக செய்தியில் கண்டேன், வாட்சாப் அல்லது டெலிகிராமில் பகிரப்பட்டது என ஏதாவது ஒரு பங்கினை வாங்கி மாட்டிக்கொள்வதை விட, உங்களது முதலீட்டு சிந்தனையையும் சிறிது மெருகேற்றி கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ரைட்ஸ் (ரயில் இந்தியா) லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ரைட்ஸ் (ரயில் இந்தியா) லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Rites(Rail India Technical and Economic Service) Limited – Fundamental Analysis 

நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக இருப்பது, ‘ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை’ நிறுவனம். இதனை சுருக்கமாக ரைட்ஸ் லிமிடெட்(Rites) என கூறுவதுண்டு. பொறியியல் ஆலோசனை நிறுவனமாக வலம் வரும் ரைட்ஸ் நிறுவனம் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு துறையில் முக்கியத்துவம் பெறுகிறது.

1974ம் ஆண்டு மத்திய அரசால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்ட பிற உட்கட்டமைப்புகளுக்கான ஆலோசனை மற்றும் திட்டமிடலை செய்து வருகிறது. இந்திய ரயில்வே துறைக்கு மட்டுமில்லாமல், 60 நாடுகளுக்கும் மேலாக தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6000 கோடி, மத்திய அரசு தன்வசம் வைத்திருக்கும் பங்குகளின் அளவு 72 சதவீதமாகும். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ..சி. இந்தியாவிடம்(LIC) சுமார் 8 சதவீத பங்குகளும், எச்.டி.எப்.சி. டிரஸ்டி(HDFC Trustee) நிறுவனத்திடம் 3 சதவீத பங்குகளும் உள்ளது. இதன் தொழில் விரிவாக்கம் பெரும்பாலும் ரயில்வே சார்ந்த திட்டங்களாக இருந்து வருகிறது.

நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலான நாடுகளின் அரசு நிறுவனங்கள் தான் உள்ளது. இதன் முக்கிய அலுவலகங்கள் செனகல், போட்ஸ்வானா, மொரிசியஸ், வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் ரயில்வே சார்ந்து ஏற்றுமதிகளை அதிகம் கொண்டிருக்கும் நிறுவனமாகவும் ரைட்ஸ் லிமிடெட் உள்ளது.

2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,474 கோடியாகவும், செலவினம் ரூ.1,811 கோடியாகவும் இருந்துள்ளது. நிகர லாபமாக ரூ.616 கோடி சொல்லப்பட்டுள்ளது. விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 20 சதவீதமாகவும், லாபம் கடந்த 5 வருடங்களில் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் ஏற்றம் பெறவில்லை. எனினும் பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) ஒரு வருடத்தில் 25 சதவீதமும், ஐந்து வருடங்களில் 20 சதவீதமும் வளர்ந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.2,383 கோடி மற்றும் பணவரத்து(Cashflow) சீராக வந்து கொண்டிருக்கிறது. ஜூன் 2020 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதம் குறைந்திருந்தாலும், நீண்டகாலத்தில் இந்நிறுவனத்தின் தேவை அதிகரித்து தான் காணப்படுகிறது. நாட்டின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு துறையில் வாய்ப்பு அதிகமாகியிருக்கும் நிலையில், ரைட்ஸ் பங்குக்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதன் பாதகமாக அதன் துறை வளர்ச்சியும், அரசு சார்பில் ஏற்படும் கொள்கைகளும் தான்.

நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. அதன் கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.02 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 117 மடங்கில் உள்ளது. அரசு நிறுவனமாக இருப்பதால், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. முகமதிப்பு 10 ரூபாயாகவும், கடந்த கால ஈவுத்தொகை விகிதம்(Dividend yield) 7 சதவீதமாகவும் இருக்கிறது. அடிப்படை பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation) ரைட்ஸ் லிமிடெட் பங்கு ஒன்றின் விலை 300 ரூபாய் பெறும்.

முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

இந்துஸ்தான் ஜிங்க் – பங்குச்சந்தை அலசல்

இந்துஸ்தான் ஜிங்க் – பங்குச்சந்தை அலசல் 

Hindustan Zinc Limited – Fundamental Analysis

இந்திய மெட்டல் துறையில் இரும்பு அல்லாத உலோகங்களின்(Non-ferrous Metals) பங்களிப்பு மிகவும்  முக்கியத்துவமானது. காப்பர், அலுமினியம், துத்தநாகம், தங்கம், வெள்ளி, மெக்னீசியம், ஈயம், தகரம் ஆகியவை இரும்பு அல்லாத உலோகங்கள் எனப்படுகின்றன. இவை வாகனத்துறை, மின்சக்தி, தொலைத்தொடர்பு, விவசாயம், பாதுகாப்பு துறை, ரசாயனம் மற்றும் கட்டுமான துறையில் பயன்படுத்தப்படுகின்றன.

நம் நாட்டில் அலுமினியம், காப்பர், ஈயம் மற்றும் ஜிங்க்(துத்தநாகம்) ஆகிய நான்கும் வர்த்தகத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இரும்பு அல்லாத உலோகங்களின் பிரிவில் உள்ள,  ‘ஜிங்க்’ வாகனத்துறை, ரயில்வே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துறைமுகம், பாதுகாப்பு மற்றும் கட்டுமான துறைகளின் பயன்பாட்டில் உள்ளது.

ஜிங்க் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், நாட்டின் முதன்மை நிறுவனமாகவும் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்(Hindustan Zinc Limited) நிறுவனம் உள்ளது. ஒருங்கிணைந்த சுரங்க மற்றும் வளங்கள் பிரிவில் உள்ள இந்நிறுவனம் துத்தநாகம், ஈயம், வெள்ளி மற்றும் காட்மியம் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது.

துவக்கத்தில் அரசு பொதுத்துறை நிறுவனமாக இருந்த இந்துஸ்தான் ஜிங்க்(HZL), பின்னர் அரசின் பங்குவிலக்கல் அறிவிப்பின் கீழ் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. 2001ம் ஆண்டு வாக்கில் இந்நிறுவனத்தை வேதாந்தா நிறுவனம்(Vedanta – Sterlite Industries) ஏலத்தில் வாங்கியது. நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. அக்னிவேசு அகர்வால் உள்ளார். பொது பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தில் வேதாந்தா நிறுவனம் 65 சதவீத பங்குகளையும், மத்திய அரசு 30 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.

சுரங்கம் மற்றும் உருக்குதல் பிரிவில் தனது செயல்பாடுகளை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் செய்து வருகிறது. உலகளவில் துத்தநாகத்தை மிகக்குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் வலம் வருகிறது. உலோகங்கள் மற்றும் சுரங்க துறை பிரிவின் கீழ் ஆசிய-பசிபிக் பகுதியில் முதலிடத்தை கொண்டுள்ளது இந்துஸ்தான் ஜிங்க். இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 86,600 கோடி. புத்தக மதிப்பு 95 ரூபாய் மற்றும் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.02 ஆக உள்ளது.

வட்டி பாதுகாப்பு விகிதம் 58 மடங்காகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 65 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 23 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 18,560 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 6,805 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 39,465 கோடி என சொல்லப்பட்டுள்ளது. லாபத்தில் பண வரத்து (Cash Flow from Operating Activities) நன்றாக வந்து கொண்டிருக்கிறது.

முகமதிப்பு(Facevalue) பங்கு ஒன்றுக்கு ரூ.2 ஆக இருக்கும் நிலையில், சமீபத்திய ஈவுத்தொகை விகிதம் 8 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூன் 2020 காலாண்டில் வருவாய் ரூ.3,989 கோடியாகவும், நிகர லாபம் 1,359 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 684 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக மெட்டல் துறையில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சி, உலக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். தள்ளுபடி பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation), இந்துஸ்தான் ஜிங்க் பங்கு ஒன்றின் விலை ரூ.230 பெறுமானத்தை பெறும். முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மின்னணு வாகனங்கள் – வாய்ப்புகளும், சவால்களும் – பங்குச்சந்தை பகுப்பாய்வு

மின்னணு வாகனங்கள் – வாய்ப்புகளும், சவால்களும் – பங்குச்சந்தை பகுப்பாய்வு 

EV – Opportunities & Challenges – Fundamental Aspect

தொழில்நுட்ப உலகில் தனிநபர் ஒவ்வொருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் அறிவியல் முன்னேற்றத்தில் விருப்பம் காட்டுவதில்லை. மற்ற சிலரோ அறிவியலின் ஏணிப்படியில் நடைபோட்டு கொண்டு தான் இருக்கின்றனர். மனிதனின் தேவைகள் இருக்கும் வரை அதற்கான வசதிகளை புதுமையாக கொண்டு வருவதில் அறிவியல் முன்னிலை வகிக்கிறது.

மின்னணு வாகனங்கள் மற்றும் 5 ஜி தொழில்நுட்ப பயன்பாட்டில் முழுமை பெறும் போது, மனித அறிவியல் வாழ்வில் அது மேம்பட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்வுலகம் பார்த்திராத தொழில்நுட்ப ஆளுமைகள் இருக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில், சமீபத்திய வருடங்கள் மின்னணு வாகனம் சார்ந்த விஷயங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது, நடப்பில் உள்ள எரிபொருட்களுக்கான மாற்றம், மேம்பட்ட ஆற்றல் சேமிப்பை உருவாக்குதல் என அதன் தடம் நீண்டு கொண்டிருக்கிறது.

வாகனங்களுக்கான அரசு கொள்கைகளும் மாற்றமடைந்து வருகிறது. எந்தவொரு நிகழ்விலும் சாதகமான தன்மைகள் மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவ்வாறு ஒரு முதலீட்டாளராக நாம் காணும் போது, மின்னணு வாகன(Electric Vehicle) பிரிவில் வாய்ப்புகளும், சவால்களும் சில உள்ளன. இதனை நாம் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு நிகழ்வாகவும் பார்க்கலாம்.

பொதுவாக மின்னணு வாகனங்கள் எனும் போது சாலை வழி, ரயில், கப்பல்கள், மின் விமானம் மற்றும் மின்சார விண்கலம் என பலவகைகளில் பயன்பாடு  இருக்கலாம். மின்னணு வாகனங்களுக்கு தேவையான மின் ஆதாரங்கள் – உள் சேமிப்பு(Onboard Storage), ஜெனரேட்டர்கள், மின் உற்பத்தி ஆலைகள் மற்றும் கலப்பின வழிமுறை(Hybrid).

வாய்ப்புகள் பல…

  • குறைந்த கார்பன் அளவு
  • மீள்நிரப்பு செலவு குறைவு (Recharging Cost)
  • ஆற்றல் திறன்
  • குறைந்த சத்தம் மற்றும் காற்று மாசுபாடு
  • எளிய வழிமுறை (Simple Mechanism)

சவால்கள் சில…

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • அணுசக்தி மற்றும் புதைபடிவ ஆற்றல்(Fossil Energy)
  • கனரக வாகன தயாரிப்பில் உள்ள இடர்பாடு
  • மின்சார உற்பத்தி மற்றும் செலவினம்
  • நீண்ட பயணத்துக்கான மீள்நிரப்பு (Longer Recharge Time)
  • பேட்டரிகளை மாற்றுதல் – மறுசுழற்சி

மின்சார வாகனங்கள் என்ற வகையில் காணும் போது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஏதும் உள்ளதா, மின் ஆதாரங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் நிறுவனங்களை கண்டறிவது, பேட்டரிக்கு தேவையான மூலப்பொருட்கள் என்னென்ன, அதனை தயார் செய்யும் நிறுவனங்கள் எங்கே உள்ளது என்ற அடிப்படை கேள்விகள் ஒரு முதலீட்டாளருக்கு தேவையான விஷயமாகும்.

நடப்பில் டாட்டா மோட்டார்ஸ், மஹிந்திரா, அசோக் லேலண்ட் நிறுவனங்கள் பெரு வாகன பிரிவில் மின்னணு வாகனங்களை தயாரித்து வருகிறது. இருசக்கர வாகன பிரிவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களும் உள்ளது. பேட்டரி தயாரிப்பு என பார்க்கும் போது அமரராஜா பேட்டரிஸ்(Amararaja Batteries), எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்(Exide), இஸ்ரோ, பெல் நிறுவனங்கள் பங்காற்றுகிறது.

மூலப்பொருட்களில் மாங்கனீசு, அலுமினியம், காப்பர், ஜிங்க், அலாய், லித்தியம் மற்றும் கிராப்பைட் போன்ற பிரிவில் பல நிறுவனங்கள் உள்ளன. இவை இரும்பு அல்லாத உலோகங்கள்(Non-ferrous Metals) என கூறப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ்

பங்குச்சந்தை அலசல் – இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் 

Hinduja Global Solutions (HGS) – Fundamental Analysis

இந்துஜா குழுமத்தின் ஒரு அங்கம் தான் இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ்(HGS) நிறுவனம். 2000ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்ப சேவையில் தொழில் செய்து வரும் இந்நிறுவனம், ஆரம்ப காலத்தில் அசோக் லேலண்ட் ஐ.டி. நிறுவனமாகவே அழைக்கப்பட்டு வந்தது. பின்பு இந்துஜா நிதி தொழில் இணைக்கப்பட்டு, இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனமாக மாறியது.

பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டிருந்தாலும் சுமார் ஏழு நாடுகளில் இதன் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கால் சென்டர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தரவுத்தள ஆராய்ச்சி நிறுவனங்களை கையகப்படுத்தியது.

பின்பு 2010-11 காலங்களிலும் இது போன்ற நிறுவனங்களை கையகப்படுத்துதல் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. இந்துஜா குழுமத்தில் தற்போது பங்காளி சண்டை நடைபெற்று வருவது குழுமத்தில் உள்ள நிறுவனங்களுக்கு பாதகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் இந்நிறுவனம் 5044 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.

இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ்(Hinduja Global Solutions) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1500 கோடி. புத்தக மதிப்பு 823 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.80 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 5 மடங்கில் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 67 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

2020ம் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் ரூ.4,986 கோடியாகவும், நிகர லாபம் 202 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) கடந்த பத்து வருட காலத்தில் இரு மடங்காகியுள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 12 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 19 சதவீதமாகவும் உள்ளது.

இது போல லாப வளர்ச்சி, 5 மற்றும் 10 வருட காலங்களில் 5 சதவீதமாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 30 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 1700 கோடி ரூபாய். இந்துஜா குளோபல் நிறுவனத்திற்கு பணவரத்து நன்றாக உள்ளது. தள்ளுபடி பணப்பாய்வு முறைப்படி(DCF) இந்த பங்கின் விலை சுமார் 2000 ரூபாய் பெறுமானம் உள்ளது.

எனினும், நிறுவனத்தின் கடன் தன்மை மற்றும் குடும்ப பிரச்சனையால் ஏற்படப்போகும் நிர்வாக மாற்றம் ஆகியவற்றை கவனிப்பது அவசியம். மார்ச் மாத சந்தை சரிவில் இந்த பங்கின் விலை 400 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகியுள்ளது. தற்போதைய நிலையில் பங்கு ஒன்றின் விலை 723 ரூபாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குகளை ஆராய்வதற்கான எளிய இ.ஐ.சி. முறை – இப்படியும் வாங்கலாம் ?

பங்குகளை ஆராய்வதற்கான எளிய இ.ஐ.சி. முறை – இப்படியும் வாங்கலாம் ? 

Simple strategy to explore the Stocks – Investing Secrets

பொதுவாக பங்குச்சந்தையில் பங்குகளை வாங்க நீண்டகால முதலீட்டாளர்கள் பண்டமென்டல் அனாலிசிஸ்(Fundamental Analysis) என்றழைக்கப்படும் அடிப்படை பகுப்பாய்வு முறையையும், தினசரி மற்றும் குறுகிய கால வர்த்தகர்கள் டெக்னிக்கல் அனாலிசிஸ்(Technical Analysis) முறையையும் பயன்படுத்துவது நடைமுறையான ஒன்று.

இவற்றையெல்லாம் கற்றறிந்து பங்குகளை வாங்குவது மற்றும் விற்பதென்பது பங்குச்சந்தையில் எப்போதும் ஈடுபடுவர்களுக்கு ஒரு கலை என சொல்லலாம். ஆனால் இது போன்ற நேர வாய்ப்பு அனைவருக்கும் அமைந்திடாது. எனவே பங்குச்சந்தைக்கு தேவையான அனாலிசிஸ் முறைகளுக்கு முந்தைய பொருளாதார கணக்கீடுகளை தெரிந்து கொண்டால் போதும். ஓரளவு முதலீட்டிற்கு தேவையானவற்றை கற்கலாம்.

அப்படிப்பட்ட ஒரு பொருளாதார கணக்கீடு தான் இ.ஐ.சி. கட்டமைப்பு(EIC Framework). EIC (Economy.Industry.Company) கட்டமைப்பு முறையை நாம் இரண்டு வகைகளில் ஆராயலாம். ஒன்று மேலிருந்து கீழ், மற்றொன்று கீழிருந்து மேல். அப்படியென்றால் என்ன ?

இதனை ஒரு சிறு உதாரணத்துடன் காண்போம். உதாரணமாக நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறீர்கள். உங்களுக்கு தேவையான முதலீட்டை நீங்கள் அயல்நாட்டு நிறுவனத்திடம் இருந்து பெற இருக்கிறீர்கள். இந்த நிலையில், உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்போகும் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் ஆராய வேண்டிய விஷயமாக சில காரணிகள் சொல்லப்படுகின்றன.

அதாவது, உங்கள் நிறுவனத்தில் அவர் முதலீடு செய்ய தற்போதைய உலக பொருளாதாரம் எவ்வாறு உள்ளது, குறிப்பாக இந்திய பொருளாதாரம் இனி வரும் காலங்களில் எவ்வாறான நிலையை பெறும் என்பதனை அவர் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அப்போது தான் அவரது முதலீட்டுக்கான நல்ல வருவாயை ஈட்ட முடியும். உங்களுக்கும் தொடர்ச்சியான முதலீட்டை பெறுவதற்கான வாய்ப்பாக அமையும்.

நாட்டின் பொருளாதாரம் என சொல்லும் போது, ஜி.டி.பி.(GDP) என்ற பொருளாதார வளர்ச்சி குறியீடு, பணவீக்க விகிதம், வங்கி வட்டி விகிதங்கள், வர்த்தக பற்றாக்குறை, வேலைவாய்ப்பு விகிதம், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலுக்கான அரசின் கொள்கைகள் ஆகியவையாக சொல்லப்படுகிறது. இதனை தான் ஒரு முதலீட்டாளர்(Top Down Approach) காண வேண்டும்.

இரண்டாவதாக முதலீட்டாளர் ஒருவர், தான் முதலீடு செய்ய போகும் நிறுவனம் எந்த துறையில் உள்ளது, அந்த துறைக்கான சாதக-பாதகங்கள் தற்போதைய நிலையில் எப்படி உள்ளது என்பதனை ஆராய வேண்டும். முதலீடு செய்யப்போகும் துறைக்கான அரசின் கொள்கை மாற்றங்கள், வரி சலுகைகள், சுற்றுச்சூழல், தொழிலில் புதுமை, துறையில் உள்ள போட்டியாளர்கள் ஆகியவற்றை பார்க்க வேண்டும். அப்போது தான் முதலீடு செய்யப்போகும் நிறுவனம், இந்த துறையில் சாதிக்குமா என்பதனை எளிதாக அறிந்து விட முடியும்.

மூன்றாவதாக நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளை அறிவது: நிறுவனத்தை துவங்கியவர் மற்றும் உரிமையாளர்கள் உண்மையில் அந்த நிறுவனத்தின் தொழில் மீது நம்பிக்கை வைத்துள்ளார்களா, அவர்களது தொழில் திட்டமென்ன, நிர்வாகம் எப்படி உள்ளது, பொருட்கள் மற்றும் சேவையில் போட்டியாளர்களை சமாளித்து என்ன வித்தியாசத்தை ஏற்படுத்த போகிறார்கள் என்பதனை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

இவ்வாறாக ஒரு முதலீட்டாளர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் மட்டுமில்லாமல், பங்குச்சந்தையின் கீழ் வரும் நிறுவனங்களுக்கும் இம்முறையை பயன்படுத்தலாம். இந்த முறையை தான் நாம் மேலிருந்து கீழ்(Top Down Approach) என்கிறோம். முதலில் நமக்கு தேவையான காரணி பொருளாதார வளர்ச்சி எண்கள் தான். கடைசியாக தான் நிறுவனத்தின் தகவல்கள்.

EIC Framework

கீழிருந்து மேல் முறையில்(Bottom up Approach), மற்றொரு உதாரணத்தை பார்ப்போம். உங்கள் நண்பர் ஒருவர், உங்களது தெருவில் தேநீர் கடை நடத்தி வருகிறார் என வைத்து கொள்வோம். இவருக்கு எந்த வெளிநாட்டு முதலீடும், பெருநிறுவன முதலீடும் தேவையில்லை. அவரை பொறுத்தவரை மற்ற நாடுகளில் ஏற்படும் சலசலப்புகள் அவ்வளவாக இவரது தொழிலை பாதிக்காது.

அவருக்கு தேவையென்னவோ தேநீருக்கு தேவையான மூலப்பொருட்கள் தான் (பால், காபி, டீ தூள்) மற்றும் கூடுதலாக வடை போடுவார். இவரது வாடிக்கையாளர்கள் பக்கத்துக்கு தெருவில் உள்ள ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் அவ்வப்போது வரும் வழிப்போக்கர்கள் தான். இது போன்ற தொழிலில் நீங்கள் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், முதலில் பார்க்க வேண்டியது உலக பொருளாதாரமோ, இந்திய பொருளாதார வளர்ச்சியோ அல்ல. உள்ளூர் நிகழ்வு தான்.

எனவே கீழிருந்து மேலாக துவக்கத்தில் சொல்லப்பட்ட தேநீர் தொழிலின் வாய்ப்பையும், இரண்டாவதாக அந்த தொழிலுக்கான துறையையும் ஆராய வேண்டும். உலகம் முழுவதும் ஒரே பிரச்சனை இருந்திருந்தால், நாட்டின் பொருளாதாரமும் தேநீர் கடையை பாதிக்கலாம். பொதுவாக பங்குகள் மற்றும் உலகளவிலான முதலீடுகளுக்கு மேலிருந்து கீழ் வரும் இ.ஐ.சி. முறையை பயன்படுத்த வேண்டும். உள்ளூர் வாடிக்கையாளர்களை மட்டும் சார்ந்திருக்கும் தொழிலுக்கு கீழிருந்து மேலான முறையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக நீங்கள் முதலீடு செய்யவிருக்கும் அல்லது செய்திருக்கும் பங்குகளை இ.ஐ.சி. முறையில் அளவிட்டு பாருங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு

பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு 

The Peon to Pidilite Industries – Fevicol Branding

1925ம் ஆண்டு குஜராத் மாநிலம் மகுவாவில் பிறந்த பல்வந்த் தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்து விட்டு, பம்பாயில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்றார். படித்தது என்னவோ சட்டக்கல்வி, ஆனால் வேலைக்கு சென்றது சாயமிடுதல் மற்றும் அச்சக தொழிற்சாலைக்கு தான். சட்டம் சார்ந்த தனது படிப்பு வேலையை அவர் தனது வாழ்நாளில் ஒரு முறை கூட செயல்படுத்தவில்லை.

அச்சக துறையில் சலித்து போன அவர், மும்பையிலுள்ள மரச்சாமான்கள் செய்யும் ஒரு அலுவலகத்தில் பியூனாக வேலைக்கு சேர்ந்தார். அந்த அலுவலகத்தின் பட்டறையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பல்வந்துக்கு(Balvant Parekh) தொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை அவ்வப்போது ஏற்பட்டது. தொழில் செய்ய வேண்டுமென்றால் என்ன தொழில் செய்யலாம் மற்றும் தொழிலுக்கான முதலீட்டை தயார் செய்ய வேண்டுமே என்ற சிந்தனையும் அவரது மனதில் ஓடியது.

ஒரு முறை தனது நண்பர் ஒருவரின் மூலம் தொழில் செய்வதற்கான முதலீட்டை பெற முனைந்தார். பின்பு அவருடைய உதவியில் மோகன் என்பவர் அறிமுகமானார். மோகன் முதலீடு செய்ய தயாராக, பல்வந்த் தனது வேலையை விட்டு விட்டு சொந்த தொழிலில் களம் இறங்கினார். மேற்கத்திய நாடுகளிலிருந்து காகித சாயங்கள்(Paper Dye), பாக்கு கொட்டைகள், சைக்கிள் போன்றவற்றை இறக்குமதி செய்து, விற்பனை செய்வது – இது தான் பல்வந்தின் தொழில். தொழிலில் சக்கை போடு போட்டார். தொழில் சார்ந்த புதிய மனிதர்களுடன் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.

இறக்குமதி தொழிலில் இருந்ததால், ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெட்கோ(Fedco) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு பல்வந்த்துக்கு கிடைத்தது. 50 சதவீத பங்களிப்புடன் கூட்டாளியாக பெட்கோ நிறுவனத்தில் இணைந்தார். பெட்கோ நிறுவனத்தின் வாயிலாக மற்றொரு ஜெர்மன் நிறுவனத்தை கண்டறிந்தார் பல்வந்த், உடனடியாக அங்கும் சென்றார். ஹோஸ்ட்(Hoechst) என்ற ஜெர்மன் நிறுவனம் ரசாயன தொழிலில் இருந்து வந்தது. இது தற்போதைய சனோபி பார்மா(Sanofi Pharma) நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது.

ஹோஸ்ட் நிறுவனத்தில் இவரது தொழில் பங்களிப்பு இருந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் மறைவுக்கு பின், நிறுவனம் நேரடி விற்பனைக்கு தயாரானது. பின்னர் 1954ம் ஆண்டு உள்நாட்டுக்கு வந்த பல்வந்த் தொழில் அனுபவத்தை கொண்டு தனது சகோதரர்களுடன் மும்பையில், ‘பரேக் டை கெமிக்கல்’ நிறுவனத்தை துவங்கினார். ஜெர்மனியிலிருந்து தொழில்துறைக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் நிறமிகளை இறக்குமதி செய்து அதற்கான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

பசை போன்ற ஒரு பொருளை தயாரித்து அதற்கு, ‘பெவிகால் -Fevicol’ என பெயர் சூட்டினார். ‘Col – கால்’ என்றால் ஜெர்மனி மொழியில் இரு விஷயங்களை இணைப்பதன் பொருளாம். பரேக் டை கெமிக்கல் நிறுவனமே(Parekh Dyechem) பின்னர் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பல்வந்த் மறைவுக்கு பின் தற்போது அவரது மகன் மதுக்கர் பரேக் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். வினைல் கெமிக்கல் நிறுவனத்தின் தலைவராகவும், இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார். நாட்டின் 16வது பணக்காரராக மதுக்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.71,000 கோடி. நிறுவனத்திற்கான கடன் பெரிதாக எதுவுமில்லை. இந்த துறையில் சந்தை முன்னணியாகவும் நிறுவனம் திகழ்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம் 47 மடங்கில் உள்ளது. பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 16 மடங்காக உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதம் மற்றும் நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் குறைந்துள்ளது. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 158 கோடி ரூபாயாக சொல்லப்பட்ட நிலையில், இது 33 சதவீத குறைவாகும். எனினும் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் நீண்டகாலத்தில் நன்றாக உள்ளது.

