Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

வருகிறது ரெய்ட்(REIT) ரியல் எஸ்டேட் முதலீடு – சாதகங்களும், பாதகங்களும்

வருகிறது ரெய்ட்(REIT) ரியல் எஸ்டேட் முதலீடு – சாதகங்களும், பாதகங்களும்

India’s First Real Estate Investment Trust(REIT) Opportunity – Advantages & Disadvantages

 

ரியல் எஸ்டேட் முதலீடு அறக்கட்டளை என்னும் ரெய்ட்(REIT) அமைப்பு கடந்த 2014ம் ஆண்டு முதல் செபியால்(SEBI) ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த துறையில் இதுவரை எந்த முதலீடும் திரட்டப்படாத நிலையில், தற்போது பொது மக்களிடையே முதலீட்டை பெறும் நோக்கத்தில் உள்ளது ரெய்ட். ரெய்ட் என்னும் அமைப்பு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை போன்று செயல்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதிகள் பொதுவாக பல்வேறு முதலீட்டாளர்களிடையே பெற்ற தொகையை பங்குகள், அரசாங்க பத்திரங்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யும். இதனை போன்றே ரெய்ட் முதலீடும் பொது மக்களிடம் பணத்தை  பெற்று கொண்டு அதனை நிலம் மற்றும் வீட்டு மனைகளில் முதலீடு செய்யும். முதலீடுகளின் வாயிலாக வாடகை வருமானம், நிலம் மற்றும் மனை விற்பனை மூலம் ஆதாயம் ஆகியவை பெறக்கூடும். இவை முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும்.

 

வீட்டு மனையில் நாம் நேரிடையாக அதிக பணத்தை முதலீடு செய்யாமல் ரெய்ட் அமைப்பின் மூலம் நம்மிடம் உள்ள குறிப்பிட்ட தொகைக்கு மட்டும் முதலீடு செய்து விட்டு, வருவாயை ஈட்டலாம். நிலம் மற்றும் வீட்டு வாடகை மூலம் ஒரு குறிப்பிட்ட கால வாரியாக வருமானம் கிடைக்கும். இது போக, சில காலங்களுக்கு பிறகு அந்த மனை விற்கப்படும் நிலையில், மூலதன ஆதாயமும் நமக்கு கிடைக்கப்பெறும்.

 

ரெய்ட் அமைப்பில் செய்யப்பட்ட முதலீட்டை நாம் இடையில் திரும்ப பெற விரும்பினால், பங்குச்சந்தையில்(Stock Exchange) நம்மிடம் உள்ள ரெய்ட் யூனிட்களை விற்று பணமாக பெற்று கொள்ளலாம். சுருங்க சொன்னால், இந்த முதலீடு மியூச்சுவல் பண்ட் முதலீட்டை போன்றே அமையப்பெறும்.

 

ரெய்ட் அமைப்பில் முதல் நிறுவனமாக பெங்களூருவை சேர்ந்த எம்பசி பார்க்ஸ்(Embassy Office Parks) நுழைய இருக்கிறது. முதலீடு திரட்டப்படும் நாள் வரும் 18ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி(March 18-20) வரை ஆகும். பொதுவெளியில்(Public Issue) திரட்டப்பட உள்ள தொகை சுமார் 4750 கோடி ரூபாய். இதற்கு ஐ.சி.ஆர்.ஏ.(ICRA) ஏஜென்சியின் ‘AAA’ ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டின் விலை 300 ரூபாயாகவும், குறைந்தபட்ச வாங்க வேண்டிய பங்குகளின் எண்ணிக்கை 800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

ரெய்ட் முதலீட்டில் நிறுவன முதலீட்டாளர்களுக்கு 75 சதவீதமும், நிறுவனமல்லாத மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு 25 சதவீத பங்களிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலீட்டின் மூலம் பெறப்படும் வருமானம், வரி நிபந்தனைக்கு உட்பட்டது. அதே வேளையில், பெறப்படும் ஈவுத்தொகைக்கு(Dividend) வரி எதுவும் செலுத்த தேவையில்லை.

 

சாதகமான அம்சமாக உள்ளவை:  ஒழுங்குமுறை ஆணையமாக செபி செயல்பட்டு வருவது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். ரெய்ட் முதலீடு அனுபவமிக்க தொழில் முறை நிர்வாகிகளை கொண்டு இயக்கப்படுவதால், நஷ்டத்திற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. வீட்டு மனை துறையின் மூலம் தொடர் வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு.

 

பொதுவாக நாம் மனையை வாங்கினால், அதனை உடனடியாக விற்று பணம் பண்ண முடியாது. ஆனால் ரெய்ட் முதலீட்டின் மூலம் உடனடியாக சந்தையில் நாம் வைத்திருக்கும் மனைகளை (யூனிட்களை) விற்று பணம் பெறலாம்.

 

பாதகங்கள்:  ரெய்ட் முதலீட்டில் குறைந்தபட்ச மூலதனம் ரூ. 2 லட்சமாக செபி நிர்ணயித்துள்ளது சிறு முதலீட்டாளர்களுக்கு பாதகமான விஷயம். இருப்பினும், காலப்போக்கில் இவற்றில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். சமீப காலங்களாக ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பார்த்த வருமானம் அவ்வளவாக கிடைப்பதில்லை. மனைகளின் விற்பனை விலையும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை எனலாம். இதனால் நமக்கு கிடைக்கப்பெறும் வருவாய், வங்கி வைப்பு நிதிகளின் வட்டி விகிதத்தை(Bank FD Rates) ஒட்டியே காணப்படும்.

 

இந்த மாதம் வெளிவர உள்ள முதலீடு தான் ரெய்டின் முதல் வெளியீடு ஆகும். எனவே, இந்த துறை இனிவரும் காலத்தில் எவ்வாறு வளரும் என நாம் சற்று பொறுமையாக காத்திருப்போம். அதுவரை நாம் பரஸ்பர நிதி திட்டங்களை(Real Estate Sector Funds) முதலீட்டு வாய்ப்பிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

Minimum Investment amount of 100 rupees and Free Term Insurance – Mutual Funds Schemes

இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி துறை(Mutual Fund Industry) 1963ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பரஸ்பர நிதி திட்டங்களுக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டு பாரத ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.

1987-1993 ம் வருட காலங்களில் அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே மியூச்சுவல் பண்ட் திட்டங்களை வழங்கி வந்த நிலையில், பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் பரஸ்பர நிதி துறையில் நுழைந்தன. அரசு சார்பில் துவங்கப்பட்ட பரஸ்பர நிதிகளில் முதன்முறையாக பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சி. நிறுவனமும்(LIC India) திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தின. 1992ம் ஆண்டு பரஸ்பர நிதிக்கான ஒழுங்குமுறை செபியிடம்(SEBI) வந்த பிறகு, முதல் தனியார் மியூச்சுவல் பண்ட் நிறுவனமாக கோத்தாரி பயோனியர்(Kothari Pioneer) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனம் பிராங்கிளின் டெம்பிள்டன்(Franklin Templeton) நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

ஆரம்ப காலத்தில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பினும், தற்போது பரஸ்பர நிதி திட்டங்கள் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புக்கு மாற்றாக செயல்பட்டு வருகிறது. இன்றும் சிலருக்கு பரஸ்பர நிதி திட்டங்கள் என்றாலே பங்குச்சந்தை தான் என்ற ஐயம் உள்ளது. சமீப காலங்களில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வும், திட்டங்களில் உள்ள வடிவமைப்பும் எளிமையாக்கப்பட்டுள்ளன. அரசு சார்பிலும் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொது கருத்தரங்குகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

பரஸ்பர நிதி சார்ந்த விழிப்புணர்வை நமது ஊரில் பரவலாக விகடன் குழுமம் (நாணயம் விகடன் – Nanayam Vikatan) சேர்த்து வருவது நல்ல விஷயம். சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த அடிப்படை கல்வி நமக்கு பள்ளி, கல்லூரி காலங்களில் கிடைப்பதில்லை என்றாலும், இன்று அதற்கான தளங்கள் அமைய பெற்றிருப்பது மக்களுக்கு நலன் பயக்கும்.

பரஸ்பர நிதி திட்டங்களில் லிக்விட் பண்டுகள்(Liquid Funds) என்று சொல்லப்படும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் முதல் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள்(Equity oriented Funds) வரை பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு முதலீட்டாளரின் நிதி இலக்குகள், கால அளவுகளை கொண்டு மற்றும் ரிஸ்க் தன்மையை பொறுத்து பரஸ்பர நிதி திட்டங்கள் வேறுபடும். நீண்டகாலத்தில் பரஸ்பர நிதித்திட்டங்கள் பணவீக்கத்தை காட்டிலும் நல்ல வருமானத்தை கொடுத்து வருகிறது. அதே வேளையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை காட்டிலும் பெறக்கூடிய நீண்டகால வருமானம் பல மடங்கு லாபத்தை தரக்கூடியவையாக உள்ளது.

இன்றைய நிலையில், வரி சலுகையை பெற மிகவும் குறைந்த லாக் இன் காலம்(Lock in Period) கொண்ட மற்றும் அதிக வருமானத்தை தரும் திட்டமாக மியூச்சுவல் பண்ட் டாக்ஸ் சேவர் திட்டங்கள்(Tax Saving Mutual Funds) உள்ளன. முன்னர் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை (ரூ.500-5000) முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்து, தற்போது குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குறைந்த வருமானம் உள்ளவர்களும் அஞ்சலக சேமிப்பை போல, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

பரஸ்பர நிதி திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டு தொகையை, நாம் விரும்பும் எந்த நேரத்திலும் பெற்று கொள்ளலாம் என்பது மற்றுமொரு சிறப்பம்சம். சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நாம் மாதாமாதம் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan -SIP) தொகைக்கு இலவச டேர்ம் பாலிசியையும் வழங்குவது ஆதாயமான விஷயம். நாம் செய்யும் முதலீடு தொகைக்கு ஏற்றாற் போல் மற்றும் கால அளவுகளை பொறுத்து, நமக்கான டேர்ம் காப்பீடு தொகையும்(Term Policy Insurance) அதிகரிக்கும். இதற்காக அந்த நிறுவனங்கள் நம்மிடம் இருந்து எந்தவித கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.

இருப்பினும், இலவசமாக காப்பீடு கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு, நீங்கள் உங்கள் முதலீட்டை வெளியே எடுக்கும் நிலையில் உங்களது காப்பீடு ரத்து செய்யப்படலாம். சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 வருடங்கள் முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கு காப்பீட்டை வழங்கும். எனவே காப்பீடு இலவசமாக கிடைக்கப்பெற்றாலும், தனியாக டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்து கொள்வது நல்லது.

வரும் காலங்களில் வங்கி வைப்பு தொகை மற்றும் அஞ்சலக திட்டங்களுக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு முழுமையாக இருக்கலாம் என்பது தான் உண்மை. அதனால் தான் என்னவோ, சில வங்கிகள் தாமாக முன்வந்து வாடிக்கையாளர்களுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை பரிந்துரைக்கின்றன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

எஸ்.பி.ஐ. வங்கியில் ஏற்பட்ட மோசடியால் வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ. 7,951 கோடி

எஸ்.பி.ஐ. வங்கியில் ஏற்பட்ட மோசடியால்  வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ. 7,951 கோடி

SBI Customers who had lost nearly Rs. 7,951 Crore in Fraudulent Cases

 

நாட்டின் மிகப்பெரிய மற்றும் பன்னாட்டு பொதுத்துறை வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி(State bank of India) திகழ்கிறது. கல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிய இம்பீரியல் வங்கி(Imperial Bank of India) தான் பின்னாளில் பாரத ஸ்டேட் வங்கியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இரு நூறாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த வங்கி மொத்தம் 24,000 கிளைகளையும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி பணியாளர்களையும் கொண்டு வங்கி சேவைகளை நிர்வகித்து வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 2018ம் வருடத்தின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கியின்(SBI) சொத்து மதிப்பு சுமார் 33,12,461 கோடி ரூபாய். கடந்த 2016-17ம் நிதியாண்டில் ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் மட்டும் பணியாளர் ஒருவருக்கு ரூ. 511 /- என்ற அடிப்படையில் வருவாயை ஈட்டியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பிராண்டாகவும்(Branding), நம்பகமான பொதுத்துறை வங்கி என சொல்லப்பட்டாலும் ஸ்டேட் வங்கியில் சிக்கல்கள் ஏராளம்.

 

இந்திய பங்குச்சந்தையில் சந்தை மூலதனமாக ரூ. 2,43,000 கோடியை கொண்டிருக்கும் எஸ்.பி.ஐ. வங்கி கடந்த 2017-18ம் நிதியாண்டில் முதன்முறையாக 4,556 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை அடைந்தது. கடந்த ஐந்து வருடங்களில் வங்கியின் வளர்ச்சியும் சொல்லி கொள்ளுமாறு இல்லை. தனியார்  வங்கிகளின் துரிதமான செயல்பாடும், வங்கிகள் அல்லாத நிதி சேவை நிறுவனங்களின்(NBFC) பங்களிப்பும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு ஒரு சவாலாகவே இருந்துள்ளன.

 

எஸ்.பி.ஐ. வங்கியின் வாராக்கடன்(Non Performing Assets) பிரச்சனையும், அதனை தொடர்ந்து துணை நிறுவன வங்கிகளை ஸ்டேட் வங்கியுடன் இணைத்த நிலையிலும் அதன் சேவையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை எனலாம். சமீபத்தில் திரு. சந்திரசேகர் என்பவரால் தகவல் சட்ட உரிமையின்(RTI) கீழ் ஸ்டேட் வங்கியிடம் இருந்து சில தகவல்கள் பெறப்பட்டன.

 

கிடைக்கப்பட்ட தகவலில், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் குழும வங்கியில் நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது (ஏப்ரல் – டிசம்பர் 2018) மாதங்களில் மோசடி வழக்குகளாக 1,885 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்பட்ட மோசடியின் மொத்த மதிப்பு சுமார் 7,951 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. நடப்பு நிதி வருடத்தில் முதல் காலாண்டில் 669 புகார்களும், இரண்டாம் காலாண்டில் 660 புகார்களும் மற்றும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 556 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

 

ஒன்பது மாதங்களில் மோசடி பேர்வழிகளால்(Fraudulent Activities) வாடிக்கையாளர்கள் இழந்த தொகை ரூ. 7,951 கோடி, இவற்றில் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலத்தில் மட்டும்  நடந்த மோசடிகளின் மதிப்பு ரூ. 2,395 கோடியாகும்.

 

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்வியில், வாடிக்கையாளர்கள் இழந்த தொகைக்கான புகார்களில் வங்கியின் தீர்வு என்ன என்பது கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு வங்கியிடம் இருந்த எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 7(9) ன் கீழ், மேற்சொன்ன கேள்விக்கு பதிலளிக்க எஸ்.பி.ஐ. நிர்வாகம் மறுத்து விட்டது.

 

வங்கிகளின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் சொல்லப்பட்ட போதிலும், நுகர்வோர் சந்தையை அதிகமாக கொண்டிருக்கும் நமது நாட்டில் வங்கி மோசடிகள்(Bank Frauds) நடந்த வண்ணம் தான் உள்ளன. பெரும்பாலான வங்கி மோசடிகள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணைய பரிமாற்றத்தில் தான் நடைபெறுவதாக வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தது – மூன்றாம் காலாண்டு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தது – மூன்றாம் காலாண்டு  

India’s GDP growth slowed to 6.6 percent in the Third Quarter of Current Financial Year 2018-19

 

மத்திய புள்ளியியல் அமைச்சகம்(CSO) நேற்று (28-02-2019) வெளியிட்ட தனது அறிக்கையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதி வருடத்தின்(2018-19) முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 7.1 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி விகிதம்(Gross Domestic Product -GDP) கடந்த காலாண்டுகளை ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேவைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், மேலும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவை நமது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளாக அமைந்தன.

 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வெளிவந்த 8.2 சதவீதம் மாற்றியமைக்கப்பட்டு 8 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் இருந்த 7.1 சதவீதம் பின்னர் 7 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. நடப்பு 2018-19 முழு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) 7.4 சதவீதமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

 

முன்னொரு காலத்தில் விவசாயம் சார்ந்த பகுதியாக இருந்த நம் நாடு தற்போது சேவை துறையில்(Service sector) மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது நினைவிருக்கலாம். கடந்த பிப்ரவரி 8ம் தேதி நிலவரப்படி, மொத்த உள்நாட்டு மதிப்பில்(Gross Value Added -GVA) சேவை துறை 54.40 சதவீதமும், உற்பத்தி துறை(Manufacturing) 29.73 சதவீதமும், விவசாயம்(Agriculture) மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் 15.87 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.   

 

உற்பத்தி துறையில் கடந்த சில காலங்களாக மந்தமான நிலை இருப்பினும், வாகன துறை மிகப்பெரிய சந்தையை உள்நாட்டில் கொண்டிருப்பது சாதகமான அம்சம். உற்பத்தி துறை கடந்த மூன்று ஆண்டுகளில் 1.5 சதவீத வளர்ச்சியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொண்டிருக்கிறது.

 

மூன்றாம் காலாண்டுக்கு சொல்லப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருப்பினும், இது சீன நாட்டின் வளர்ச்சியை காட்டிலும் அதிகமாக தான் உள்ளது. சீனாவின் மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவீதமாக அமைந்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

எல்லையில் பதற்றம், தடுமாற்றத்தில் பங்குச்சந்தை

எல்லையில் பதற்றம், தடுமாற்றத்தில் பங்குச்சந்தை

Tension in the border, the staggering Indian Stock market

 

கடந்த பிப்ரவரி 7ம் தேதி இந்திய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 11,069 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 36,971 புள்ளிகளிலும் முடிவடைந்திருந்தது. உலக பொருளாதார மந்த நிலை, அமெரிக்க-சீன வர்த்தக போர், நாட்டில் உள்ள நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் என பல காரணிகள் சந்தையை கடந்த சில நாட்களாக பதம் பார்த்தன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கும் மேலாக சந்தை இறங்குமுகத்தில் பயணிக்க தொடங்கியது. பிப்ரவரி 19ம் தேதியன்று நிப்டி குறியீடு(Nifty50) 10,604 புள்ளிகளிலும், சென்செக்ஸ் குறியீடு(BSE Sensex) 35,352 புள்ளிகளிலும் அன்றைய வர்த்தகத்தை முடித்து கொண்டது. பத்து நாட்களில் தேசிய பங்குச்சந்தை(NSE) குறியீடு கிட்டத்தட்ட 500 புள்ளிகளையும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1600 புள்ளிகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்(2019 Pulwama Attack) நடந்த அதிபயங்கர தற்கொலை படை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தனது விமானப்படை மூலம் பாகிஸ்தானின் பாலக்கோட்(Balakot) பகுதியில் தாக்குதலை நடத்தியது. இவற்றில் அங்கு தங்கியிருந்த 300 தீவிரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது.

 

பத்து நாட்களுக்கு மேலாக இறக்கத்தில் இருந்த சந்தை அடுத்த மூன்று நாட்களில் சிறிது ஏற துவங்கியது. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் பங்குச்சந்தையிலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தின. கடந்த இரண்டு நாட்களில் நிப்டி மற்றும் சென்செக்ஸ் முறையே 80 புள்ளிகள் மற்றும் 240 புள்ளிகளும் இறங்கியுள்ளன. பாகிஸ்தானின் கராச்சி சந்தை குறியீடு(KSE) புதன் கிழமை அன்று (27-02-2019) எல்லையில் பதற்றம் என்ற செய்தி வந்த நிலையில், 1500 புள்ளிகள் அல்லது 4 சதவீதம் என்ற வீழ்ச்சியை கண்டது.

 

பொதுவாக இரு நாடுகளிடையே ஏற்படும் போர் சூழல்(Terror attack and War), உலக பொருளாதார காரணிகள் ஆகியவை சந்தையை வெகுவாக  பாதிக்க கூடியவை. தற்போது இது போன்ற சூழ்நிலை தான் இந்திய பங்குச்சந்தையில் நிலவி கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் நாட்டில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், நடப்பில் ஏற்பட்டு கொண்டிருக்கும் எல்லையில் பதற்றமும்(India-Pakistan) முக்கியத்துவம் பெறுகின்றன.

 

புதன் கிழமை அன்று(27-02-2019) இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, சென்செக்ஸ் 600 புள்ளிகளும், நிப்டி 180 புள்ளிகளும் ஏற்றத்தில் இருந்து இறக்கம் கண்டன. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய விமான படையின் பைலட் திரு. அபி நந்தன் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானது. இதனை உறுதி செய்த மத்திய அரசு, அவரை மீட்பதற்கான முயற்சியில் துரிதமடைந்துள்ளது. பங்குச்சந்தையில் பங்குகள் மலிவாக தற்போது கிடைப்பது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருப்பினும், குறுகிய கால மற்றும் தின வர்த்தகர்கள் தங்களது ரிஸ்க் தன்மையை குறைத்து கொள்ள வேண்டிய தருணம் இது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பணத்தை செலுத்த தவறிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறும் – திவால் சட்டத்தில் புதிய மாற்றம்

பணத்தை செலுத்த தவறிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறும் – திவால் சட்டத்தில் புதிய மாற்றம்  

Failure to Pay is on the Blacklist – Changes in IBC Law

 

கம்பெனிகளுக்கான புதிய திவால் சட்டம் கடந்த 2015ம் வருடத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இச்சட்டம்(Insolvency and Bankruptcy Code) 2016ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. புதிய திவால் சட்டம்(IBC) ஏற்கனவே அமலில் இருக்கும் நிறுவனங்களை சார்ந்த சட்டத்தை ஒருங்கிணைக்கவும், நொடித்து போன மற்றும் திவால் நிலையில் உள்ள நிறுவனங்களில் தீர்வை காணவும் ஒற்றை கட்டமைப்பை உருவாக்க துணைபுரியும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

திவால் சட்டத்தின் மூலம் ஒரு நிறுவனத்தின் கடன் பிரச்னை 270 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின்(NCLT) மூலம் கடன் பெற்ற நிறுவனத்திடம் இருந்து கடன் தொகைகள் திரும்ப வசூலிக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டிருந்தது. திவால் சட்டம் மூலம் கடந்த ஆண்டு சுமார் 80,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் கூறப்பட்டுள்ளது.

 

திவால் நிலையில் தத்தளித்த நிறுவனங்களை மீட்க ஏற்கனவே பெரு நிறுவனங்கள் அதற்கான ஏலத்தில் பங்குபெற்று குறிப்பிட்ட தொகையை அளிப்பதாக கூறியுள்ளன. இந்நிலையில் திவால் சட்ட நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது திவால் நிலையில் உள்ள நிறுவனங்களை மீட்கும் பெரு நிறுவனங்கள் அதற்கான தொகையை உரிய நேரத்தில் செலுத்த வேண்டுமெனவும், அவ்வாறு செலுத்த தவறிய நிறுவனங்கள் அரசின் கருப்பு பட்டியலில் இடம் பெறும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

பொதுவாக திவால் நிலையில் உள்ள நிறுவனங்களின் பிரச்சனை 180 நாட்களுக்குள் தீர்வு செய்யப்பட வேண்டும். இருப்பினும், இந்த சட்டத்தில் கூடுதலாக 90 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. வங்கிகளின் பெரும்பாலான வாராக்கடன் நிலைக்கு(Bad Loans), இந்த திவாலான நிறுவனங்களே பொறுப்பாகும் போது, அந்த பிரச்சனைகளை களைந்து கடன் தொகையை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

கடந்த 2018ம் வருடத்தின் இறுதி நிலவர படி, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின்(National Company Law Tribunal) கீழ் 898 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 275 வழக்குகள் மட்டும் 270 நாட்களை கடந்தும் தீர்வு காணப்படவில்லை. மற்ற 166 வழக்குகள் 180 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

 

திவால் சட்டத்தின் மூலம் கடனில் தத்தளிக்கும் நிறுவனங்களை மீட்டெடுப்பதும், வங்கிகளின் வாராக்கடனை குறைக்கவும் அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இம்முறை மீட்கும் பெரு நிறுவனங்கள் தொகையை செலுத்த தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய நிறுவனங்களின் கோரிக்கைகள் எதிர்காலத்தில் நிராகரிக்கப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

5 விமான நிலையங்களை கைப்பற்றியுள்ளது அதானி நிறுவனம்

5 விமான நிலையங்களை கைப்பற்றியுள்ளது அதானி நிறுவனம்

Adani Infra wins as highest bidder to operate five airports in India

 

மத்திய அரசு கடந்த சில வருடங்களாக அரசு துறைகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை கொண்டு இயங்கி வருகிறது. பொது – தனியார் கூட்டு (Public Private Partnership) மாதிரியின் அடிப்படையில் அரசாங்கத்தை சார்ந்த பல துறைகளில் உலகளவிலான உயர்தர உட்கட்டமைப்பை கொண்டு வரும் முயற்சியில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தி வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டில் முதன்முறையாக தனியார் நிறுவனங்களை மட்டுமே கொண்டு, விமான நிலையங்களை இயக்குவதற்கான முயற்சியை கடந்த சில காலங்களாக மத்திய அரசு எடுத்து வந்தது. இதற்கான ஏல முறையை பொது-தனியார் கூட்டு மதிப்பீட்டு குழு (Public Private Partnership Appraisal Committee – PPPAC) கையாண்டு வருகிறது. இந்த குழுவின் உறுப்பினர்களாக நிதி ஆயோக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி, நிதி மற்றும் விமானத்துறை அமைச்சகங்களின் செயலாளர்கள் அடங்குவர்.

 

தனியார் நிறுவனங்கள் விமான நிலையங்களை  இயக்குவதற்கான ஏலத்தில் மொத்தம் பத்து நிறுவனங்கள் கலந்து கொண்டன. இவைகளின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 32 மற்றும் முதல் கட்டமாக ஆறு விமான நிலையங்களில் ஐந்து விமான நிலையங்களுக்கு  விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

 

ஏல முறை பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்(Bid per passenger basis) நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஏலத்தில் ஜி.எம்.ஆர்(GMR), பி.என்.சி.(PNC), அதானி(Adani Infra), ஆம்ப் கேப்பிடல்(Amp Capital), ஆட்டோ ஸ்ட்ரேட்(Autostrade), கொச்சி சர்வதேச விமான நிலையம் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. அறிவிக்கப்பட்ட ஆறு விமான நிலையங்களில் ஐந்து நிலையங்களில் அதானி  நிறுவனம், மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஏலத்திற்கான விற்பனை தொகையை அதிகமாக கொண்டிருந்தது.

 

திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு பயணி ஒருவருக்கு ரூ.168/- வீதம் கொடுத்து ஏலத்தில் முதலிடத்தை பிடித்தது அதானி. இதற்கு அடுத்தபடியாக கே.எஸ்.ஐ.டி.சி. நிறுவனம் பயணி ஒருவருக்கு ரூ. 135/- ஆக அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. இதே போல மங்களூரு விமான நிலையத்திற்கு அதானி இன்ப்ரா நிறுவனம் 115 ரூபாயும், கொச்சின் சர்வேதச நிறுவனம் 45 ரூபாயும், ஜி.எம்.ஆர். 18 ரூபாயை ஏல மதிப்பாக அறிவித்தது.

 

அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ விமான நிலையங்களுக்கும்(Airports Authority of India -AAI) அதானி நிறுவனம் அதிக மதிப்பை ஏலத்தில் அறிவித்திருந்தது. இதன் மூலம் சொல்லப்பட்ட ஐந்து விமான நிலையங்களை இனி அதானி இன்ப்ரா நிறுவனம் நிர்வாகம் செய்யும். கவுகாத்தி விமான நிலையத்திற்கான ஏல விற்பனை, செவ்வாய் கிழமை(26-02-2019) அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கவுகாத்தி(Guwahati) ஏல விற்பனை முடிந்தவுடன் நியமிக்கப்படும் நிறுவனங்களின் முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் அடிப்படையில் பார்த்தால் அதானி நிறுவனம் ஏற்கனவே 5 விமான நிலையங்களின் ஏலத்தில் முதலிடத்தில் உள்ளது.  ஏலத்தில் விமான நிலையங்களை கைப்பற்றும் நிறுவனங்கள் அடுத்த 50 வருடங்களுக்கு நிர்வாகம் செய்யலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

இ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

இ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

Employees Provident Fund Interest Rate History

 

தொழிலாளர்களுக்கான பி.எப். வட்டி விகிதத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தற்சமயம் 2018-19ம் நிதியாண்டுக்கான பி.எப். வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உள்ளது. வருங்கால வைப்பு நிதி(Employees Provident Fund) என்று சொல்லப்படும் பி.எப். க்கான வட்டி விகிதங்கள் கடந்த காலங்களில் எவ்வாறு இருந்துள்ளது என பார்ப்போம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 1952ம் வருடம் மார்ச் மாதத்தில் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான சட்டம்(EPF Act) நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் தங்களது நிறுவனத்தை இ.பி.எப். அமைப்பில்(EPFO) பதிவு செய்ய வேண்டும். இ.பி.எப். அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பி.எப். க்கான தொகையை தங்கள் தொழிலாளர்களின் வருமானத்தில் பிடித்தம் செய்திருக்க வேண்டும். அதே வேளையில் நிறுவனத்தின் பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்படும் தொகை அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில்(Bonds) மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந்த நிலையில், இனி பி.எப். தொகையை பங்குச்சந்தையிலும்(Equity exposure) முதலீடு செய்யலாம் என்ற சட்டம் சில காலங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. எனவே, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எப். தொகையின் ஒரு பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

EPF Interest Rate History 1952

1952ம் வருடம் இ.பி.எப். க்கான சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 1952-53ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட முதல் வட்டி விகிதம் 3 சதவீதமாகும். பின்னர் பி.எப். வட்டி விகிதங்கள்(Interest rate) நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க எண்களை சார்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்டன.

 

1976-77 மற்றும் 1977-78ம் நிதி ஆண்டுகளில் பி.எப். சந்தாதாரர்கள் தங்களது பி.எப். கணக்கில் எந்தவொரு பணத்தையும் எடுக்காத பட்சத்தில், 1978-79ம் நிதியாண்டில் 8.25 சதவீத வட்டியுடன் 0.5 சதவீத போனஸ் வட்டியும்(Bonus Rate) அளிக்கப்படும் என இ.பி.எப். வாரியத்தால் அறிவிக்கப்பட்டது.

 

1990ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு பி.எப். வட்டி விகிதம் 12 சதவீதமாக கொடுக்கப்பட்டது, இது இ.பி.எப். வரலாற்றில் அளிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி விகிதம். பின்னர் 2001ம் வருடம் முதல் பி.எப்.வட்டி விகிதம் குறைந்து கொண்டே வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட குறைந்த வட்டி விகிதமாக, 2011-12ம் ஆண்டு 8.25 சதவீதமாக இருந்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தொழிலாளர்களுக்கான பி.எப். வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு

தொழிலாளர்களுக்கான பி.எப். வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு  

The EPF interest rate hiked to 8.65 for FY 2018-19

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) நேற்று (21-02-2019) வெளியிட்ட தனது அறிக்கையில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்தியது. கடந்த ஐந்து வருடங்களில் தற்போது தான் இதற்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் நாம் வர்த்தக மதுரை தளத்தில் பொது வருங்கால வைப்பு நிதியின் கடந்த கால வட்டி விகிதங்களை(PPF Rate History) பற்றி பதிவிட்டிருந்தோம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 2014-15ம் நிதியாண்டில் 8.75 சதவீதமாக இருந்த பி.எப். வட்டி விகிதம் பின்னர் 2015-16ம் வருடத்தில் 8.8 % ஆகவும், 2016-17ம் ஆண்டில் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டில் (2017-18) ஐந்து வருட குறைவாக பி.எப். வட்டி விகிதம்(Provident Fund Interest rate) 8.55 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பி.எப். க்கான மொத்த வைப்பு தொகை(Annual Deposits) கடந்த 2017-18ம் ஆண்டில் ரூ.1,31,000 கோடியாக இருந்தது. நடப்பு வருடத்தில் இது ரூ.1,46,000 கோடியாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்டுள்ள 8.65 சதவீத வட்டியின் மூலம் 6 கோடி பி.எப். சந்தாதாரர்கள்(Subscribers) பயனடைவர் என கூறப்படுகிறது. அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் இல்லாத காலத்தில், தனியார் துறைக்கும் இந்த வருங்கால வைப்பு நிதி(PF) ஒரு நீண்டகால மற்றும் பாதுகாப்பு தரும் முதலீட்டு சாதனமாக அமைகிறது.

 

பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின்(EPS) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது பற்றியும் வாரியத்தின் சார்பில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த விஷயத்தில் அடுத்து வரவிருக்கும் குழு கூட்டத்தில் தான் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

 

நடப்பு நிதி வருடத்தில் மற்ற சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை காட்டிலும் பி.எப். வட்டி விகித அறிவிப்பு (மூத்த குடிமக்கள் திட்டம் தவிர்த்து) சற்று அதிகமாக தான் உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதிக்கான(PPF) சமீபத்திய வட்டி விகிதம் 8 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டத்திற்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் 8.50 சதவீதமாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இலவச சிபில் கிரெடிட் அறிக்கையை பெறுவது எப்படி ?

இலவச சிபில் கிரெடிட் அறிக்கையை பெறுவது எப்படி ?

How to get a Free CIBIL Credit score report ?

 

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, நாம் வங்கியில் கடன் கேட்டு போனால், வங்கி நம்மிடம் 6 மாத வருவாய் அறிக்கை, வருமான சான்றிதழ், நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தகவல்கள் மற்றும் அடமான சொத்துக்களின் விவரங்கள் என பல தகவல்களை கேட்டு பெறும். அப்போது நமக்கு வருமான சான்றிதழ் வாங்குவதே ஒரு நாள் வேலையாகி விடும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. நம் நாட்டில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் பான் எண்ணின்(PAN) சிறப்பம்சங்கள் வங்கிக்கடன் முறையை எளிமையாக்கி விட்டது எனலாம். பான் எண்ணின் தொடர் வளர்ச்சி இப்போது முற்றிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஆதார்(Aadhaar) என்னும் அடையாள முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்சமயம் இணைக்கப்பட்டுள்ளது. பான் மற்றும் ஆதார் எண் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நிதி விவரங்களை(Financial Position) சொல்வதாக அமைந்துள்ளன.

 

இப்போதைய காலத்தில், நாம் வங்கியில் கடன் கேட்டு சென்றால், வங்கி நம்மிடம் எதுவும் கேட்க தேவையில்லை. அவர்களது கிளை சார்பாக வேண்டுமானால் சில சான்றிதழ்களின் நகல்களை கேட்கலாம். நமக்கான வங்கிக்கடனை பரிசீலனை செய்யும் போது, நமது பான் எண்ணை(PAN) கொண்டு கடன் தகுதி நிலையை(Credit Score) ஆய்வு செய்வர். இந்த கடன் தகுதி நிலை என்பது கடன் தகவல் நிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் அறிக்கையாகும். நமக்கான தகவல்களை வங்கிகள், இது போன்ற நிறுவனங்களிடம் இருந்து கேட்டு பெறும்.

 

வங்கிகளில் கடன் பெற நமது வருவாயின் மதிப்பு(Annual Income) மட்டும் போதாது, மாறாக நமது கடன் தகுதியும் அவசியம். கடன் தகவல் நிறுவனங்கள் என்று சொல்லப்படும் கிரெடிட் ஏஜென்சிகள்(Credit Agencies) நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரின் நிதி (பான் மற்றும் வங்கிக்கணக்கு எண் மூலம்) தொடர்பான தகவல்களை சேகரித்து அதனை ஒரு தரவுகளாக பதிவு செய்து வருகிறது. நாம் ஏற்கனவே எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தோம், கடந்த காலத்தில் கடனை முறையாக செலுத்தியுள்ளோமா, நமது வரவு-செலவு அறிக்கை எவ்வாறு இருந்துள்ளது மற்றும் கிரெடிட் கார்டை(Usage of Credit cards) பயன்படுத்தும் தன்மை போன்ற தகவல்கள் கிரெடிட் ஏஜென்சி வசம் இருக்கும். இந்த தகவல்களை தான் வங்கிகள் நாம் கடன் கேட்டு போகும் போது, அதன் அறிக்கையை ஆராயும்.

 

கிரெடிட் ஏஜென்சிகள் வங்கிகள் சார்ந்த தகவல் மட்டுமில்லாமல், மற்ற நிதி சேவை நிறுவனங்களிடம்(NBFC) உள்ள தனி நபரின் நிதி சார்ந்த தரவுகளையும் பதிவு செய்யும். தனி நபரின் நிதி நிலைமைகளை(Individual’s Financial Status) இது பொதுவாக பிரதிபலிக்கும். இதனை தான் நாம் கடன் தகுதி அறிக்கை(Credit Score Report) என்கிறோம்.

