Tag Archives: Mutual Funds Investing

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

Income Tax rates for Mutual Fund Investments – Individuals – FY 2022-23 (AY 2023-24)

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாட்டின் பட்ஜெட் தாக்கலில் வருமான வரி விகிதங்கள் சார்ந்த மாற்றங்கள் நிறைய சொல்லப்பட்டிருந்தது. நடப்பு 2022-23ம் நிதியாண்டுக்கான வரி விகிதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds) மூலம் கிடைக்கப்பெறும் வருவாய்க்கான வரி விகிதங்களும் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பொறுத்தவரை உள்ளூர் முதலீட்டாளர்கள்(Resident) மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) என வரி விதிப்பு முறை தனித்தனியாக அமைந்துள்ளது. திட்டங்களின் அடிப்படையில் காணும் போது பங்கு சார்ந்த திட்டங்களுக்கும், பங்கு சாராத திட்டங்கள் என வரி விதிப்பு முறையும் வேறுபட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கான, அதாவது 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி விகிதங்கள் குறுகிய கால மூலதன ஆதாயம்(Short term Capital Gains) மற்றும் நீண்டகால மூலதன ஆதாயம்(Long term Capital Gains) என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இங்கே சொல்லப்படும் காலம்(Short or long term) என்பது வருமான வரி விகிதங்களுக்கான கணக்கீட்டு காலம் மட்டுமே, அவை ஒரு குறிப்பிட்ட திட்டங்களில் மேற்கொள்ளப்படும் காலமல்ல. எனவே நாம் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்யவிருந்தாலும், மூலதன ஆதாய  வரி என்பது நாம் நம் முதலீட்டை விற்பனை செய்யும் காலத்தினை பொறுத்து வரி விகிதங்கள் மாறுபடும்.

பொதுவாக பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் நாம் அதனை விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், ஒரு வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் சொல்லப்பட்டு வரி விதிக்கப்படும். இதுவே பங்கு சாராத திட்டங்களுக்கு(Debt Mutual Funds or other than Equity oriented schemes) முதலீடு செய்த மூன்று வருடத்திற்குள் விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், மூன்று வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும்.

எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்கையில் ஒவ்வொரு மாதாந்திர அல்லது வாராந்திர முதலீடும், வரி விகிதத்தை பொறுத்தவரை தனித்தனி முதலீடாக கருதப்படும். உதாரணமாக ஜனவரி மாதத்தில் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, சொல்லப்பட்ட முதலீட்டு தேதியிலிருந்து(ஜனவரி 5) கணக்கிடப்படும். இதுவே பிப்ரவரி மாதம் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு, தனி முதலீடாக கருதப்பட்டு அவை பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, காலத்தை சார்ந்து வரி விகிதங்கள் மாறுபடும். இந்த குழப்பங்கள் பெரும்பாலும் வரி சேமிப்பு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில்(ELSS) முதலீடு செய்வோருக்கு ஏற்படும்.

 ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை மட்டும்(Lumpsum investment) செய்யப்படும் முதலீடாக இருக்கும் நிலையில், முதலீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து விற்பனை தேதியை கணக்கிடுகையில் சிரமம் இருக்காது. எஸ்.ஐ.பி. முறையில் செய்யப்படும் முதலீட்டிற்கு மட்டும் இந்த கவனம் தேவை. எனினும், வரி கணக்கீட்டினை பொறுத்தமட்டில் இன்றைய நிலையில் பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்த கணக்கீட்டு அறிக்கையை முதலீட்டாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. எனவே வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த அறிக்கையை பயன்படுத்தி கொள்ளலாம்.

2018ம் ஆண்டுக்கு முன்பிருந்து, நீங்கள் பங்குகள் அல்லது பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகிறீர்களா ? (உங்களுக்கான பதிவு தான் இது)

உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15 சதவீதமும், நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதமும் விதிக்கப்படும். நீண்டகால மூலதன ஆதாயத்தில் கிடைக்கப்பெறும் முதல் ரூ. 1 லட்சத்திற்கு வரி எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாயத்திற்கு மட்டுமே 10 சதவீத வரியாகும்.

மியூச்சுவல் பண்ட் – தனிநபர் வரி விகிதங்கள் – நிதியாண்டு 2022-23 (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)

முதலீட்டு பிரிவு

தனிநபர் – உள்ளூர் முதலீட்டாளர் 

வெளிநாடு வாழ் இந்தியர் 

பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

15%

15%

நீண்டகால மூலதன ஆதாயம் 

10%*

10%*

பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

நீண்டகால மூலதன ஆதாயம் 

பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20%

10% – (பட்டியலிடப்படாத)

20% – (பட்டியலிடப்பட்ட மற்றும் பணவீக்க விகித சரிக்கட்டலுடன்)

வர்த்தக மதுரை | www.varthagamadurai.com

* ஒரு லட்சம் ரூபாய் வரையிலான(குறிப்பிட்ட நிதியாண்டில்) லாபத்திற்கு வரி எதுவும் செலுத்த தேவையில்லை. ஒரு லட்சத்திற்கும் மேலான லாபத்திற்கு மட்டுமே 10 சதவீத வரி. 

இதுவே பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய  வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பின் அடிப்படையில்(Individual’s Income Tax Slab) அமைகிறது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக, பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு (Indexation Benefit) 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பணவீக்க விகிதத்திற்கான சரிக்கட்டல் மதிப்பை(Cost Inflation Index) ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.  

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும் (ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான தொகைக்கு) சொல்லப்பட்டுள்ளது. பங்கு சாராத திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பு அடிப்படையில் உள்ளது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதம் (பட்டியலிடப்படாத – Unlisted, No indexation benefit) மற்றும் 20 சதவீதமாக (Listed, With Indexation Benefit) சொல்லப்பட்டுள்ளது. 

முதலீட்டில் கிடைக்கப்பெறும் லாபத்திற்கு எவ்வளவு தொகையை வரியாக செலுத்த வேண்டுமென்பதை வரி ஆலோசகர் அல்லது பட்டய கணக்காளர்(Chartered Accountant) ஒருவரின் துணையுடன் கணக்கிடுவது நல்லது. 

கவனிக்க:

  • 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாத பட்ஜெட் அறிக்கையில், பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களின் வரி முறையில் சில மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் செய்துள்ளது. இந்த புதிய முறை வரும் ஏப்ரல் 1ம் தேதி, 2023 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.      
  • பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் எனும் போது, சிறிய பங்களிப்பில் பங்குகளை கொண்டிருந்தாலும் அவ்வகையான திட்டங்கள்  வரிச்சட்டத்தில் பங்கு சாராத திட்டமாகவே சொல்லப்படுகிறது. வரும் ஏப்ரல் 1, 2023 முதல் பங்கு சாராத திட்டங்களில், பங்குகளின் பங்களிப்பு 35 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால், குறுகிய மற்றும் நீண்டகால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரம்பில் அமையும் என சொல்லப்பட்டுள்ளது.
  • இதுவே அத்திட்டத்தில் பங்குகளின் பங்களிப்பு 36 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை இருக்கும் பட்சத்தில், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பிலும், நீண்டகால மூலதன ஆதாய வரி என்பது பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20 சதவீதமாகவும் கூறப்பட்டுள்ளது. 
  • 65 சதவீதத்திற்கும் மேல் பங்குகளின் பங்களிப்பை கொண்டிருக்கும் திட்டங்கள், பங்கு சார்ந்த திட்டங்களின் வரி விதிப்பு மற்றும் முதலீட்டு கால முறையை(Holding period) போலவே கொண்டிருக்கும். அதாவது ஒரு வருடத்திற்குள்ளான குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும்(ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான) இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார மந்த நிலையிலும், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் இருப்பது ஏன் ?

பொருளாதார மந்த நிலையிலும், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் இருப்பது ஏன் ?

Why are Indian Stock Markets soaring despite the Economy Slowdown ?

பொருளாதார மந்தநிலையிலும், இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் உள்ளதே என்பது பலரது கேள்வி. நாட்டில் கடந்த சில காலங்களாக வாகனத்துறை விற்பனை குறைந்து வருவது, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, உலக பொருளாதார காரணிகளின் தன்மை மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் வரை, நாட்டின் வளர்ச்சி பெருமளவு பாதித்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இது போன்ற எதிர்மறையான சூழ்நிலையிலும் இந்திய பங்குச்சந்தைகள் உச்சத்தில் இருந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை நிப்டி(Nifty50) குறியீடும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(Sensex) குறியீடும் போட்டி போட்டு கொண்டு ஏறியுள்ளன. சமீபத்திய போர் பதற்ற சூழல் தான், சந்தையின் அடுத்தகட்ட ஏற்றத்தை சற்று நிறுத்தி வைத்துள்ளது. இவையும் எதிர்காலத்தில் கலையப்படலாம்.

கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது, சந்தை பெருவாரியான இறக்கத்தை கண்டிருந்தது. அதனை மீட்டெடுக்க பல மாதங்கள் தேவைப்பட்டது. அப்போதைய காலத்தில் நாம் இன்று காணும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை. 2008 பங்குச்சந்தை வீழ்ச்சியில் அதிகம் அடிபட்டவர்கள் பெரும்பாலானோர் இன்று சந்தைக்கு திரும்பவும் இல்லை.

புதிய இளம் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சந்தையை பற்றிய விழிப்புணர்வும் தற்போதைய நிலையில் மேம்பட்டுள்ளது. ஆனால் சந்தையை பற்றிய கற்றல்(Stock Market Analysis) தான் இன்னும் அதிகம் தேவையாக உள்ளது. முக்கியமாக அன்றைய காலத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின்(Mutual Funds) மூலம் அதிக முதலீடுகள் பெறப்படவில்லை. ஆனால் இன்று நிலைமையோ வேறு.

இன்று யாரும் சந்தையில் முதலீடு செய்வது வெறும் பணம் பண்ணுவதற்காக மட்டுமல்ல, மாறாக அவர்களின் நிதி இலக்குகளை சார்ந்தும் முதலீடு செய்கின்றனர். தனிநபர் ஒருவருக்கு 15 வருட நிதி இலக்கு உள்ளதென்றால், அவர் குறுகிய காலத்தில் ஏற்படும் சந்தை ஏற்ற – இறக்கத்தை பற்றி கவலை கொள்ள மாட்டார். அவருக்கு தேவையான காலம் 15 வருடங்கள் தான். எனவே எந்தவொரு ரிஸ்க்(Risk) தன்மை உள்ள முதலீடும் நீண்ட காலத்தில் நல்ல வருவாயை அளிக்கும்.

கடந்த டிசம்பர் மாதத்தில் பெறப்பட்ட எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீடு சுமார் 8,500 கோடி ரூபாய். சந்தையில் உள்ள முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்ததற்கு இந்த எஸ்.ஐ.பி. முதலீடும் ஒரு காரணம். அந்நிய முதலீட்டாளர் மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களின் சந்தை பங்களிப்பு போன்று, இன்று பரஸ்பர நிதி முதலீடுகளும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சந்தையில் ஏதேனும் பாதகமான செய்திகள் தென்பட்டால், குறுகிய கால மற்றும் தின வர்த்தகர்கள் பயத்தில் பணத்தை வெளியே எடுக்கலாம். ஆனால் மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் பெறப்பட்ட முதலீடுகள் பெரும்பாலும் முழுவதுமாக வெளியேறுவதில்லை.

இந்த திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் வேண்டுமானால் பயத்தில் பணத்தை வெளியே எடுக்கலாம். ஆனால் நீண்ட காலத்தில் தங்கள் இலக்குகளுக்காக(Financial Goals) முதலீடு செய்பவர்கள், தங்கள் தேவைக்கு மட்டுமே அதனை பயன்படுத்துகின்றனர். டிசம்பர் 2019 காலத்தில் பெறப்பட்ட பங்கு சார்ந்த முதலீடுகளின்(Equity Funds) மதிப்பு சுமார் ரூ. 4,595 கோடி மற்றும் வெளியே எடுக்கப்பட்ட தொகை(Outflow) ரூ. 15,440 கோடி. இதில் பெரும்பாலானவர்கள் சிறு முதலீட்டாளர்களே.

கடந்த டிசம்பர் மாதத்தில் மியூச்சுவல் பண்டு திட்டங்களின் சார்பாக லார்ஜ் கேப்(Large Cap) பண்டுகளில் செய்யப்பட்ட முதலீடு 1,134 கோடி ரூபாய். இவற்றில் எஸ்.ஐ.பி. அல்லது மறுமுதலீடு என்பது சேர்க்கப்படவில்லை என்பதனை நினைவில் கொள்ளவும். லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) வெளியே எடுக்கப்பட்ட தொகை சுமார் 71,158 கோடி ரூபாய். மல்டி கேப்(Multicap) பண்டுகளில் புதிய முதலீடாக டிசம்பர் மாதத்தில் 511 கோடி ரூபாயும், மிட் கேப்பில் 796 கோடி ரூபாய் மற்றும் ஸ்மால் கேப் பண்டுகள் ரூ. 421 கோடி முதலீடும் பெறப்பட்டுள்ளன. போகஸ்ட்(Focused Funds) என சொல்லப்படும் குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களில் சுமார் ரூ. 1,830 கோடி டிசம்பர் மாதத்தில் பெறப்பட்டுள்ளன.

டிசம்பர் 31, 2019 தேதியின் படி, பரஸ்பர நிதி முதலீடுகளின் சொத்து மதிப்பு(AUM) ரூ. 26.54 லட்சம் கோடி. ஆகையால், சந்தை இறக்கம் கண்டாலும் அவற்றை தக்க வைப்பதில் பரஸ்பர நிதி முதலீடுகளும் தற்போது துணைபுரிகின்றன. எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்யும் போது, சந்தையின் ஏற்ற – இறக்கத்தில் நல்ல வருமானத்தை பெறுவது நிச்சயம். நாம் திட்டமிட வேண்டியது நமக்கான இலக்கு மற்றும் அதற்கான காலம்(Goals & Period) தான். இதன் அடிப்படையில் தான் நாம் மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com