2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ? 

Global Market Indices in the year 2022 – Returns %

2022ம் ஆண்டில் பல்வகை முதலீடுகளின்(Asset Classes) வளர்ச்சி விகிதத்தை காணும் போது, உலகளவில் அதிகபட்சமாக தங்கத்தின் மீதான முதலீடு 11 சதவீதமும், பெரு நிறுவனங்களின் பங்கு முதலீடு(Large Cap Equity) 3 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.5 சதவீதமும், தனியார் கடன் பத்திரங்கள் 2.7 சதவீதமும், அரசு பத்திரங்கள் 2.3 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. மாறாக நடுத்தர மற்றும் குறு நிறுவனங்களின் பங்கு முதலீடு இறக்கத்தை சந்தித்துள்ளன.

கடந்த பத்து வருட காலத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீடு 2015ம் ஆண்டை தவிர்த்து(-4.1 %) பார்க்கையில், அனைத்து வருடமும் ஏற்றத்தில் தான் முடிந்துள்ளன. தங்கத்தின் மீதான முதலீடு 2019 மற்றும் 2020ம் வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளன. உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் அதிகரித்துள்ளது.

பொதுவாக பொருளாதார மந்தநிலை காணப்படும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், மீண்டெழும் பொருளாதாரத்தில் தங்கத்தின் வருவாய் குறைவதும் இயல்பே. பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, பங்கு முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கான ஏற்றம் காணப்படும்.   

2022ம் வருடத்தில் வளர்ந்த நாடுகளின் பங்குச்சந்தை முதலீடு பெரும்பாலும் இறக்கத்தையே சந்தித்துள்ளது. சொல்லப்பட்ட வருடத்தின் முடிவில் அமெரிக்காவின் நாஸ்டாக்(Nasdaq) குறியீடு 33 சதவீதம் சரிந்துள்ளது. இந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப குறியீடு(FAANG) மட்டும் 40 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளது. ஜெர்மனியின் டாக்ஸ்(DAX) 12 சதவீதமும், ஜப்பானின் நிக்கி(Nikkei) 9 சதவீதமும், ஐரோப்பாவின் ஸ்டாக்ஸ்(Stoxx) 11 சதவீதமும் இறக்கத்தை சந்தித்துள்ளது.

வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஐக்கிய ராச்சியத்தின் புட்சி(FTSE) குறியீடு மட்டும் ஒரு சதவீதம் என்ற அளவில் 2022ம் ஆண்டு ஏற்றம் பெற்றுள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் குறியீடுகள் 14 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்துள்ளன. அதிகபட்சமாக ரஷ்ய நாட்டின் பங்குச்சந்தை குறியீடு 39 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தோனேசிய மற்றும் சிங்கப்பூர் நாட்டின் பங்குச்சந்தை குறியீடுகள் 4 சதவீதம் என்ற அளவில் ஏற்றமடைந்துள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்திய பங்குச்சந்தை மட்டுமே 5 சதவீதம் என்ற அளவில் ஏற்றம் பெற்று முதலிடத்தில் உள்ளது. நிப்டி (Nifty) தேசிய பங்குச்சந்தையில் உலோகத்துறை, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள்(CPSE) மற்றும் தனியார் வங்கிகளின் குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேல் வருவாயை தந்துள்ளது. அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகளின் குறியீடு 70 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

மாறாக, தகவல் தொழில்நுட்ப துறை 26 சதவீதமும், மருந்துத்துறை(Pharma) 11 சதவீதமும், ரியல் எஸ்டேட் குறியீடு 11 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களிடையே அதிகமாக புழங்கும் எப்.எம்.சி.ஜி.(FMCG) துறை 17 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2022ம் ஆண்டில் 52 சதவீதமும், கோல் இந்தியா 54 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ ஆகிய பங்குகளின் விலை 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளன. 

வரக்கூடிய காலம் பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான நிலையாக இருப்பதால், பங்கு முதலீட்டில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும். நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாள தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s