insurance policy

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

டேர்ம் இன்சூரன்ஸ்க்கான காப்பீட்டு அளவு (HLV) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

How is the Sum assured(HLV) calculated for Term Insurance Plans ?

நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட ஆயுள் காப்பீட்டு(Life Insurance) நிறுவனங்கள் தற்போது உள்ளன. எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் தவிர அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களாகும். இன்றைய பொருளாதார வாழ்வில் காப்பீட்டின் தேவை குறித்து பலர் புரிந்து கொண்டிருந்தாலும், 2022ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை படி, 100ல் மூன்று பேர் மட்டுமே காப்பீட்டை எடுத்துள்ளனர். இந்த மூன்று பேர்களும் தங்களது வருமானத்திற்கு ஏற்ப(Income Replacement) காப்பீட்டு அளவை எடுத்துள்ளார்களா என கேட்டால், அது தான் இல்லை.

நம்மில் பெரும்பாலோர் காப்பீட்டு திட்டத்தை சேமிப்பாக கருதுவதால் தான், தங்களது வருமானத்தை போல பல மடங்குகளில் காப்பீட்டு அளவை தேர்ந்தெடுப்பதில்லை. குறைந்த தொகையில்(Premium) அதிக காப்பீட்டு அளவை ஏற்படுத்த இன்றைய நிலையில் டேர்ம் காப்பீட்டு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் அமையவில்லை எனலாம். 

காப்பீடு என்பது ஒரு சேமிப்பல்ல, அது ஒரு செலவு. நமது வாகனத்திற்கு, வீட்டிற்கு, தொழிலுக்கு எடுக்கப்படும் காப்பீட்டை போல தான் டேர்ம் காப்பீடு திட்டமும். “நான் கட்டிய ப்ரீமியத்தொகைக்கு முடிவில் என்ன கொடுப்பீர்கள் என டேர்ம் காப்பீட்டை நீங்கள் கேட்டால், நீங்கள் இல்லாத நிலையில் உங்களது வருமானத்திற்கு மாற்றாக உங்களது குடும்பத்தை பொருளாதார ரீதியாக நான் பாதுகாப்பேன்” என்பது தான்.

டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance) நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதில் கிடைக்கப்பெறுவதில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு டேர்ம் காப்பீடு திட்டத்தின் ப்ரீமியத்தொகையும் அதிகரித்து விட்டது, டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கான நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டது. இருப்பினும், அதன் தேவையை நாம் புரிந்து கொண்டு நமது வருமானத்திற்கு ஏற்றாற் போல, தேவையான காப்பீட்டு அளவை பெறுவது அவசியம். 

சமீபத்திய தரவின் படி, ஆயுள் காப்பீட்டை பெறுவோரில் மூன்றில் ஒருவர் மட்டுமே டேர்ம் காப்பீட்டு திட்டத்தை எடுத்துள்ளனர். டேர்ம் காப்பீடு திட்டத்தை எந்தளவில் பெறலாம் என்பதை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்(IRDAI) ஒப்புதல் படி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளது. பொதுவாக நமது வயது மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இது அமையும்.

வருமானத்திற்கான மாற்று முறை – Human Life Value(HLV):

ஒரு தனிநபரின் எதிர்கால வருவாயின் தற்போதைய மதிப்பு தான் HLV(Human Life Value). எதிர்காலத்தில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் மற்றும் அவர் இல்லாத காலத்தில் தனது குடும்பத்தில் உள்ளோரை பொருளாதாரம் சார்ந்து பாதுகாக்க தேவையான தொகையை இன்றைய மதிப்பில் கணக்கிட வேண்டும். 

HLV = (1 + Investment rate) / (1 + Increment or Income growth rate) – 1

Alternative and Simple in terms, HLV = (Annual Income of an Individual) / (ROI in the Market)

*ROI – Rate of Interest 

இதனை சுருக்கமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒருவரின் தற்போதைய ஆண்டு வருமானத்தின் மடங்குகளில் சொல்லப்படுகிறது. இதனை டேர்ம் காப்பீட்டை வழங்கும் நிறுவனங்களும் தங்களது தரவு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மடங்குகளின் எண்ணிக்கை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம். ஆனால் பெரும்பாலும் அவை ஒத்த அளவில் தான் இருந்துள்ளது. 

டேர்ம் காப்பீட்டு அளவை பெற தேவையான இரண்டு முக்கிய காரணிகள்:

  • ஒருவரின் வயது 
  • ஆண்டு வருமானம் (சில நேரங்களில் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி வருமானம்)
  • இதர காரணிகள் – கடனையும் சேர்த்து ஆகும் ஆண்டு செலவு, முன்னர் எடுத்திருக்கும் காப்பீட்டின் அளவு(Existing Life Cover)

உதாரணத்திற்கு 30 வயது நிரம்பிய குமார் என்பவர் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாயை வருமானமாக கொண்டுள்ளார். 55 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பும் குமார், ஓய்வுக்கு முன்னரே தான் இறந்து விட்டால் தனது வருமானத்திற்கு நிகரான காப்பீட்டு அளவை தனது குடும்பத்திற்கு அளிக்க விரும்புகிறார். அப்படியெனில் தோராயமாக அவர் எடுத்து கொள்ள வேண்டிய டேர்ம் காப்பீட்டின் அளவு 1.15 கோடி ரூபாய்(Sum Assured or Coverage).

இங்கே நாம் குமாருக்கான கடன் தொகை எவ்வளவு, தனது குடும்ப உறுப்பினர்களின் நிதி இலக்குகளுக்கான எதிர்கால தொகை எவ்வளவு என்பதனை கணக்கில் கொள்ளவில்லை. இதனை கணக்கில் எடுக்கும் போது, காப்பீட்டு அளவு அதிகரிக்கலாம். 

HLV முறையை கொண்டு நாம் கணக்கிட்டாலும், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கென ஒருவருக்கு அதிகபட்சம் அனுமதிக்கப்பட வேண்டிய தொகையை கூறியுள்ளது. இந்த தொகை தனிநபர் ஒருவரின் வயது மற்றும் வருமானத்திற்கு தகுந்தாற் போல மாறுபடும்.

டேர்ம் காப்பீட்டுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு (மடங்குகளில்):

வயது வரம்பு  மடங்குகள்* 
18 முதல் 35 வயது வரை  25
36 முதல் 40 வயது வரை  20
41 முதல் 45 வயது வரை  15
46 முதல் 50 வயது வரை  12
51 முதல் 55 வயது வரை  10
56 முதல் 65 வயது வரை  5

 

(* ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் மாறுபடலாம்)

மேலே உள்ள தரவின் படி, குமாருக்கு அதிகபட்சமாக அவரது ஆண்டு வருமானத்தை போல, 25 மடங்குகளின் அளவில் காப்பீடு கிடைக்க கூடும். ( ரூ. 8 லட்சம் X 25 மடங்குகள் = 2 கோடி ரூபாய்)

கவனிக்க:

  • டேர்ம் காப்பீட்டை பெற இன்று பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தனிநபர் ஒருவரின் வருமான ஆதாரத்தை அவசியமான ஒன்றாக பார்க்கிறது. இதற்கான முக்கிய ஆவணமாக கடந்த சில வருடங்களின் வருமான வரி தாக்கல்(Income Tax Returns) ஆவணங்கள், கடந்த சில மாதங்களின் சம்பள விவரங்கள்(Pay Slips) மற்றும் கடந்த ஒரு வருடத்திற்கான வங்கி அறிக்கை(Bank Statement).
  • புகைப்பிடித்தல் / மதுப்பழக்கம் இருக்கும் நிலையில் அதற்கான ப்ரீமியத்தொகை அதிகரிக்கலாம். சில சமயங்களில் காப்பீட்டை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
  • டேர்ம் காப்பீட்டை பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அவசியமாகிறது. உடல்நலத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால் ப்ரீமியத்தொகை அதிகரிக்கப்படலாம் அல்லது காப்பீடு நிராகரிக்கப்படலாம்.
  • ஏற்கனவே வேறொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டேர்ம் காப்பீட்டை பெற்றிருந்தாலோ அல்லது காப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்தாலோ, தற்போதைய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பரிசீலனைக்கு பின்பு தான் காப்பீடு வழங்கலாமா, வேண்டாமா என்பதனை முடிவெடுக்கும்.
  • இன்று மாத சம்பளதாரர்களை விட, பெரும்பாலும் சுய தொழில் செய்பவர்களுக்கே டேர்ம் காப்பீடு நிராகரிக்கப்படுகிறது. இதற்கான காரணமாக சொல்லப்படுவது வருமானத்தின் விவரங்களை சரியாக பராமரிக்காமை அல்லது அதிக வருவாய் இருந்தும் முறையாக வருமான வரி தாக்கல் செய்யாதிருப்பது. 
  • டேர்ம் காப்பீட்டை இளவயதில்(சம்பாதிக்க ஆரம்பித்த சில வருடங்களில்) எடுக்கும் போது, அதற்கான ப்ரீமியத்தொகையும் அதிகரிக்கும். சரியான காப்பீட்டு அளவை சரியான நேரத்தில் அதிகரித்து கொள்வது அவசியம். தாமதமாக எடுக்கும் போது, உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் நமக்கான காப்பீட்டு அளவு கிடைக்காமல் போகலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.