Return on equity

முதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0

முதலீடு மற்றும் பங்குகள் மீதான  வருமானம் – வகுப்பு  8.0

Return on Investment – Return on Equity (ROE), Return on Assets (ROA) Ratios

 

சென்ற வகுப்பில் ஒரு நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்தை  பற்றி பார்த்தோம். நிறுவனத்தின்  லாபம் அதனை அதன் துறை சார்ந்த தொழிலில்  நிலைத்து  நிற்க  துணைபுரிகிறது. நிறுவனத்தில்  உள்ளவர்களும்  பொருளாதாரத்தில்  நன்கு  வளர்ச்சியடைவார்கள். ஆனால்  நாம்  ஒரு  முதலீட்டாளராக நமக்கும்  அந்த  லாபத்தில்  பலன்  கிடைக்க  வேண்டுமே, அது  தானே  நியாயம். நாம்  ஒன்றும்  அந்த  நிறுவனத்தில்  வேலை  செய்யவில்லை; நிறுவனத்தை  தொடங்கவும் இல்லை. ஆனால்  ஒரு  முதலீட்டாளராக நமக்கும்  லாபத்தில்  உரிமை  உண்டு. நாம் நம்  பணத்தை  முதலீடு  செய்திருக்கிறோம்.

 

நாம் ஏற்கனவே சொன்னது போல, ஒரு நிறுவனத்தின் முதலீடு என்பது நிறுவனர்கள் மற்றும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களிடம் திரட்டிய பணமும் ஆகும். அதனால் தான் முதலீடு என்பது பங்குகளாக கணக்கிடப்படுகிறது. Earning Per Share என்ற  ஒரு  தலைப்பை  பார்த்தோம்  அல்லவா, அது  நமது  வருமானத்தை  தான்  சொல்கிறது. நம்மிடம்  உள்ள  ஒவ்வொரு  பங்குக்கும், அந்த  நிறுவனம்  எவ்வளவு  வருமானம்  சம்பாதித்து கொண்டிருக்கிறது. அவற்றில்  நமக்கு  எவ்வளவு  தொகையை  கையில்  கொடுத்திருக்கிறது என்பது  தான். எந்த  ஒரு  முதலீடும்  அதன்  லாபம்  (அ) வருமானத்தினால்  தான்  ஈர்க்கப்படும். நாம்  வங்கியில்  ரூ. 1 லட்சத்தை  வைப்பு  தொகையாக  வைத்திருக்கிறோம்  எனில், அதனை  வெறுமென நாம் வைக்க  முடியாது. நமது  எதிர்பார்ப்பின்  பலன் – வங்கியில்  நமது  பணம்  பத்திரமாக  இருக்கிறது  மற்றும் நமது வைப்பு தொகைக்கு  ஏதேனும்  வட்டி  வருமானம்  கிடைக்கும் என்பதால்  தான். அதே நேரத்தில் நம் வங்கி சேமிப்பும் பாதுகாப்பு தான் என கூறி விட முடியாது. Deposit Insurance and Credit Guarantee Corporation – DICGC  எனும்  ஒப்பந்தம் உள்ளது. அதன்  அடிப்படையில் தான்  நமது  பணத்திற்கு  பாதுகாப்பு வழங்கப்படும்.

 

ஒரு  பங்கு  முதலீட்டாளராக  நமக்கு, ஒரு  நிறுவனம்  அதன்  லாபத்தில் ஒரு  தொகையை  பகிர்ந்தளிக்கிறது. பகிர்ந்தளித்தல் என்றால்  அது நமக்கான  லாபத்தை  உடனே  கொடுத்து விட போவதில்லை. அந்த லாபம்  நமக்கு  பல  நிலைகளாக  வந்தடையும். ஒரு  நிறுவனத்தின்  லாபம் – பங்குகளின்  விலை  அதிகரிப்பு(Price Increase), போனஸ் பங்குகள்(Bonus Shares), ஈவுத்தொகை வருமானம்(Dividend), மேற்கொண்டு தொழில் வளர்ச்சிக்கு(Growth)  என பல நிலைகளாக பரிமாறப்படும்.

 

உதாரணத்திற்கு, நீங்கள் TVS motor நிறுவனத்தில் 100 பங்குகள் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். நீங்கள் வாங்கும் போது இருக்கும் விலையை விட, 5 வருடங்களுக்கு பிறகு அதன் விலை ஏற்றமடைந்திருக்கும். இது அந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சியினால் இருக்கலாம். நினைவில் வைத்திருங்கள் – கடன் அதிகமாக இருக்கும் மற்றும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தின் பங்கு விலையும் அதிகமாகலாம். ஆனால் அது நிரந்தரமல்ல. நீண்ட காலத்தில் வளர்ச்சியடையும் நிறுவனங்களின் பங்கு விலையே சாதகமாகும். அதனால் தான் முதல் வகுப்பின் தொடக்கத்திலிருந்து நான் சொல்கிறேன், பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், அதனை நீண்ட காலமாக அணுகுங்கள்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

ஒரு முதலீட்டின் மீதான வருமானம் (Return on Investment – ROI) என்பது ஒரு நிறுவனத்தின் லாபத்தை நமது பங்குடன் ஒப்பிடுவதற்கும், மற்ற முதலீடுகளின் திறனை பார்ப்பதற்கும் பயன்படுகிறது. வங்கி வட்டி வருமானத்தை காட்டிலும் அதிகமான வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தான் நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறோம். வங்கியிலேயே நாம் எதிர்பார்க்கும் வருமானம் கிடைத்து விட்டால் நமக்கெதுக்கு பங்குச்சந்தை, 🙂 நாம் எதிர்பார்க்கும் வருமானம் என்பது பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும்.

ROI  =  Net Profit / Cost of Investment

 

நாம்  TVS motor நிறுவனத்தில்  வாங்கிய  100 பங்குகளை (வாங்கிய  விலை Rs. 100 X 100 Shares), ஐந்து  வருடங்களுக்கு  பிறகு  ரூ. 120 ( 120 X  100) என்ற  விலையில்  விற்கிறோம். இப்போது  நம்  முதலீடு  மீதான  வருமானம்,

 

ROI  = 2000 / 10000  =  0.2  X  100  =  20 %

 

நம்  முதலீட்டின்  மீதான  வருமானம்  20 % ஐ தந்துள்ளது. இது  ஒன்றும்  பெரிய சூத்திரமல்ல. நமது  ஊரில்  கொய்யா பழம் விற்கும் பாட்டி கதை போல  தான். இங்கே  நிகர லாபம் (Net Profit) என்பது  ஒரு  நிறுவனத்தின்  வரிகள், வட்டி  செலுத்துதல்  மற்றும்  கட்டணங்கள்  போக  தான்.

 

Return on Equity – ROE:

 

ஒரு  நிறுவனத்தின்  நிகர வருவாயின்  அளவு  அதன்  மொத்த  பங்குதாரர்களின்  விகிதத்தை  சாரும். பங்குதாரர்கள்  முதலீடு  செய்துள்ள  ஒரு  நிறுவனம்  அவர்களின்  முதலீட்டை  கொண்டு  எவ்வளவு  லாபம் சம்பாதித்தது என்பதை  அறிவது  Return on Equity.

 

ROE  = Net Income / Shareholder’s Equity

 

நிறுவனத்தின்  நிகர  லாபத்தை  பங்குதாரர்களின்  முதலீட்டில்  வகுத்தால்  கிடைப்பது  ROE ஆகும்.

 

உதாரணத்திற்கு,

 

நம்  தேநீர்  நண்பர் தொழிலில்  சென்ற வருட லாபம்  ரூ. 10 லட்சம்  என  கொள்வோம். அதே  வருடம், பங்குதாரர்கள் மேற்கொண்ட  மொத்த முதலீடு (நம்மையும்  சேர்த்து) – ரூ. 20 லட்சம்  என  வைத்து  கொள்வோம். இப்போது பங்கு  முதலீட்டின்  மீதான  வருமானம்,

 

ROE = 10,00,000 / 20,00,000  =  0.5 X 100  =   50 %

 

ஆக, நம்  தேநீர்  நண்பரின்  தொழில் 50 % வருமானத்தை  பங்குகள்  மீது  கொடுத்துள்ளது. அதாவது  நாம்  முதலீடு  செய்த  ஒவ்வொரு  ரூபாய்க்கும்  50 பைசா  லாபம்  தந்துள்ளது. ( Rs. 0.50 /- of profit for every Rupee of Shareholder’s Equity)

 

Return on Equity ஐ  Return on Networth (RONW) என  கூறுவதும் உண்டு.  பொதுவாக  ROI என்பது  நம் முதலீட்டின்  மீதான  வருமானத்தை தெரிவிக்கிறது. ROE என்பது பங்குகள்  மீதான  வருமானத்தை சொல்வதோடு, ஒரு  நிறுவனத்தின்  செயல்திறனையும்  கண்டறிகிறது. அதிக  ROE உள்ள  நிறுவனங்கள் அதிக  லாபம்  சம்பாதிப்பதோடு  அல்லாமல், புதிய முதலீட்டையும்  எதிர்காலத்தில்  பெற  வேண்டிய  அவசியமில்லை  என்பதனை காட்டுகிறது. அதனால் அதிக ROE விகிதம் உள்ள  நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள்  வாங்கும்  பங்குக்கான  ROE விகிதம் பணவீக்கம் மற்றும் வங்கி வட்டி விகிதத்தை சேர்த்த அளவை விட அதிகமாக இருக்குமாறு (Morethan Inflation and Bond Interest rates)  பார்த்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, வங்கி வட்டி  விகிதம் – 7 % மற்றும் பணவீக்க விகிதம் – 6 % என இருந்தால் (7 + 6) ROE  13 % விகிதத்தை கடந்து இருக்கும்படி பங்குகளை தேர்ந்தெடுங்கள்.

 

Return on Asset (ROA):

 

ROA –  ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்துக்களில் அதன் ஒரு குறிப்பிட்ட காலத்தின் லாபம்,  எவ்வளவு சதவிகிதத்தை கொண்டுள்ளது.

 

ROA   = Net Income / Total Assets

 

XYZ நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ஈட்டிய  லாபம் – ரூ. 2 லட்சம் (வரி கட்டியது போக) மற்றும் அந்த காலத்தில் அதன் மொத்த சொத்து மதிப்பு – ரூ. 10 லட்சம்.

 

ROA = 2,00,000 / 10,00,000 = 0.2 X 100  =  20 %

 

XYZ நிறுவனத்தின் கடந்தாண்டு லாபம் அதன் மொத்த சொத்து மதிப்பில் 20 % ஆகும். அதிக ROA விகிதம் ஒரு நிறுவனம் நன்றாக வளர்ச்சியடைந்து வருவதை காட்டுகிறது. அதே நேரத்தில் ROA விகிதம் ஒரு நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை பற்றி சொல்லவில்லை. அதனால் முதலீட்டாளர்களான நாம் நிறுவனத்தின் கடன் சுமையையும் பார்க்க வேண்டும். ROA ஐ மட்டுமே ஒரு நிலையாக எடுத்து கொண்டு பங்கு வாங்குவது  கூடாது. மற்ற அம்சங்களையும் ஆராய்ந்து விட்டு தான் பங்குகளை கவனிக்க வேண்டும்.

 

நினைவில்  கொள்ளுங்கள்:

 

  • ROI, ROE, ROA – இம்மூன்றும் கடந்த கால வருமானம்(Past Earnings) அல்லது லாபத்தை கொண்டே கணிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என சொல்லப்படவில்லை. அதனால் ஒரு பங்கின் கடந்த 5 – 10 வருட கால லாபத்துடன் ஒப்பிடுவது நன்று.

 

  • சில பங்குகளுக்கு ROE விகிதம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ காட்டப்படும். அந்த சமயத்தில், நிறுவனத்தின் பணவரத்து அறிக்கையை(Cash flow Statement) ஒப்பிட்டு தேர்ந்தெடுக்கலாம்.

 

  • பெரும்பாலான சமயங்களில், கடன் அதிகம் உள்ள நிறுவனத்திற்கும் ROE விகிதம் அதிகமாக இருக்கலாம். அதனால் கடன் விகிதத்தை (Debt-Equity) சரிபார்த்த பின்னரே ROE விகிதத்தை கவனிக்கலாம்.

 

  • பங்குதாரர்கள் எண்ணிக்கை குறைவு, நிறுவனமே பங்குகளை திரும்ப பெற்று கொள்ளுதல் (Buyback) ஆகியவற்றாலும் ROE விகிதம் செயற்கையாக அதிகரிக்கலாம்.

 

  • Return on Assets விகிதத்தை, துறைகளின் மற்ற நிறுவனத்துடன் ஒப்பிட்டு பார்த்து பங்குகளை வாங்குவது சிறந்தது.

 

அடுத்த வகுப்பில் நிறுவனத்தின் கடன் தன்மை(Debt to Equity) மற்றும் வட்டி செலுத்தும் விகிதத்தை(Interest coverage Ratio) பார்ப்போம்.

 

Advertisement

2 thoughts on “முதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s