பே.டி.எம் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் வாரன் பப்பெட்
Warren Buffet’s Berkshire Hathaway investing in Paytm
உலகின் பெரும் பணக்காரர் வாரன் பப்பெட் (Warren Buffet) முதலீடு செய்வதிலும், நிறுவனங்களை கையகப்படுத்துவதிலும் வல்லவர். தனது 11வது வயதிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளும் வாரன் பங்குச்சந்தையின் மூலம் நீண்ட காலத்தில் கோடிகளில் கோடிகளை சம்பாதித்தவர்.
வாரன் பப்பெட் முதலீட்டு கொள்கைகள் பொதுவாக நீண்ட கால அடிப்படையிலும், சந்தையில் மதிப்பு குறைந்த பங்குகளும் தான். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் அவர் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை. அதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தினை வாங்குவதில் வாரன் முனைப்பு காட்டியதையும் மறுக்க முடியாது.
ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் வாரனின் பெர்க்சயர் ஹாத்தவே (Berkshire Hathaway) நிறுவனம் 5 % பங்குகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரின் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனத்தின் அதிகார பூர்வ தகவலின் படி, அந்த நிறுவனம் பே.டி.எம். (Paytm) நிறுவனத்தில் சுமார் 4 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
Paytm தளத்தின் நிறுவனம் ஒன்97 (One97 Communications Ltd) ஆகும். இந்த நிறுவனத்தில் தான் வாரென் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதன்முறையாக வாரன் பப்பெட் முதலீடு செய்ய உள்ளார், அதுவும் தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள நிறுவனத்தில் என்பது பெரும்பாலான முதலீட்டாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்த முதலீட்டின் மதிப்பு சுமார் 2500 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே Paytm நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா நிறுவனமும் முதலீடு செய்துள்ளது. அலிபாபா நிறுவனம் 25 சதவீத பங்குகளை Paytm நிறுவனத்தில் கொண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் Paytm நிறுவனம் 1200 கோடி ரூபாய் நஷ்டத்தை காட்டியுள்ளது. இருப்பினும் இந்த நிறுவனம் 84,000 கோடி ரூபாய் மதிப்புடையதாக கணிக்கப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை