வருகிறது ரெய்ட்(REIT) ரியல் எஸ்டேட் முதலீடு – சாதகங்களும், பாதகங்களும்
India’s First Real Estate Investment Trust(REIT) Opportunity – Advantages & Disadvantages
ரியல் எஸ்டேட் முதலீடு அறக்கட்டளை என்னும் ரெய்ட்(REIT) அமைப்பு கடந்த 2014ம் ஆண்டு முதல் செபியால்(SEBI) ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த துறையில் இதுவரை எந்த முதலீடும் திரட்டப்படாத நிலையில், தற்போது பொது மக்களிடையே முதலீட்டை பெறும் நோக்கத்தில் உள்ளது ரெய்ட். ரெய்ட் என்னும் அமைப்பு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை போன்று செயல்படும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பரஸ்பர நிதிகள் பொதுவாக பல்வேறு முதலீட்டாளர்களிடையே பெற்ற தொகையை பங்குகள், அரசாங்க பத்திரங்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யும். இதனை போன்றே ரெய்ட் முதலீடும் பொது மக்களிடம் பணத்தை பெற்று கொண்டு அதனை நிலம் மற்றும் வீட்டு மனைகளில் முதலீடு செய்யும். முதலீடுகளின் வாயிலாக வாடகை வருமானம், நிலம் மற்றும் மனை விற்பனை மூலம் ஆதாயம் ஆகியவை பெறக்கூடும். இவை முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும்.
வீட்டு மனையில் நாம் நேரிடையாக அதிக பணத்தை முதலீடு செய்யாமல் ரெய்ட் அமைப்பின் மூலம் நம்மிடம் உள்ள குறிப்பிட்ட தொகைக்கு மட்டும் முதலீடு செய்து விட்டு, வருவாயை ஈட்டலாம். நிலம் மற்றும் வீட்டு வாடகை மூலம் ஒரு குறிப்பிட்ட கால வாரியாக வருமானம் கிடைக்கும். இது போக, சில காலங்களுக்கு பிறகு அந்த மனை விற்கப்படும் நிலையில், மூலதன ஆதாயமும் நமக்கு கிடைக்கப்பெறும்.
ரெய்ட் அமைப்பில் செய்யப்பட்ட முதலீட்டை நாம் இடையில் திரும்ப பெற விரும்பினால், பங்குச்சந்தையில்(Stock Exchange) நம்மிடம் உள்ள ரெய்ட் யூனிட்களை விற்று பணமாக பெற்று கொள்ளலாம். சுருங்க சொன்னால், இந்த முதலீடு மியூச்சுவல் பண்ட் முதலீட்டை போன்றே அமையப்பெறும்.
ரெய்ட் அமைப்பில் முதல் நிறுவனமாக பெங்களூருவை சேர்ந்த எம்பசி பார்க்ஸ்(Embassy Office Parks) நுழைய இருக்கிறது. முதலீடு திரட்டப்படும் நாள் வரும் 18ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி(March 18-20) வரை ஆகும். பொதுவெளியில்(Public Issue) திரட்டப்பட உள்ள தொகை சுமார் 4750 கோடி ரூபாய். இதற்கு ஐ.சி.ஆர்.ஏ.(ICRA) ஏஜென்சியின் ‘AAA’ ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டின் விலை 300 ரூபாயாகவும், குறைந்தபட்ச வாங்க வேண்டிய பங்குகளின் எண்ணிக்கை 800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெய்ட் முதலீட்டில் நிறுவன முதலீட்டாளர்களுக்கு 75 சதவீதமும், நிறுவனமல்லாத மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு 25 சதவீத பங்களிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலீட்டின் மூலம் பெறப்படும் வருமானம், வரி நிபந்தனைக்கு உட்பட்டது. அதே வேளையில், பெறப்படும் ஈவுத்தொகைக்கு(Dividend) வரி எதுவும் செலுத்த தேவையில்லை.
சாதகமான அம்சமாக உள்ளவை: ஒழுங்குமுறை ஆணையமாக செபி செயல்பட்டு வருவது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். ரெய்ட் முதலீடு அனுபவமிக்க தொழில் முறை நிர்வாகிகளை கொண்டு இயக்கப்படுவதால், நஷ்டத்திற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. வீட்டு மனை துறையின் மூலம் தொடர் வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு.
பொதுவாக நாம் மனையை வாங்கினால், அதனை உடனடியாக விற்று பணம் பண்ண முடியாது. ஆனால் ரெய்ட் முதலீட்டின் மூலம் உடனடியாக சந்தையில் நாம் வைத்திருக்கும் மனைகளை (யூனிட்களை) விற்று பணம் பெறலாம்.
பாதகங்கள்: ரெய்ட் முதலீட்டில் குறைந்தபட்ச மூலதனம் ரூ. 2 லட்சமாக செபி நிர்ணயித்துள்ளது சிறு முதலீட்டாளர்களுக்கு பாதகமான விஷயம். இருப்பினும், காலப்போக்கில் இவற்றில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். சமீப காலங்களாக ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பார்த்த வருமானம் அவ்வளவாக கிடைப்பதில்லை. மனைகளின் விற்பனை விலையும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை எனலாம். இதனால் நமக்கு கிடைக்கப்பெறும் வருவாய், வங்கி வைப்பு நிதிகளின் வட்டி விகிதத்தை(Bank FD Rates) ஒட்டியே காணப்படும்.
இந்த மாதம் வெளிவர உள்ள முதலீடு தான் ரெய்டின் முதல் வெளியீடு ஆகும். எனவே, இந்த துறை இனிவரும் காலத்தில் எவ்வாறு வளரும் என நாம் சற்று பொறுமையாக காத்திருப்போம். அதுவரை நாம் பரஸ்பர நிதி திட்டங்களை(Real Estate Sector Funds) முதலீட்டு வாய்ப்பிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை