பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

How is the Inflation and Interest rate playing in the Real Economy ? 

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட உலகளவிலான ஊரடங்கிற்கு பின்பு, உலக பொருளாதாரம் இந்த சுழற்சி முறையில்(Life Cycle) தான் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்க, அதனை அப்படியே பின்பற்றி வருகிறது உலக பொருளாதாரமும். கூடுதலாக உக்ரைன்-ரஷ்ய போர் மற்றும் சீன-தைவான் எல்லை பதற்றமும் அடங்கும். 

கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு(Economic Stimulus) அன்றைய நிலையை களைய பெரிதும் உதவியது. இருப்பினும் அதன் காரணமாக பணவீக்க விகிதமும் கடந்த சில காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதன் விளைவு தேவை-உற்பத்திக்குமான இடைவெளியில் தான் உள்ளது. இந்த இடைவெளியே பல நாடுகளை பொருளாதார மந்தநிலைக்கு எடுத்து செல்லும். 

உலக பங்குச்சந்தைகளும், அரசு கடன் பத்திர சந்தைகளும் வரவிருக்கும் காலத்தில் ஆட்டம்(High Volatility) காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் நவீன பொருளாதாரத்தில் இது ஒரு சுழற்சி முறையே(Life Cycle). பணவீக்கம் உயர்ந்தால் அதனை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியின் வேலை தான். அதிகரித்து வரும் பொருட்களின் சந்தை விலையை மட்டுப்படுத்த, போடப்படுகிற கடிவாளம் தான் இந்த வட்டி விகித உயர்வு. 

வட்டி விகித உயர்வால் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி குறைந்து சந்தையில் பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். இதன் தாக்கம் தொழில் நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், பங்கு விலையும் சரியும்(அனைத்து நிறுவங்களுக்கும் பொருந்தாது). கடனில்லா நிறுவனங்களுக்கு வருவாய் குறைவு ஒரு பிரச்சனையில்லை, ஆனால் கடனை அதிகமாக கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு தான் இந்த சிக்கலே !

வங்கி வட்டி விகித உயர்வு, டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டை மேற்கொள்பவருக்கு வேண்டுமானால் வாய்ப்பாக அமையலாம். ஆனால் வங்கிகளில் கடன் வாங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு தான் செலுத்த வேண்டிய வட்டி செலவு அதிகரித்து விடும். சொல்லப்போனால், டெபாசிட்தாரரருக்கும் இந்த வட்டி உயர்வு நீண்டகாலத்தில் பயன் தராது. 

பணவீக்கத்தை கட்டுப்படுத்திய பிறகு வங்கிகளின் வட்டி வருவாய் விகிதத்தையும் மத்திய வங்கி குறைத்து விடுமே. இதனை தான் நாம் தொழிலாளர்களின் பி.எப்.(Provident Fund), அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கி வைப்பு நிதிகளில் காணலாம். பணவீக்க விகிதம் அதிகமாக இருந்த காலங்களில் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் அதிகமாகவும், மாறாக பணவீக்கம் குறையும் போது, சேமிப்புக்கான வட்டி விகிதமும் வெகுவாக குறைக்கப்படும். இதனை நாம் பெரும்பாலும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதற்கு பிறகான காலங்களில்(Economic Recession & Growth) காணலாம். 

இது ஒருபுறம் இருக்க, கடந்த காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாய், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீடு என்று சொல்லப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வருடத்தின் பணவீக்க விகிதம் 7 சதவீதம் என எடுத்து கொண்டால், சேமிப்புக்கான வட்டி  விகிதம் 7 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். இதுவே வங்கி சேமிப்புக்கணக்குக்கான வட்டி விகிதத்தை சொல்லவே வேண்டாம்.  அதே வேளையில், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து காணப்படும். 

 பொதுவாக மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது, பெரும்பாலான வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதத்தை உடனே அதிகரித்து விடுவதுண்டு. மாறாக, நமது சேமிப்புக்கான வட்டி பெரும்பாலும் பணவீக்கத்திற்கு குறைவாக இருக்கும். இது போக கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியது இருந்தால், முடிவில் நிகர இழப்பு தான் !

எனவே வட்டி விகித உயர்வு காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய மற்றும் நீண்ட காலத்தில் குறைந்த வரி விகிதத்தில் அதிக வருவாயை ஏற்படுத்தும் முதலீட்டை கண்டறிவது அவசியம். அது போன்ற முதலீட்டு வாய்ப்புகள் தான் பரஸ்பர நிதிகளும்(Mutual Funds), பங்குச்சந்தைகளும். பங்குச்சந்தைக்கும், பரஸ்பர நிதிக்குமான ரிஸ்க் தன்மை என்பது வெவ்வேறு. சரியான நிதி இலக்கை ஏற்படுத்தி  விட்டு, அதற்கான முதலீட்டை துவக்கினால் போதுமானது. நீண்டகாலத்தில் உங்களது முதலீடு உங்களுக்காக உழைக்க தயாராகும்…!

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s