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், லாபம் 24 சதவீதமாகவும் உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் 5 வருடங்களில் 26 சதவீதமும், பத்து வருட கால அளவில் 27 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,400 கோடியாக உள்ளது. 2010ம் ஆண்டு பிடிலைட் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.100 ஆக இருந்த நிலையில் இன்று 1400 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதுவரை மூன்று முறை போனஸ் பங்குகள் பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் இந்த நிறுவனம் பங்கு விலையில் மட்டும் அதிகமாக காணப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் இந்த பங்கு இறங்கும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் குறைவான அளவில் முதலீட்டிற்கு வாங்கி வைத்து கொள்ளலாம். பங்குகளை வாங்குவதற்கு அடிப்படை அலசல் அவசியம். எனவே தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முடிவு எடுப்பது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை கட்டண வகுப்பு – அடிப்படை பகுப்பாய்வு

பங்குச்சந்தை கட்டண வகுப்பு – அடிப்படை பகுப்பாய்வு 

Stock Market – Fundamental Analysis – 30 Hrs Sweet Spot Course

இந்திய பங்குச்சந்தையின் வரலாறு நீண்ட காலமானது. மும்பை பங்குச்சந்தையின்  வயது சுமார் 140 வருடங்களுக்கு மேல். வணிகத்தை பிரதானமாக கொண்டது தமிழகமும், நமது நாடும். நாம் இன்று பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தாலும், முன்னர் பார்த்திருந்தாலும் அடிப்படையில் நாம் ஒரு தொழில்முனைவோர்களே.

வேகமாக வளரும் நாடுகளில் நம் நாட்டின் பங்கு முக்கியதுமானது. அதனை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட நம்மை போன்ற நாடுகளில் வேலை தேடுவதை காட்டிலும் தொழில்முனைவு புரிவதே அவசியம். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகும். அது போல தான் பங்குச்சந்தையிலும். ஊக வணிகத்தில் பணம் பண்ணுகிறேன் என கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழப்பது ஆரோக்கியமானதல்ல.

பங்குச்சந்தைக்கும், நாட்டில் உள்ள தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் பெருமளவிலான தொடர்பு உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டில் காணும் ஒவ்வொரு பொருட்களிலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை காணலாம். தொட்டுணர கூடியதல்ல, பங்குச்சந்தை முதலீடு. ஆனால் நீங்கள் தொட்டுணர்ந்து பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்கள் மற்றும் சேவைகளிலும் பங்குச்சந்தை நிறுவனங்கள் தான் உள்ளது.

பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களை நமது தொழில் போல பாவித்து, அதன் அடிப்படை திறன்களை அலசி ஆராய்ந்து நீண்டகால நோக்கில் முதலீடு செய்வதே சிறந்தது. நல்ல நிறுவனங்களை கண்டறிவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதற்கு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை கற்றலுடன், நிறுவனங்களின் நிதி அறிக்கைகள்(Financial Reports) மற்றும் நிர்வாகத்தை(Management) மதிப்பிடுவது அவசியமாகும்.

இதற்கு ஒரு முதலீட்டாளராக நமக்கு தேவைப்படுவது பண்டமென்டல் அனாலிசிஸ்(Fundamental Analysis) என சொல்லப்படும் அடிப்படை பகுப்பாய்வு தான். பங்குச்சந்தையின் வர்த்தக ஏற்ற – இறக்கத்திற்கு அனைத்துமான மூதாதை தான் அடிப்படை பகுப்பாய்வு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர் ஒருவர் நம்மிடம் சிறிதளவு பண உதவி கேட்டாலே யோசிக்கும் நாம், பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதனை சிந்திக்க வேண்டும்.

வெறுமென பங்குகளை வாங்கி வைத்தால், லாபமோ அல்லது செல்வத்தையோ ஏற்படுத்த முடியாது. அதற்கான விதை சரியாக இருப்பது அவசியமாகும். வர்த்தக மதுரை சார்பாக பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு வகுப்பை துவங்க உள்ளோம். பங்குச்சந்தையில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் ? அப்படி  செய்யாவிட்டால் நாம் சம்பாதிக்கும் பணம் யாரோ ஒருவரால் முதலீடு செய்யப்பட்டு, அவர் பணக்காரராக மாறுவதற்கான வாய்ப்பு ஏன் ஏற்பட்டது ?

சரியான விலையில் பங்குகளை வாங்குவது எப்படி ?

சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வேறுபாடு என்ன ?

பங்கு முதலீட்டில் நஷ்டத்தை எவ்வாறு தவிர்க்கலாம் ?

மதிப்புமிக்க முதலீட்டாளர்களின்(Value Investors) செல்வத்தை நாமும் பெறுவது எப்படி ?

பங்குகள் மூலம் எவ்வாறு சொத்துக்களை(Financial Assets) ஏற்படுத்தலாம் ?

மோசமான நிர்வாகத்தையும், நஷ்டத்தை ஏற்படுத்தும் பங்குகளையும் கண்டறிவது எப்படி ?

பங்குச்சந்தையில் கூட்டு வட்டியின் மகிமை(Power of Compounding) என்ன ?

பணத்தின் மூலம் பணம் பண்ணும்(Money works for you) உண்மை சூத்திரம் என்ன ?

வாருங்கள், இது போன்ற கேள்விகளுக்கான விடையாக பங்குச்சந்தை அடிப்படை கற்றலை ஏற்படுத்துவோம்.

பதிவு செய்ய…

Stock Market – Fundamental Analysis Course – Registration 

கட்டணம்: ரூ. 4,500/- 

இணைய வகுப்பு சலுகை(Online Course):  ரூ. 2250/- மட்டுமே 

பதிவுக்கு பின் வகுப்புக்கான நாள் மற்றும் நேரம், இணைப்பு ஆகியவை உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Fundamental Analysis Course

புத்தகத்தின் வாயிலாக மட்டுமே கற்க விரும்புபவர்களுக்கு…

நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – How to pick the right stock in the Share market ?

புத்தக  விலை: ரூ. 228/- மட்டுமே

உரிமை துறப்பு(Disclaimer):

மேலே சொல்லப்பட்ட நிகழ்வு (வகுப்புக்கள்) பங்குச்சந்தையை பற்றிய அடிப்படை கற்றலுக்கு மட்டுமே. வகுப்புக்களில் சொல்லப்படும் பங்குகள் யாவும் மாதிரியாகவே(Examples) சொல்லப்படும். அவை வாங்க கூடிய அல்லது பரிந்துரைக்க கூடிய பங்குகள் அல்ல. வர்த்தக மதுரை ஒரு நிதி சேவை(Financial Advisory Services) சார்ந்த நிறுவனம் ஆகும். நடத்தப்படும் வகுப்புகளுக்கு சான்றிதழ்கள், தரவரிசைகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது.

இது ஒரு பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை வகுப்பு, தகவல் மற்றும் கற்றலுக்கு மட்டுமே.

பங்குகளில் உங்களுக்கு ஏற்படக்கூடிய லாப, நஷ்டங்களுக்கு இந்த தளம் பொறுப்பல்ல. பங்குகளில் முதலீடு செய்ய தகுந்த நிதி ஆலோசகரை அணுகுவது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எஸ்வின் குழும நிறுவனம் – நம்ம ஈரோட்டை சேர்ந்த பங்குகள்

எஸ்வின் குழும நிறுவனம் – நம்ம ஈரோட்டை சேர்ந்த பங்குகள் 

Esvin Group of Companies and its Shares – Listed Domestic Stock Valuation

ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் எஸ்வின் குழுமம். 1960ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்ப காலத்தில் சேஷசாயி பேப்பர்(Seshasayee Paper & Boards) மற்றும் அதனை சார்ந்த பலகைகள் தயாரிக்கும் தொழிலை கொண்டிருந்தது. நிறுவனத்தின் நிறுவனரான திரு. எஸ். விஸ்வநாதன் அவர்கள் எஸ்வின் குழுமத்தை பல நிறுவனங்கள் கொண்ட ஒரு அங்கமாக உருவாக்கினார்.

செராமிக்(Ceramic), பேட்டரிகள், உயிரி தொழில்நுட்பவியல், சர்க்கரை மற்றும் ரசாயனம் போன்ற தொழில்களில் குழும நிறுவனங்கள் செயல்பட்டன. 1984ம் ஆண்டு துவங்கப்பட்ட பொன்னி சுகர்ஸ்(Ponni Sugars) நிறுவனம் சர்க்கரை மற்றும் அதனை சார்ந்த ரசாயனங்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் 3000 டி.சி.டி. கொள்ளளவு கொண்ட கலனை ஈரோட்டில் நிறுவியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்கு தேவையான உற்பத்தி பொருட்கள் கரும்பு  சக்கையில் 60 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

பேட்டரி தயாரிக்கும் தொழிலில் உள்ள எச்.இ.பி.(High Energy Batteries) நிறுவனம், திறன்மிக்க துத்தநாகம் மற்றும் நிக்கல் காட்மியம் வகை பேட்டரிகளை தயாரித்து வருகிறது. உற்பத்தியாகும் பொருட்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆகவே, இந்நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.

காகித அச்சடிப்பில் உள்ள பொதுத்துறை நிறுவனமான டி.என்.பி.எல்.(Tamilnadu Newsprint and Papers Limited) வெற்றிகரமாக செயல்படுவதற்கு சேஷசாயி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியத்துவமானது. உலகின் முதல் கரும்பு சக்கையிலான செய்தித்தாள் பிரிவும் இது தான்.

உயிரி தொழில்நுட்பவியலில்(Bio Technology) செயல்படும் நிறுவனம் எஸ்வின் அட்வான்ஸடு டெக்னாலஜிஸ். இந்த துறையில் உயிர் கழிவு மற்றும் எரிபொருளின் வாயுவாக்க வேலைகளை செய்து வருகிறது இந்நிறுவனம். எஸ்வின் குழுமத்தின் சில நிறுவனங்கள் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

சேஷசாயி நிறுவனம் பேப்பர் தயாரிப்புக்கென இரு பிரிவுகளை கொண்டுள்ளது. ஈரோடு(Erode) மற்றும் திருநெல்வேலியில் இயங்கும் ஆலைகளில் ஆண்டுக்கு 2 லட்சம் டன்கள் பேப்பர்களை உற்பத்தி செய்யலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 780 கோடி. கடன்கள் எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 43 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை.

கடந்த ஒரு வருடமாக இந்த பங்கின் விலை 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், விற்பனை மற்றும் லாப வளர்ச்சி கடந்த பத்து வருட காலத்தில் நன்றாகவே இருந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பும், பணவரத்தும் சாதகமாக உள்ளது.

மற்றொரு நிறுவனமான பொன்னி சுகர்ஸ் நாளொன்றுக்கு 3500 டன் கரும்புகளை(Sugarcane) நசுக்கி 19 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 120 கோடி ரூபாய். கடன் எதுவும் பெரிதாக இல்லை. அது போல அடமான பங்குகளும் நிறுவனர் சார்பில் இல்லை. விற்பனை மற்றும் லாப வளர்ச்சி பெரும்பாலும் ஏற்ற-இறக்கமாக இருந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது இந்த துறையும்(Sugar Segment), அதனை சார்ந்த அரசு கொள்கைகளும் தான்.

இருப்பினும் நிறுவனம், பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை ஓரளவு பூர்த்தி செய்கிறது பேட்டரி தயாரிப்பில் இருக்கும் நிறுவனம் ஹை எனர்ஜி பேட்டரிஸ்(HEB). இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 35 கோடி. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் ஒன்றுக்கு மேலாக உள்ளது. எனவே இந்த பங்கு பொதுவாக பரிசீலிக்கக்கூடியதாக இல்லை. இதன் வாடிக்கையாளர்கள் இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை என இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தான் இந்நிறுவனம் லாபத்தை ஈட்டி வருகிறது எனலாம்.

பங்குச்சந்தையில் ஈடுபடும் நீண்டகால முதலீட்டாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள், பிரபல பிராண்டுகள் மற்றும் பெயர் அதிகம் தெரியாத மற்ற மாநிலங்களின் நிறுவன பங்குகளை வாங்குவதை விட, நமது ஊரில் உள்ள ஒரு நிறுவனத்தின் தொழிலை கண்டறிந்து முதலீடு செய்வது நமக்கும், நமது மாநிலத்தின் நலனுக்கும் சாதகமாக அமையும்.

மதுரை மாவட்ட தியாகராஜர் மில்ஸ் (Virudhunagar Textile Mills – VTM Ltd), டி.வி.எஸ். குழும நிறுவனங்கள், ராஜபாளையம் ராம்கோ குழும நிறுவனங்கள், முருகப்பா குழும நிறுவனங்கள், கோவை சாந்தி கியர்ஸ், சென்னையை தலைமையிடமாக கொண்ட வாகனத்துறை தயாரிப்பு மற்றும் உபகரணங்களில் உள்ள தமிழக நிறுவனங்களை அலசலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

National Aluminium Company(NALCO) – Fundamental Analysis

ஒடிசா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் நால்கோ (NALCO). மத்திய அரசின் நவரத்னா நிறுவனமாக பார்க்கப்படும் நால்கோ, அலுமினிய உற்பத்தி சேவையை செய்து வருகிறது. பாக்சைட் சுரங்கம், அலுமினிய சுத்திகரிப்பு, அலுமினியத்தை உருக்குதல் மற்றும் வார்ப்பு, மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக வேலைகளை தொழிலாக கொண்டுள்ளது.

அலுமினிய துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், துறை சார்ந்த பொருட்களை மிக குறைந்த விலையில் வழங்கும் உலகின் முக்கிய நிறுவனமாகவும் நால்கோ சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் வருவாயில் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்து உள்ளது  கவனிக்கத்தக்கது.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 5,960 கோடி. அதன் புத்தக மதிப்பு 55 ரூபாயாகவும், தற்போதைய பங்கு விலை 32 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. டிவிடெண்ட் தொகைக்கு(Dividend yield) பெயர் போன இந்நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் நால்கோவின் கடன்-பங்கு விகிதம் 0.01 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 100 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

NALCO DCF

நிறுவனர்களின் பங்களிப்பு 52 சதவீதமாக உள்ளது. நிறுவனர்களாக சொல்லப்படும் மத்திய அரசு பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை. இந்த துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை புத்தக மதிப்பு அடிப்படையின் படி மலிவான விலையில் வர்த்தகமாகி வருகிறது. எனினும், இந்த துறை உலக பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக உள்ளன.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 11 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 8.50 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி விகிதம் ஐந்து வருடங்களில் 24 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 3 சதவீதமாகவும் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரு காலாண்டுகளில் இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளன. நான்காம் காலாண்டு முடிவுகள்(Q4FY20) இன்னும் வெளிவரவில்லை. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 42 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. அதே வேளையில் பங்கு மீதான வருவாய் கடந்த 12 மாதங்களில் 16.50 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 11,499 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 1,734 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பு மற்றும் பணவரத்து நன்றாக உள்ளது. அதிக ரிஸ்க் கொண்ட இந்த துறை அவ்வப்போது உலகளவில் ஏற்படும் பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்து விளங்கும் நிறுவனமாகவும் நால்கோ உள்ளது. பங்கு விலை பெரிய அளவில் ஏற்றம் பெறாவிட்டாலும், அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. பங்கு ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் போது, இந்த பங்கினை சிறிய அளவில் வாங்கி கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டில் டிவிடெண்ட் தொகையை ஈர்க்க உதவும் இது போன்ற பங்குகளை சேர்த்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com