 

இன்று நம் நாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட கிரெடிட் ஏஜென்சிகள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானவை(Credit Information Companies) – Transunion CIBIL, Experian PLC, Highmark, Equifax. இவை பெரும்பாலும் நன்கு அறியப்பட்டவை மற்றும் நம்பகமான கடன் தகுதி அறிக்கையை தயார் செய்யும் நிறுவனங்களாகும். சிபில்(Credit Information Bureau India Limited -CIBIL) மிகவும் பழமையான மற்றும் நம்பகமான கடன் தகுதி நிலையை அறிவிக்கும் பெரிய நிறுவனமாகும்.

 

பொதுவாக, கிரெடிட் ஏஜென்சிகளின் வேலை, வங்கிகள் மற்றும் நிதி சேவை நிறுவனங்களால் அளிக்கப்படும் தனிநபர் தகவல்களை பெறுதல், அதனை பராமரித்தல் மற்றும் அந்த நபருக்கு வங்கிகள் கடன் அளித்தால், அவரால் தற்சமயம் கடனை செலுத்தக்கூடிய நிதி நிலைமை போன்றவற்றை கொண்டிருக்கும். கிரெடிட் அறிக்கையின் மூலம் வங்கிகள் வாடிக்கையாளரின் நிதி நிலைமையை அறிந்து, அதற்கேற்றவாறு கடனை பரிசீலிக்கும்.

 

தனிநபர் ஒருவரின் கிரெடிட் அறிக்கையை பெறுவதற்கு கிரெடிட் ஏஜென்சிகள் ரூ. 300 லிருந்து 1000 ரூபாய் வரை கட்டணமாக பெறுகிறது. இதனை வங்கிகள் பெறும் போது, கட்டணத்தை நம்மிடம் இருந்து வசூல் செய்யும். நாம் விண்ணப்பத்திருக்கும் கடன் மதிப்பை கொண்டு, இந்த கிரெடிட் அறிக்கையை பெறுவது அவசியமாகும். கிரெடிட் அறிக்கையை பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட வங்கியோ அல்லது வாடிக்கையாளரோ கிரெடிட் அறிக்கை நிறுவனங்களிடம் விண்ணப்பிக்கலாம்.

 

இப்போதெல்லாம், இணைய பயன்பாடு அதிகரித்து விட்டதால், கிரெடிட் ஏஜென்சிகள் தனிநபருக்கான அறிக்கையை ஆன்லைன் முறையில்(Get Free online Credit report) கொண்டு வந்து விட்டன. இது போக பல வலைத்தளங்கள் கிரெடிட் அறிக்கையை ஏஜென்சிகளிடம் இருந்து பெற்று தருகின்றன. பைசா பஜார்(Paisa Bazaar), பேங்க் பஜார், கிளியர் ஸ்கோர்(Clear Score) என மூன்றாம் தரப்பு வலைதள நிறுவனங்கள் இது போன்ற அறிக்கையை ஒரு முறை மட்டும் இலவசமாக அளிக்கின்றன. தற்போது கிரெடிட் ஏஜென்சிகளும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இலவச கிரெடிட் அறிக்கையை தருகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு முறை மட்டும் செல்லுபடியாகும் அறிக்கையை இலவசமாக அளித்து வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கை தேவைப்படும் போது அதற்கான கட்டணங்கள் பொருந்தும்.

 

சிபில் கிரெடிட் ஸ்கோர்(CIBIL Score) அறிக்கையை மிகவும் எளிமையான முறையில் பெறலாம். நாம் மேற்சொன்ன நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு பார்வையிடுங்கள். இலவச கடன் அறிக்கை அல்லது சிபில் அறிக்கையை பெறுவதற்கான லிங்கை பாருங்கள். ஒரு புதிய கணக்கை இலவசமாக ஆரம்பியுங்கள். பின்னர் உங்களது பெயர், பான் எண், பிறந்த தேதி, முகவரி மற்றும் சில தகவல்களை நீங்கள் பதிவு செய்ய வேண்டியிருக்கும். தேவையான தகவல்களை சமர்பித்த பின், உங்களது கிரெடிட் அறிக்கை திரையில் தெரியும். சில நிறுவனங்கள் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும்.

 

நீங்கள் உங்கள் கடன் தகுதி நிலை அறிக்கையில்(Credit reporting), அதிக அல்லது சாதகமான மதிப்பை(Medium to High) பெறுகிறீர்கள் எனில், வங்கிகளில் எளிதாக கடன் பெறும் வாய்ப்பு அதிகம். அறிக்கையில் மிகவும் குறைவான மதிப்பெண் அல்லது வங்கிகளை திருப்திப்படுத்த கூடிய மதிப்பெண் இல்லை(Medium to low) என்றால், வங்கிகள் உங்களுக்கு கடன் அளிப்பதை தாமதப்படுத்தலாம் அல்லது விண்ணப்பத்தை நிராகரிக்கலாம். எனவே, நீண்ட கால நோக்கில் ஒரு நல்ல கடன் மதிப்பீட்டை நாம் பராமரிக்கும் போது, நமக்கான அறிக்கை எண்களும் சாதகமாக இருக்கும். நமக்கு அவசர காலத்தில் தேவையான கடன்  தொகையும் உடனடியாக கிடைக்க பெறும்.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com