வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி
No change on Repo rate – Reserve Bank of India
நேற்று நடைபெற்ற (05-10-2018) நிதி கொள்கை குழு கூட்டத்தில் (Monetary Policy Committee), ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை எனவும், முன்னர் இருந்த 6.5 சதவீத வட்டி தொடரும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது ரியல் எஸ்டேட் சார்ந்த நிறுவனங்களுக்கு நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக பொருளாதாரத்தில் காணப்படும் மந்தமான நிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க – மற்ற நாடுகளுக்கிடையேயான வர்த்தக போர், நாட்டில் உள்ள வங்கிகளின் நிதி நிலை ஆகியவை சந்தையை வெகுவாக பாதித்துள்ளன. இந்த வாரத்தில் (திங்கள் – வெள்ளி) மட்டும் இந்திய பங்குச்சந்தை 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. இந்த சரிவு கடந்த இரண்டு வருடங்களில் முதன்முறையாக நிகழ்வதாகும்.
கடந்த இரு கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Rate) உயர்த்திய ரிசர்வ் வங்கி இந்த முறை மாற்றம் எதுவுமில்லை என அறிவித்தது, பங்குச்சந்தையில் பாதகமான சூழ்நிலையில் அமைந்தது. ஏற்கனவே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்திருப்பதால் அதனை சரிகட்ட வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனவும், இரண்டாம் அரையாண்டில் (அக்டோபர்-மார்ச்) சில்லரை பணவீக்கம் 3.8 சதவீத்திலிருந்து 4.5 சதவீதத்திற்குள் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என குழுவில் உள்ள 6 பேரில் 5 பேர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 % ஆகவும், பண இருப்பு விகிதம் (CRR) 4 சதவீதத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி விகிதத்திலும் மாற்றம் இல்லாமல் அதே 6.75 சதவீதத்தில் இருக்கும்.
வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் (NBFC) சொத்துக்கள் மற்றும் கடன்கள் பொருத்தமற்றவையாக உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) நிறுவனத்தின் கடன் பிரச்னையால், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை