இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி 

Infosys reported a net profit of Rs.5,945 Crore in Q1FY24

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் தனது 2023-24ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டிருந்தது. சொல்லப்பட்ட ஏப்ரல்-ஜூன்  காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,933 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,869 கோடியாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாபம் 9,064 கோடி ரூபாய் மற்றும் இயக்க லாப விகிதம்(OPM) 24 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக ஜூன் காலாண்டில் 561 கோடி ரூபாயை நிறுவனம் ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.8,362 கோடியாகவும், நிகர லாபம் ரூ.5,945 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்ட வருவாய் 10 சதவீதமும், நிகர லாபம் 11 சதவீதமுமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஜூன் 2022ல் ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) ரூ. 12.74 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.14.32 ஆக உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6.01 லட்சம் கோடி. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. மார்ச் 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 73,338 கோடி ரூபாய். இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் நிதித்துறை சார்ந்த சேவைகளிலிருந்து பெறப்படுகிறது. 

இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஜூன் காலாண்டின் படி 1,883 வாடிக்கையாளர்கள்(நிறுவனங்கள்) உள்ளனர். நூறு மில்லியன் டாலர்களுக்கு மேலாக வருவாய் அளிக்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் 38 பேர். 940 நிறுவன வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலான வருவாயை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர்.

முதல் 25 நிறுவன வாடிக்கையாளர்கள்(Top 25 Clients) மட்டும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 35 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஜூன் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3.36 லட்சம். இவற்றில் 3.17 லட்சம் ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், மற்றவர்கள் விற்பனை மற்றும் அதற்கு பிறகான சேவையை வழங்குவதிலும் உள்ளனர். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.