மீண்டும் ஒரு குழப்பத்தில் ஆதார் எண் இணைப்பு
The Chaos on Aadhaar linking has been resumed
கடந்த செப்டம்பர் 26, 2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்று, ஆதார் எண் சம்மந்தமான தீர்ப்பை வெளியிட்டது. எல்லாவற்றிற்கும் ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும், அரசு சார்பில் அளிக்கப்படும் சேவைகளுக்கு வேண்டுமானால் ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தலாம் எனவும் தீர்ப்பை வழங்கியது.
அந்த தீர்ப்பின் படி, அரசு சார்பில் அளிக்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தலாம். அது போக, பான் எண் (Permanent Account Number -PAN) பெறுவதற்கும், வருமான வரி தாக்கல் செய்வதற்கும் (Income Tax Return -ITR) கட்டாயமாகும்.
அதே நேரத்தில், மொபைல் எண்ணுடன் (Mobile Number), வங்கி கணக்கு ஆரம்பிப்பதற்கு, புதிய வாகனங்கள் பதிவு செய்வதற்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. குழுந்தைகளுக்கான சலுகைகளை பெறுவதற்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், பள்ளி சேர்க்கை மற்றும் கல்வி பொது தேர்வுகளுக்கு ஆதார் எண் அவசியமில்லை எனவும் கூறியுள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் சேவைகளை வாடிக்கையாளருக்கு அளிப்பதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது. இதன் மூலம் இனி வங்கிகள், இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட ஆகிய சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண் அவசியமில்லை.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (06-10-2018) அன்று நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லீ தெரிவித்த கருத்தொன்று மீண்டும் ஆதார் சம்மந்தமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், ‘ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், மொபைல் எண் மற்றும் வங்கி கணக்குகளுக்கு ஆதார் எண் இணைப்பை ஏற்படுத்தினால் அதன் மூலம் பெறும் தகவல்கள் பயனுள்ளதாக அமையும். உச்ச நீதிமன்றம் ஆதார் சட்டம் – பிரிவு 57 ன் (Aadhaar act – Section 57) கீழ் உள்ள அறிவுறுத்தல்களை தான் நீக்கியுள்ளது ‘ என்றார்.
ஆதார் சட்டம் – பிரிவு 57 ல் தனியார் நிறுவனங்களுடன் தரவுகளை பகிர்ந்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இந்த பிரிவை தான் உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளதாக கூறும் நிதி அமைச்சர் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆதார் எண் இணைப்பை பயன்படுத்துவது பலனளிக்கும் என்பது மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது சம்மந்தமான அடுத்த நடவடிக்கைகளை பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை