பங்கு சந்தை பகுப்பாய்வு – அறிமுகம் (Share Market Fundamental Analysis
இந்தியா 2020, இந்தியா 2025, இந்தியா 2030 என்னும் பொருளாதார லட்சியத்தினை நாமும், நமது அரசாங்கமும் அடைய முயற்சிக்கும் இவ்வேளையில் “பணவீக்கம்” (Inflation) என்ற ஒன்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. “பணவீக்கம்” என்ற நிகழ்வு நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த பணவீக்கத்தினை கையாளும் போது, சேமிப்பு மற்றும் முதலீடு (Savings and Investing) மூலம் நாம் நமது வாழ்க்கையை திறம்பட மேம்படுத்துகிறோம். இவற்றில் நாம் முதலீடு என்று சொல்லும் போது, நமக்கு தெரிந்தது நிலம், வீடு, பொருள் , தொழில் முனைவு மற்றும் பங்கு சந்தை. அப்படிப்பட்ட முதலீட்டில் நம்மில் பெரும்பாலானோர் பொறுமை இழப்பது பங்கு சந்தையில் மட்டும் தான். வங்கி சேமிப்பு, நிலம், வீடு, தங்கம் முதலியவற்றில் இருக்கும் நமது காத்திருக்கும் தன்மை, பங்கு சந்தையில் இல்லை. காரணம், நாம் அவற்றை அணுக வேண்டிய முறையை விட்டு விட்டு , “Speculation” என்னும் ஊகங்களையே ஒரு காரணியாக பயன்படுத்துகிறோம். பங்கு சந்தையில் நாம் பணம் பண்ணுவதற்கும், பணவீக்கத்தினை சமாளிப்பதற்கும் இரண்டு காரணிகள் உள்ளன. அவை தான், அடிப்படை மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு (Fundamental and Technical Analysis). இவற்றில் உங்களை நீண்ட கால முதலீட்டாளராக, தொழில் முனைவோராக ஏற்படுத்துவது, Stock Market – Fundamental Analysis என்னும் அடிப்படை பகுப்பாய்வு தான். முதலில் நாம் அடிப்படை பகுப்பாய்வுக்கான காரணிகள் சிலவற்றை இங்கு ஆராய்வோம்.