Tag Archives: shareholders

பங்குதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறுவன நிர்வாகத் தன்மை

பங்குதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறுவன நிர்வாகத் தன்மை 

Why is Corporate Governance so important for the Shareholders – Equity Investments ?

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு பங்கின் விலை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பொதுவான காரணியாக தேவைக்கும், இருப்புக்குமான இடைவெளி(Demand-Supply) தான் எனினும், அவற்றை தூண்டக்கூடிய விஷயங்களாக பல்வேறு நிலைகள் உள்ளன. உதாரணமாக பொதுவெளியில் ஒரு நிறுவனப்பங்கை பற்றிய செய்திகள், பங்குகளில் ஈடுபடும் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களின் மனநிலை, அரசியல் தாக்கங்கள், நாட்டின் பொருளாதார நிலை, துறை சார்ந்த மாற்றங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். 

இருப்பினும், நீண்டகால பங்கு முதலீட்டாளர்களுக்கு மிகவும் அடிப்படை காரணிகளாக மூன்று விஷயங்களை சொல்லலாம். அவை ஒரு பங்கின் நிறுவனர்கள்(Founders & Promoters), நிறுவனத்தின் நிதி அறிக்கைகள்(Financial Statements) மற்றும் நிர்வாகத் திறமை அல்லது தன்மை(Corporate Governance) ஆகியவை. குறுகிய காலத்தில் ஒரு பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படுவது இயல்பு தான். அது ஒரு வகையில், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்பையும் வழங்கும். அதே சமயத்தில், மேலே சொன்ன மூன்று காரணிகள் தான் பெரும்பாலும் பங்குதாரர்கள் தங்களது பங்குகளை நீண்டகாலத்திற்கு வைத்திருக்க உதவும். 

“ சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் “ – இது தான் ஒரு பங்கு நீண்டகாலத்தில் விலையேற்றம் பெறுவதற்கும்.

நிறுவனர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் எப்படி ?

இன்று சந்தையில் உள்ள பங்கு நிறுவனங்களில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்யும் பழமையான நிறுவனங்கள் பல உள்ளன. உதாரணமாக பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் வாடியா நிறுவனக் குழுமம்(தோற்றம்: 1736ம் ஆண்டு) துவக்கப்பட்டு 289 வருடங்கள் ஆகி விட்டது. ஆதித்யா பிர்லா குழுமம் துவங்கப்பட்டது 1857ம் வருடம், ரேமண்ட்ஸ் நிறுவனம் நூறு வருடங்களை கடந்து விட்டது. நம்ம ஊரு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 1921ம் ஆண்டு, கரூர் வைசியா வங்கி 1916, டாட்டா குழுமம் 1868, முருகப்பா குழுமம் 1900ம் ஆண்டு, டி.வி.எஸ். குழுமம்(1911), அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இந்துஜா குழுமம்(1914), லட்சுமி மில்ஸ்(1910), முத்தூட்(1887), பேரிஸ்(Parrys’ – EID Parry – 1788), ஸ்டேட் பேங்க்(SBI – 1806), கனரா வங்கி(1906), அட நம்ம மும்பை பங்குச்சந்தை(BSE) துவங்கப்பட்டது 1875ம் ஆண்டு என சொல்லிக் கொண்டே போகலாம். நூறு ஆண்டுகளை கடந்து தொழில் செய்யும் இந்திய நிறுவனங்கள் மட்டுமே 150க்கும் அதிகமாக உள்ளன.

பொதுவாக ஒரு நிறுவனம் துவங்கப்படும் போது, அந்நிறுவனத்தின் நிறுவனருக்கு(Founder) தொழில் அல்லது சமூகம் சார்ந்த ஒரு நோக்கம் இருந்திருக்கும். வெறுமென பணமீட்டுவது மட்டுமே அவரது நீண்டகால நோக்கமாக இருந்திருக்காது. அவ்வாறு நீண்டகாலத்தில் ஈட்ட வேண்டுமென்றால், அவரது இலக்கும் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். இல்லையெனில், வரலாற்றில் நாம் எத்தனையோ பாரம்பரியமான பிராண்டு நிறுவனங்களை தொலைத்திருப்போம். நிறுவனத்தை துவக்கியவரின் ஆசை அல்லது நோக்கம் என்னவோ இருந்திருக்கலாம். ஆனால் அதனை பல வருடங்கள் சிறப்பாக வழிநடத்த அடுத்த தலைமுறை ஆட்கள் ஒத்துழைத்திருக்க வேண்டும். 

நிறுவனத்தை ஆரம்பநிலையில் துவக்கியவர் பொதுவாக Founder என அழைக்கப்படுவதுண்டு. அதற்கடுத்தாற் போல, அத்தொழிலை வழி நடத்தும் தலைமுறைகள் பெரும்பாலும் Promoters ஆக இருப்பர். சில சமயங்களில் ஒரு நிறுவனத்தின் Founder மற்றும் Promoter ஒரு நபரோ அல்லது குடும்ப நபர்களோ அமைவதுண்டு. நிறுவனத்தை துவக்கியவரின் நோக்கம் ஒரு புறம் இருக்க, இன்றைய அளவில் அந்நிறுவனத்தை வழிநடத்தும்(Promoters) இவர்களின் தொலைநோக்கு பார்வை எப்படியிருக்கும் ? இது தான் ஒரு பங்கு முதலீட்டாளருக்கு அவசியமானது.

“ தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி தூரம் பாயும் “ – நமக்கு பதினாறு அடியெல்லாம் பாய வேண்டாம். நிறுவனம் திவாலாகாமல் பங்குதாரர்களுக்கு நாணயமாக இருக்கிறதா என்பது தான் அவசியம். குறிப்பாக எந்த தொழிலையுமே செய்யாமல், வெறும் நிறுவனப் பங்கின் விலையை மட்டும் குறுகிய காலத்தில் ஏற்றி, லாபம் பார்த்து விட்டு பங்கு முதலீட்டாளர்களை பாதாளத்தில் தள்ளும் ‘ஷெல் நிறுவனங்கள்(Shell Companies)’ சந்தையில் பல உள்ளன. அப்படியிருக்க தொழிலை நாணயமாக செய்து கொண்டு, மாற்றத்திற்கும் உட்படும் நிறுவனங்கள் தான் ஒரு பங்கு முதலீட்டாளர்களுக்கு அவசியம். இதன் மூலம் மட்டுமே ஒருவர் நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டில் செல்வ வளத்தை ஏற்படுத்த முடியும்.

அதென்ன தொழில் நாணயம் ? (Corporate Governance):

“ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் “ – இது ஒரு குடும்பத்திற்கும், நிறுவனத்திற்கும் பொருந்தும்.  

குடும்ப உறவுகளிடம் ஏற்படும் பிரச்சனைகள் பொதுவெளியில் தெரிய வந்தாலும், அதனை குடும்ப உறுப்பினர்களே முடிந்தவரை பேசி தீர்த்துக் கொள்வது, நீண்டகாலத்தில் நன்மை பயக்கும். இதனை போன்று தான், ஒரு நிறுவனத்தின் நிர்வாகம், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிதி அறிக்கைகளில் ஏற்படும் பொதுவெளியிலான சிக்கல்களை அந்த நிறுவனம் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், முதலீட்டாளர்களிடம்(பங்கு விலை மற்றும் வாக்களிப்பு) அதன் தாக்கம் தெரிய வரும். இது நீண்டகாலத்தில் அந்நிறுவனத்திற்கும் பாதகத்தை ஏற்படுத்தலாம்.

உதாரணமாக தொழிலாளர்களிடையே வேலைநிறுத்த போராட்டம் ஏற்பட்டால், அது அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை பாதிக்க காரணமாக அமைந்து விடும். இதனை நிறுவனத்தின் நிர்வாகம், பொதுவெளியில் சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். நிர்வாகத்துக்குள் ஏற்படும் மேலாண்மை சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள், வாடிக்கையாளர்களின் நலனை பராமரித்தல், நிதி சார்ந்த கடன்கள் மற்றும் அறிக்கைகள், பொருளாதாரம் மற்றும் துறை சார்ந்த மந்தநிலை ஆகியவற்றில் நிறுவனத்தலைவர்கள் மற்றும் மேலிட நிர்வாகம் அதனை எவ்வாறு கையாளுகிறது என்பது ஒரு நிறுவனத்தின் நலனுக்கு மட்டுமிலலாமல், நீண்டகாலத்தில் முதலீட்டாளருக்கும் நலன் அளிக்கும்.

ஒரு நல்ல அல்லது நாணயமான நிறுவனம் என்பது அதன் நிர்வாகம் – பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நல்ல நம்பிக்கையையும், உறவையும் பேண வேண்டும். இது பொதுவெளியில் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

ஏன் நிறுவனத்தின் நிர்வாகத்தன்மை(Corporate Governance) ஒரு முதலீட்டாளருக்கு அவசியம் ?

ஒரு நிறுவனம் தனது தொழிலில், ‘ரிஸ்க்’ எடுத்து ஏதேனும் புதிய முயற்சியை அல்லது அதிகக் கடன் வாங்கி விரிவாக்கம் செய்யும் நிலையில் அதன் வெளிப்படைத்தன்மையை பங்குதாரர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களுடன் அறிக்கைகளாக(Statements) தெரிவிப்பது அவசியமாகும். இது அந்நிறுவனத்தின் செயல்திறனையும் மேம்படுத்த உதவும். காலாண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் நிதி அறிக்கைகளில் சொல்லப்படும் விஷயங்கள், நோக்கங்கள் மற்றும் இலக்குகள் தவறும் பட்சத்தில் அதனை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவை ஏற்படுத்த வேண்டும்.

உதாரணமாக, “ பொருளாதார மந்த நிலைக் காரணமாக எங்கள் நிறுவனம் இன்னென்ன சிக்கல்களை சந்திக்கும். அதனை களைய எங்கள் முன் உள்ள சில தீர்வுகள்”; “கடந்த சில காலாண்டுகளாக நிறுவனம் லாப வளர்ச்சியை நோக்கி செல்ல முடியாததற்கான காரணங்கள் மற்றும் துறை சார்ந்த நிலைகள்”; “ புதிய நிர்வாகம் அமைந்த பின் எங்களது தொழில் சார்ந்த மாற்றங்கள்”; “வேலை நிறுத்த போராட்டத்தால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதனை களைய நாங்கள் கொண்டுவரும் தீர்வுகள்”; “இது போன்ற மோசடிகள்(Whistleblower, Scam, Fraud) இனி மேல் எங்கள் நிறுவனத்தில் நடைபெறா வண்ணம் நாங்கள் செய்த விஷயங்கள் ” – இவ்வாறு நிர்வாகத்தின் அறிக்கைகள் மூலம் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் சரியான நேரத்தில் தகவல்களை பகிர வேண்டும். அது வெறுமென பங்கு விலைகளை கட்டுப்படுத்தும் மற்றும் ஏற்றும் போலிச் செய்தியாக இருந்து விடக் கூடாது.

      

பொதுவாக பங்குதாரர்கள் ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரத்தில் தலையிடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கு உள்ளது. அதன் காரணமாக தான் பங்குதாரர்கள் மூலம் ஒரு இயக்குனர் குழுவை தேர்ந்தெடுப்பது, நிறுவனத்தின் பிற கடமைகளை வாக்களிப்பு மூலம் ஏற்படுத்துவது என முடிவெடுக்கும் காரணிகளாக உள்ளன. இதனை நம்பிக்கைக்குரிய வகையில் அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும், நிர்வாகமும் கடைபிடிப்பது அவசியமாகும். ஒரு சாமானிய பொது பங்குதாரரும்(Retail / Public Shareholders) ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அங்கம் வகிப்பதற்கான சட்டம் உள்ளது.

பங்கு முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை(Annual Reports and Other Financial Statements) தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்க சொன்னால், அதனை அனுப்பி வைப்பது ஒரு நிர்வாகத்தின் கடமையாகும். இது போன்று தான் வாக்களிப்பது, ஈவுத்தொகை(Dividend), போனஸ் பங்குகள், ரைட்ஸ் பங்குகள் மற்றும் பிற பங்குதாரர் சார்ந்த நிலைகள். இதற்காக தான் ஒரு நிறுவனத்தில் பங்குதாரர் நலனைப் பாதுகாக்க செயலாளரும்(Company Secretary) நியமிக்கப்பட்டுள்ளார். 

நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(Annual General Meeting – AGM) பங்குதாரர்களை அழைப்பது நிர்வாகத்தின் கடமை. அது இணைய வழியிலோ அல்லது நேரடியான உரையாடலாக இருக்கலாம். ஆனால் பங்குதார்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும் மற்றும் இன்னபிற அதிகாரிகளும் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும். இது போன்ற கூட்டங்களில் நிறுவனத்தின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதனை பங்குதாரர்கள் அறியலாம். 

நீங்கள் ஒரு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கு(Factory Visit) சென்று, அதன் தொழிலை பற்றி புரிந்து கொள்ள, அவர்களின் பொருட்கள் அல்லது சேவை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதனை அறிய, அந்நிறுவனத்தின் நிர்வாகத்திடம் ஒரு பங்குதாரராக அனுமதி கேட்கலாம். சில நிறுவனங்கள் இதற்கான அனுமதியையும் அளித்து வருகிறது. இன்னும் சில நிறுவனங்களோ அதன் உற்பத்தி ஆலையில் தான் ஆண்டு பொதுக்கூட்டத்தை நடத்துவதுடன், பங்குதாரர்களுக்கு ஆலையையும் சுற்றி காண்பிக்க உதவுகிறது. இதன் மூலம் பங்குதாரர்கள்-நிர்வாக உறவு மேம்படும்.  

பொதுவெளியில் மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை சிக்கல்களை ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் செவிக்கொடுத்து கேட்கிறதா என்பதனை பங்குதாரர்களுக்கு நிறுவனம் தெரியப்படுத்த வேண்டும். நிறுவனத்தின் நிதி அறிக்கைகள் மற்றும் இன்னபிற ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சரியான நேரத்தில் பகிர்தலையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆக சுருக்கமாக சொன்னால், பொறுப்புடைமை(Accountability), வெளிப்படைத்தன்மை(Transparency), இடர் மேலாண்மை(Risk Management), நாணயம்(Fairness) மற்றும் பங்குதாரர்களிடம் இணக்கத்தை(Shareholders Relationship) ஒரு நிறுவனம் கொண்டிருக்க வேண்டும். இதுவே ஒரு முதலீட்டாளருக்கும் அதன் பங்கு விலையில் நீண்டகாலத்தில் வெளிப்படும்.

இன்றும் நூறு வருட பாரம்பரிய நிறுவனங்கள் நிலைத்து நின்று தொழில் புரிவதற்கு அதன் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் தான் காரணம் – அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தன்மையில் நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தால் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகை

TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகை

1:1 Bonus issue for TCS Shareholders approved by Board

 

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக திகழும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS – Tata Consultancy Services) தனது 2017 ம் நிதி வருடத்திற்கான நான்காம் காலாண்டு முடிவுகளை இன்று (19-04-2018) வெளியிட்டது. கடந்த ஜனவரி-மார்ச் காலத்தில் நிறுவனம் லாபமாக ரூ. 6904 கோடியை சம்பாதித்துள்ளது.

 

TCS நிறுவனம் அதன் முந்தைய காலத்தில் (Oct-Dec’ 2017) ஈட்டிய லாபம் ரூ. 6620 கோடியாகும். இதனை ஒப்பிடும் போது, தற்போதைய முடிவுகளின் லாபம் 4.50 % வளர்ச்சியாகும். நிறுவனத்தின் மொத்த வருமானம் நான்காம் காலாண்டில் ரூ. 32,075 கோடியாகவும், இது ஆண்டுக்கு(கடந்த வருட காலாண்டு)  8.2 % வளர்ச்சியாகவும் உள்ளது.

 

அக்டோபர்-டிசம்பர் மாத காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 3.93 % இருந்ததாகவும், ஜூலை-செப்டம்பர் மாத காலத்தில் இது 4.29 % இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

 

லாபத்தின் பங்காக நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு: ஒரு பங்குக்கு ரூ. 29 /- (Final Dividend) ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகையும்(Bonus Issue Ratio 1:1) சொல்லப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நிலவிய தேவைகள் மற்றும் நிறுவனத்தின் ஒப்பந்த பரிமாற்றத்தில் ஏற்பட்ட வெற்றிகள் போன்றவை நான்காவது காலாண்டு முடிவை ஒரு சிறப்பானதாக மாற்றியது எனவும் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 

காலாண்டு முடிவுகள் நேர்மறையாக இருந்ததை தொடர்ந்து இன்றைய பங்கு சந்தையில் TCS நிறுவனத்தின் பங்கு 1 % ஏற்றத்தில் முடிவடைந்தது. TCS நிறுவனம் 1968 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்று சுமார் 1800 கோடி அமெரிக்க டாலர் அளவிலான சொத்துக்களை நிர்வகிக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com