செல்வமகள் (சுகன்யா சம்ரிதி) சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு
Sukanya Samriddhi Yojana – Postal Small Savings Scheme
அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களில் நல்ல வட்டி வருவாயை கொண்டிருப்பது மூத்த குடிமக்கள் திட்டம் எனலாம். இதற்கு அடுத்தாற் போல் இருப்பது பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம்(Sukanya Samriddhi). நடப்பில் இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.40 சதவீதம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தங்கள் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க உள்ள பெற்றோர், விரைவாக கணக்கை துவங்கினால் தான் குறிப்பிட்ட பலனை சரியாக பயன்படுத்தி கொள்ள முடியும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திட்டத்தில் சேர 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையாக(Girl Child) இருக்க வேண்டும். எனவே குழந்தை பிறந்த சில நாட்கள் அல்லது வாரங்களில் திட்டமிடுவது சிறந்தது. கணக்கு முடியும் தருணம் குழந்தையின் 21வது வயதில் முடிவடையும். அதாவது ஒரு வயதுக்குள் ஆரம்பிக்கப்பட்ட கணக்கு 21வது வருடத்தில் முடிவு பெறும். நாம் தாமதமாக கணக்கை ஆரம்பிக்கும் போது, முதிர்வு காலமும் மாறுபடும்.
பெண் குழந்தையின் பெயரில் அதன் பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கை துவங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச ஆரம்ப முதலீடு(Minimum Investment) ரூ. 250. அதிகபட்சமாக முதலீட்டிற்கு வரம்பு எதுவுமில்லை. ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை முதலீடு செய்யும் ஒருவருக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகை உண்டு (வருமான வரி செலுத்தக்கூடியவராக இருந்தால்).
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறும் பட்சத்தில் கணக்கு செயல்பாடு நிறுத்தி வைக்கப்படும். இருப்பினும் அபராத கட்டணத்தை செலுத்தி கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.
பெண் குழந்தை தனது 18 வயதை அடையும் போது, மேற்படிப்பு செலவுக்காக முதலீடு செய்த தொகையில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை பணமாக பெற்று கொள்ளலாம். மீதமிருக்கும் தொகையை 21 வருட முடிவில் திரும்ப பெறலாம். 18வயது நிரம்பியவுடன் பெண் திருமணம் செய்வதற்கு தயாராகி விட்டால், கணக்கை முன்னரே முடித்து கொள்ளும் சலுகையும் அளிக்கப்படுகிறது.
செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான கணக்கை உங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது வங்கியில் துவங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கை மட்டுமே துவங்க முடியும். அதே வேளையில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு கணக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும் (இரு பெண் குழந்தைகள்).
இரட்டை பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ஒரு குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகளுக்கு கணக்கு துவங்க அனுமதி அளிக்கப்படும். இருப்பினும் அதற்கான பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தத்து எடுக்கப்படும் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து செல்வமகள் கணக்கை தொடங்கலாம்.
திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு வருமான வரி சட்டம் 80சி கீழ் முழு வரி சலுகையும் உள்ளது. அதாவது முதலீடு செய்யும் பணத்திற்கு, கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் மற்றும் முதிர்வில் கிடைக்க கூடிய மொத்த தொகை என மூன்று விதமான வரி சலுகை அளிக்கப்படுகிறது.
செல்வமகள் திட்டத்தின் கணக்கை ஆரம்பிப்பதற்கு பெற்றோர் அல்லது காப்பாளரின் அடையாள நகல்(ID Proof), முகவரி நகல், பான் எண்(PAN), பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் குழந்தையின் புகைப்படம் அவசியம்.
பரஸ்பர நிதி முதலீட்டை புரிந்து கொண்டு, முதலீடு செய்ய உள்ளோர் செல்வமகள் திட்டத்திற்கு மாற்றாக பரஸ்பர நிதி முதலீட்டு திட்டங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய நல்ல வருமானத்தை பெறலாம். வரி சலுகைக்காக மட்டுமே செல்வமகள் திட்டத்தை பயன்படுத்தாமல், தங்கள் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவையை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது நலம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை