ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை, உக்ரைன்-ரஷ்யா போர், ஓங்கும் பணவீக்கம் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?
Things to do as an Investor in the Economic or War Crisis
2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக உலக பொருளாதார வீழ்ச்சி, தேவைக்கும்-உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல், பொருட்கள் மற்றும் சேவையை பெறுவதில் இடையூறு, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டது. இதன் மூலம் நாம் புதியதொரு இயல்பு வாழ்க்கையை(New Normal) தொடர வேண்டிய மாற்றம் நிகழ்ந்தது.
கடந்த ஓராண்டாக பொருளாதார நிலை ஓரளவு மேம்பட்டு வந்திருந்தாலும், 2020ம் ஆண்டு உலகளவில் வீழ்ந்த உலக பங்குச்சந்தை குறியீடுகள் வேகமாக மீண்டெழுந்தது. வரலாற்றில் மிகவும் குறுகிய காலத்தில் மீட்டெடுக்கப்பட்ட சந்தை காலமாக இவை சொல்லப்படுகிறது. புதிய உச்சத்தை அடைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அதிக ஏற்ற-இறக்கத்துடன் பக்கவாட்டில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை குறியீடுகள் பணவீக்க விகிதம் மற்றும் வங்கி வட்டி விகித மாற்றத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தற்போது உக்ரைன்-ரஷ்ய போர் நிலையும் தொற்றி கொண்டன. ஒவ்வொரு நாள் வர்த்தகத்தின் ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக ஒவ்வொரு தகவலும் சொல்லப்படுவதுண்டு. நடப்பு சந்தை இறக்கத்திற்கு உக்ரைன்-ரஷ்ய போர் மட்டுமே இப்போது காரணமாக அமைந்து விட்டது.
பொதுவாக நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருப்பதற்கான குறியீடாக அந்நாட்டின் பங்குச்சந்தை, தொழிற்துறை மற்றும் வீட்டுமனை(Realty) வளர்ச்சியை கொண்டிருக்கும். இதுவே பொருளாதார மந்தநிலையில் இருக்கும் போது, மேலே சொல்லப்பட்டவை இறக்கத்திலும், இதற்கு மாறாக தங்கம் மற்றும் கடன் பத்திரங்களின் தேவை அதிகரிக்கும். அதாவது சுருக்கமாக சந்தை வீழும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது கடன் பத்திரங்களின் தேவை அதிகரிப்பதும் பொருளாதார உலகின் இயல்பு.
எனவே பொருளாதாரத்தில் தேவைக்கும்-இருப்புக்குமான இடைவெளியே பெரும்பாலும் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கிறது. முதலாம் உலக போருக்கு பின்பு, அடுத்தவொரு நிகழ்வு இது போன்று நடைபெறாது என நினைத்திருந்த நிலையில் இரண்டாம் உலகப்போரை இவ்வுலகம் சந்திக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. ஜெர்மனி மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலைக்கு(Recession) செல்ல உள்ளதாக அந்நாட்டின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கிறது. உக்ரைன்-ரஷ்ய போர் ஒரு வாரத்தில் முடியுமா, இல்லையெனில் இன்னும் பல காலம் எடுத்து கொள்ளுமா என்பதனை நம்மால் கணிக்க இயலாத ஒன்று.
அதே வேளையில், ஒவ்வொரு நாட்டில் ஏற்பட்டுள்ள கடன் அதிகரிப்பும் அதனை சார்ந்த பணவீக்க விகிதமும் தான் வரக்கூடிய நாட்களில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றையும் நாம் எதுவும் செய்து விட முடியாது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வேலை மத்திய வங்கிக்கும், அரசுக்கும் தான்.
வரக்கூடிய காலகட்டங்கள் நமக்கு மீண்டும் புதியதொரு இயல்பு நிலையை அறிவுறுத்தலாம். குறுகிய காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவையின் விலை அதிகரிக்கலாம். பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்படலாம். நீண்டகாலத்தில் பொருளாதாரம் ஏற்றமடைய கூடிய வாய்ப்பு தென்பட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகமாக உள்ளது.
இருப்பினும், முதலீட்டாளராக நாம் நம்மால் முடிந்த சில முன்னெடுப்புகளை செய்ய முடியும்.
- எதிர்வரும் சவால்களை சந்திக்க: உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்குமான நிதி பாதுகாப்பை(Financial Protection) உறுதி செய்து கொள்ளுங்கள். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் பேரில் போதுமான டேர்ம் காப்பீடு தொகை, விபத்து காப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மருத்துவ காப்பீட்டை உறுதி செய்துள்ளீர்களா ?
- வேலையிழப்பு அல்லது தொழிலில் மந்தநிலை ஏற்படக்கூடிய காலத்தை சமாளிக்க குறைந்தது ஆறு மாதம் முதல் இரண்டு வருடத்திற்கு தேவையான அவசர கால நிதியை(உங்களது மாத வருமானத்தின் மடங்குகளில்) தயார் செய்து விட்டீர்களா ?
- நிதி இலக்குகளுக்கான(Financial Goals) சேமிப்பு மற்றும் முதலீட்டு தொகை தடையேதும் இல்லாமல் செல்கின்றனவா ?
- பொதுவாக உங்களது நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds) பயன்படுத்துங்கள். அடுத்த தலைமுறைக்கு தேவையான செல்வவளத்தை ஏற்படுத்த நேரடி பங்குகளை(Direct Equity) கவனியுங்கள். குறுகிய கால தேவைகளுக்கு பங்குச்சந்தையை பயன்படுத்த வேண்டாம்.
- பங்குச்சந்தை இறங்கினால் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதே வேளையில் சிறு துளி பெரு வெள்ளம் போல, சிறுக சிறுக முதலீடு செய்து வாருங்கள். ஒரே நாளில் பணக்காரராக வேண்டும் என்று பங்குச்சந்தையில் உங்களது கைவிரல்களை சுட்டு கொள்ள வேண்டாம்.
- எதனையும் நாம் நேர்மறையாக அணுக வேண்டுமென்றாலும், பங்குச்சந்தையில் மட்டும் பங்கு நிறுவனங்களை கண்டறியும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். பைசாவில் இருந்து பத்து ரூபாய்க்கும், நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கும் குறுகிய காலத்தில் ஏற்றமடையும் பங்குகள் அனைத்தும் நல்ல நிறுவன பங்குகள் என்று சொல்லி விட முடியாது.
- பங்குச்சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச இறக்கம் கண்டிருக்கும் நாட்களில் பெரும்பாலும் கடந்த இரண்டு வருடங்களில் தான் நடைபெற்றுள்ளது. எனவே நாம் இதனை ஒரு வாய்ப்பாக அமைத்து கொள்ள, நல்ல நிறுவன பங்குகளை அலசி ஆராய்ந்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.
- பங்குகளை அவசரமாக வாங்க வேண்டும் என்ற நிலையை எப்போதும் ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். அதற்கென கிடைக்கும் உள்ளார்ந்த விலையை(Intrinsic or Fair Value) எப்போதும் பரிந்துரையுங்கள். சில நேரங்களில் நல்ல நிறுவன பங்குகள் நாம் நினைக்கக்கூடிய விலையில் கிடைக்கப்பெறாது.
- இனிவரும் காலங்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலம் என்பதனை மனதில் நிறுத்தி, அஸெட் அலோகேஷன் முறையை கடைபிடியுங்கள். வருடத்தின் எல்லா நாட்களிலும் பங்குச்சந்தை மட்டுமே ஏற்றம் பெறும், தங்கம் எப்போதும் விலையேறும் என எண்ணி விட வேண்டாம். பல முதலீட்டு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்வது, நட்டத்தை குறைத்து லாபத்தை அதிகப்படுத்தும்.
- சந்தை உச்சத்தில் இருக்கும் போது அனைத்து பங்குகளையும் விற்று விட்டு, இறக்கத்தில் வாங்கி வைக்கிறேன் என உங்களால் எப்போதும் சரியாக கணிக்க இயலாது. அஸெட் அலோகேஷன்(Asset Allocation) செய்வதன் மூலம் மட்டுமே, நீங்கள் பெரும்பாலான வாய்ப்புகளை பயன்படுத்த முடியும்.
- பங்குச்சந்தை அடுத்த சில வருடங்களுக்கு பெரும் வீழ்ச்சியை கண்டால் உங்களது முதலீட்டு உத்தி என்ன ? (நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தும்)
- போன்சி(Ponzi) போன்ற ஏமாற்று வழிகளின் மூலம் நீங்கள் மிக விரைவாக பணம் சேர்த்து விட முடியும் என நம்புகிறீர்களா, மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தவிர்த்து விட முடியமா என்ன ?
- இறுதியாக உங்களது உயிலை(Will) தயார் செய்ய மறவாதீர்கள். இதற்கு வயது வரம்பு பெரிதாக இல்லை. 18 வயது நிரம்பியிருந்து சுயநிலையில் உங்களது உயிலை எழுதலாம். உங்களது காலத்திற்கு பின்பு ஏற்படும் நிதிச்சிக்கலை உயில் எழுதுவதன் மூலம் தவிர்க்கலாம். உலக பொருளாதார மந்தநிலையையோ, பணவீக்கத்தையோ நம்மால் கணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால் நமக்கான பாதுகாப்பையும், நிதி மேம்பாட்டையும் செய்து கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை