செப்டம்பர் மாதத்திலும் வெளியேறிய அந்நிய முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கிய உள்ளூர் முதலீட்டாளர்கள்
FII / DII Trading Activity – September 2019
கடந்த செப்டம்பர் மாதத்தின் இரண்டு வர்த்தக நாட்களில் இந்திய பங்குச்சந்தை பெரிய ஏற்றத்தை கண்டிருந்தது. நிதி அமைச்சரின் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அறிவிப்பை அடுத்து, சந்தை ஏற்றம் பெற்றது நினைவிருக்கலாம். இருப்பினும், பொருளாதாரம் சார்ந்த காரணிகள் இன்னும் வளர்ச்சி பாதைக்கு திரும்பாததால் அந்நிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ. 1.03 லட்சம் கோடிக்கு பங்குகளை வாங்கியும், ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பிற்கு பங்குகளை விற்றும் உள்ளனர். அவர்களது நிகர விற்பனை கடந்த மாதத்தின் முடிவில் 6,624 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
அதே வேளையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ. 84,873 கோடி மதிப்பில் பங்குகளை வாங்கியும், 72,382 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர். எனவே உள்ளூர் முதலீட்டாளர்களின் நிகர கொள்முதல் 12,490 கோடி ரூபாயாக இருந்தது. உள்ளூர் முதலீட்டாளர்கள் கடந்த 5 மாதங்களாக பங்குகளை வாங்கி குவித்துள்ளனர்.
சொல்லப்பட்ட மாதத்தில் 19 நாட்கள் வர்த்தகம் நடைபெற்றது. இவற்றில் அந்நிய முதலீட்டாளர்கள் 14 நாட்கள் பங்குகளை விற்றுள்ளனர். அதே சமயம் உள்ளூர் முதலீட்டாளர்கள் 17 நாட்கள் பங்குகளை வாங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் நடப்பாண்டு மே மாதம் முதல் பங்குகளை விற்று வருகின்றனர். இந்திய சந்தையில் நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களின் பங்குகள் விலை பெருவாரியான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே நேரத்தில் லார்ஜ் கேப்(Large Cap) என சொல்லப்படும் பெரு நிறுவன பங்குகளின் விலை அதிக மதிப்பில் காணப்படுகின்றன.
உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை தீர்வு பெறாமல் உள்ளது. இரு நாடுகளிடையேயான வர்த்தக போர், கச்சா எண்ணெய் நாடுகளில் காணப்படும் எல்லை பதற்றம், உள்நாட்டில் நிலவும் பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகியவை சந்தைக்கு பாதகமாக உள்ளன.
வரவிருக்கும் நாட்களில் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு(GDP) மற்றும் வங்கி வட்டி விகிதம் போன்றவை சந்தையை நகர்த்தும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை