ITC Diversify

ஐ.டி.சி. காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் –  ரூ.4,156 கோடி

ஐ.டி.சி. காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் –  ரூ.4,156 கோடி 

ITC reported a Net Profit of Rs.4,156 Crore – Q3FY22 Results

2.89 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் ஐ.டி.சி. நிறுவனம் தனது 2021-22ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மூன்றாம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 16,634 கோடி ரூபாயாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,492 கோடியாகவும் இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.4,156 கோடியை ஈட்டியுள்ளது. 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வருவாய் 31 சதவீதமும், நிகர லாபம் 12.7 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. சிகரெட்டு, நுகர்வோர் உணவு பொருட்கள், விவசாயம் சார்ந்த தொழில், பேப்பர் பொருட்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் காணப்பட்ட வருவாய் வளர்ச்சி இதன் ஒட்டுமொத்த வருவாயை அதிகரித்துள்ளது.

எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையின் கீழ் சுமார் 45 பிரிவுகளில் 700க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது ஐ.டி.சி. நிறுவனம். உணவுப்பொருட்களில் ஆசிர்வாத் கோதுமை, ITC Master Chef, Sunfeast, Bingo, Yippee, Fabelle, Candyman, சன்ரைஸ் மசாலா, டார்க் பேண்டஸி ஆகியவை இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டுகள்.

Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Mom;s Magic, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique, Savlon ஆகியவை நிறுவனத்தின் மற்ற துறை சார்ந்த பிராண்டுகள். ஐ.டி.சி. நிறுவனத்தின் ஹோட்டல் பிரிவில் கிராண்ட் சோழா, விண்ட்சார், கார்டெனியா மிகவும் பிரபலமானவை.

நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆகியவற்றில் நிறுவனம் திறம்பட நிர்வகித்து வருவதாக தெரிவித்துள்ளது. கார்பன் இல்லாத சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் நோக்கில் நிறுவனத்தின் தொழில் மேம்பட்டு வருகிறது.

நிறுவனத்திற்கு கடன் எதுவும்(Debt to Equity) பெரிதாக இல்லை. செப்டம்பர் 2021 காலாண்டு முடிவின் படி நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.57,955 கோடி. நிறுவனர்கள்(Promoter Holding) சார்பாக பங்குகள் எதுவும் நேரடியாக இல்லை. இருப்பினும் பொதுவெளியில் அவர்களிடம் குறிப்பிடத்தக்க பங்குகள் இருப்பது கவனிக்கத்தக்கது. அந்நிய முதலீட்டாளர்கள் சார்பில் சுமார் 44 சதவீத பங்குகள் உள்ளது. எல்.ஐ.சி. காப்பீட்டு(LIC India) நிறுவனத்திடம் சுமார் 16 சதவீத பங்குகளும் உள்ளன.

நூறு வருடத்திற்கு மேலான தொழில் அனுபவம் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. சஞ்சீவ் பூரி உள்ளார். 1910ம் ஆண்டு W.D & H.O. Wills நிறுவனத்தால் துவங்கப்பட்ட இம்பீரியல் டொபாகோ கம்பெனி(Imperial Tobacco Company of India) தான் பின்னொரு காலத்தில் ஐ.டி.சி. லிமிடெட் என மாற்றம் பெற்றுள்ளது. புகையிலை தொழிலை ஆரம்ப நிலையாக கொண்டிருந்தாலும், தற்போது நுகர்வோர் உணவுப்பொருட்கள் துறையில் நாட்டின் தவிர்க்க முடியாத நிறுவனமாக ஐ.டி.சி. உருவாகியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s