பங்குகளை ஆராய்வதற்கான எளிய இ.ஐ.சி. முறை – இப்படியும் வாங்கலாம் ?
Simple strategy to explore the Stocks – Investing Secrets
பொதுவாக பங்குச்சந்தையில் பங்குகளை வாங்க நீண்டகால முதலீட்டாளர்கள் பண்டமென்டல் அனாலிசிஸ்(Fundamental Analysis) என்றழைக்கப்படும் அடிப்படை பகுப்பாய்வு முறையையும், தினசரி மற்றும் குறுகிய கால வர்த்தகர்கள் டெக்னிக்கல் அனாலிசிஸ்(Technical Analysis) முறையையும் பயன்படுத்துவது நடைமுறையான ஒன்று.
இவற்றையெல்லாம் கற்றறிந்து பங்குகளை வாங்குவது மற்றும் விற்பதென்பது பங்குச்சந்தையில் எப்போதும் ஈடுபடுவர்களுக்கு ஒரு கலை என சொல்லலாம். ஆனால் இது போன்ற நேர வாய்ப்பு அனைவருக்கும் அமைந்திடாது. எனவே பங்குச்சந்தைக்கு தேவையான அனாலிசிஸ் முறைகளுக்கு முந்தைய பொருளாதார கணக்கீடுகளை தெரிந்து கொண்டால் போதும். ஓரளவு முதலீட்டிற்கு தேவையானவற்றை கற்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு பொருளாதார கணக்கீடு தான் இ.ஐ.சி. கட்டமைப்பு(EIC Framework). EIC (Economy.Industry.Company) கட்டமைப்பு முறையை நாம் இரண்டு வகைகளில் ஆராயலாம். ஒன்று மேலிருந்து கீழ், மற்றொன்று கீழிருந்து மேல். அப்படியென்றால் என்ன ?
இதனை ஒரு சிறு உதாரணத்துடன் காண்போம். உதாரணமாக நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறீர்கள். உங்களுக்கு தேவையான முதலீட்டை நீங்கள் அயல்நாட்டு நிறுவனத்திடம் இருந்து பெற இருக்கிறீர்கள். இந்த நிலையில், உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்போகும் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் ஆராய வேண்டிய விஷயமாக சில காரணிகள் சொல்லப்படுகின்றன.
அதாவது, உங்கள் நிறுவனத்தில் அவர் முதலீடு செய்ய தற்போதைய உலக பொருளாதாரம் எவ்வாறு உள்ளது, குறிப்பாக இந்திய பொருளாதாரம் இனி வரும் காலங்களில் எவ்வாறான நிலையை பெறும் என்பதனை அவர் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அப்போது தான் அவரது முதலீட்டுக்கான நல்ல வருவாயை ஈட்ட முடியும். உங்களுக்கும் தொடர்ச்சியான முதலீட்டை பெறுவதற்கான வாய்ப்பாக அமையும்.
நாட்டின் பொருளாதாரம் என சொல்லும் போது, ஜி.டி.பி.(GDP) என்ற பொருளாதார வளர்ச்சி குறியீடு, பணவீக்க விகிதம், வங்கி வட்டி விகிதங்கள், வர்த்தக பற்றாக்குறை, வேலைவாய்ப்பு விகிதம், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலுக்கான அரசின் கொள்கைகள் ஆகியவையாக சொல்லப்படுகிறது. இதனை தான் ஒரு முதலீட்டாளர்(Top Down Approach) காண வேண்டும்.
இரண்டாவதாக முதலீட்டாளர் ஒருவர், தான் முதலீடு செய்ய போகும் நிறுவனம் எந்த துறையில் உள்ளது, அந்த துறைக்கான சாதக-பாதகங்கள் தற்போதைய நிலையில் எப்படி உள்ளது என்பதனை ஆராய வேண்டும். முதலீடு செய்யப்போகும் துறைக்கான அரசின் கொள்கை மாற்றங்கள், வரி சலுகைகள், சுற்றுச்சூழல், தொழிலில் புதுமை, துறையில் உள்ள போட்டியாளர்கள் ஆகியவற்றை பார்க்க வேண்டும். அப்போது தான் முதலீடு செய்யப்போகும் நிறுவனம், இந்த துறையில் சாதிக்குமா என்பதனை எளிதாக அறிந்து விட முடியும்.
மூன்றாவதாக நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளை அறிவது: நிறுவனத்தை துவங்கியவர் மற்றும் உரிமையாளர்கள் உண்மையில் அந்த நிறுவனத்தின் தொழில் மீது நம்பிக்கை வைத்துள்ளார்களா, அவர்களது தொழில் திட்டமென்ன, நிர்வாகம் எப்படி உள்ளது, பொருட்கள் மற்றும் சேவையில் போட்டியாளர்களை சமாளித்து என்ன வித்தியாசத்தை ஏற்படுத்த போகிறார்கள் என்பதனை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
இவ்வாறாக ஒரு முதலீட்டாளர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் மட்டுமில்லாமல், பங்குச்சந்தையின் கீழ் வரும் நிறுவனங்களுக்கும் இம்முறையை பயன்படுத்தலாம். இந்த முறையை தான் நாம் மேலிருந்து கீழ்(Top Down Approach) என்கிறோம். முதலில் நமக்கு தேவையான காரணி பொருளாதார வளர்ச்சி எண்கள் தான். கடைசியாக தான் நிறுவனத்தின் தகவல்கள்.
கீழிருந்து மேல் முறையில்(Bottom up Approach), மற்றொரு உதாரணத்தை பார்ப்போம். உங்கள் நண்பர் ஒருவர், உங்களது தெருவில் தேநீர் கடை நடத்தி வருகிறார் என வைத்து கொள்வோம். இவருக்கு எந்த வெளிநாட்டு முதலீடும், பெருநிறுவன முதலீடும் தேவையில்லை. அவரை பொறுத்தவரை மற்ற நாடுகளில் ஏற்படும் சலசலப்புகள் அவ்வளவாக இவரது தொழிலை பாதிக்காது.
அவருக்கு தேவையென்னவோ தேநீருக்கு தேவையான மூலப்பொருட்கள் தான் (பால், காபி, டீ தூள்) மற்றும் கூடுதலாக வடை போடுவார். இவரது வாடிக்கையாளர்கள் பக்கத்துக்கு தெருவில் உள்ள ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் அவ்வப்போது வரும் வழிப்போக்கர்கள் தான். இது போன்ற தொழிலில் நீங்கள் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், முதலில் பார்க்க வேண்டியது உலக பொருளாதாரமோ, இந்திய பொருளாதார வளர்ச்சியோ அல்ல. உள்ளூர் நிகழ்வு தான்.
எனவே கீழிருந்து மேலாக துவக்கத்தில் சொல்லப்பட்ட தேநீர் தொழிலின் வாய்ப்பையும், இரண்டாவதாக அந்த தொழிலுக்கான துறையையும் ஆராய வேண்டும். உலகம் முழுவதும் ஒரே பிரச்சனை இருந்திருந்தால், நாட்டின் பொருளாதாரமும் தேநீர் கடையை பாதிக்கலாம். பொதுவாக பங்குகள் மற்றும் உலகளவிலான முதலீடுகளுக்கு மேலிருந்து கீழ் வரும் இ.ஐ.சி. முறையை பயன்படுத்த வேண்டும். உள்ளூர் வாடிக்கையாளர்களை மட்டும் சார்ந்திருக்கும் தொழிலுக்கு கீழிருந்து மேலான முறையை பயன்படுத்தலாம்.
இவ்வாறாக நீங்கள் முதலீடு செய்யவிருக்கும் அல்லது செய்திருக்கும் பங்குகளை இ.ஐ.சி. முறையில் அளவிட்டு பாருங்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை