எட்டுத்திக்கும் எட்டாம் அதிசயம் – கூட்டு வட்டி (Power Of Compounding)
கூடி வாழ்ந்தால் தான் கோடி நன்மை;கூட்டு வட்டியினால் தான் கோடிகள் (கோடி ரூபாய்) சாத்தியம் !
“Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it … he who doesn’t, pays it….”
உலகத்தின் எட்டாம் அதிசயம் “கூட்டு வட்டி – Compound Interest” என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein).
கூட்டு வட்டியின் பலனை பற்றி, நாம் நமது பள்ளிக்காலங்களில் படித்திருப்போம். நமது பள்ளிக்கல்வியில் கணித பாடத்தில் வட்டி விகிதம், கூட்டு வட்டி மற்றும் தனி வட்டி என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்போம். அதன் பலனை நாம் அறியவே, நமது பள்ளிகளில் (1990 களில்) அஞ்சலக சேமிப்பான “Sanchayika” திட்டம் மிகவும் பிரபலம். அது கூட்டு வட்டியின் மகிமையையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு நமது பள்ளியிலும், கல்லூரியிலும் மற்றும் வேலை பார்க்கும் அலுவலகத்திலும் கூட இந்த கூட்டு வட்டி பற்றிய விஷயங்களை பயன்படுத்தியிருப்போம்; ஆனால் அது எழுத்து பூர்வமாகவே ! அந்த கூட்டு வட்டியின் தன்மை நம்மை எவ்விதத்திலும் மாற்றவில்லையே ! நாம் சற்று ஆழமாக சிந்தித்தால், இந்த கூட்டு வட்டியின் ரகசியத்தை அறியலாம்; அனுபவிக்கவும் செய்யலாம். இதை தான் ஒவ்வொரு வங்கிகளும் செய்கின்றன. பெருத்த முதலாளிகளை(RD, FD, Stocks) உருவாக்குவதும், கடன்கார ஏழைகளை(EMI, Loan) உருவாக்குவதும் இந்த கூட்டு வட்டியின் ரகசியம் !
கூட்டு வட்டி அப்படி என்ன சாதித்து விட போகிறது ?
நீங்கள் ஒரு வங்கியிலோ (அ) அஞ்சலக சேமிப்பிலோ, மாதம் ரூ.100 ஆக ஒரு வருடத்திற்கு சேமிக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்களுக்கான வட்டி 8 % (மாத கூட்டு வட்டியில்)
ஒரு வருட முடிவில், உங்களுக்கு கிடைப்பது ரூ. 1253 /- (கூட்டு வட்டி)
நீங்கள் சேமித்த / முதலீடு செய்த மொத்த தொகை: ரூ. 1200 /-
நீங்கள் பெற்ற வருமானம் : (1253-1200) = ரூ. 53 /-
அதாவது உங்களின் ஒவ்வொரு மாத 100 ரூபாயும், தங்களுக்கென்று, ரூ. 4.40 /- வருமானத்தை தந்துள்ளன.
இதை போல நீங்கள் 5 வருடங்கள் சேமிக்க முடிவு செய்தால், உங்களுக்கு கிடைக்க கூடிய மொத்த தொகை ரூ. 7397 /- 10 வருடங்களில் மொத்த தொகை ரூ. 18417 /-
5 வருடங்களில் வருமானம் ரூ. 1397 /- அதாவது உங்களின் ஒவ்வொரு மாத 100 ரூபாயும், 5 வருட முடிவில் ரூ. 23.30 /- ஐ உங்களுக்காக சம்பாதித்து கொடுத்துள்ளன.
10 வருடங்களில் உங்களின் வருமானம் ரூ. 6417 /- உங்களின் ஒவ்வொரு 100 ரூபாயும், முடிவில் ரூ. 53.50 /- சம்பாதித்து கொடுத்துள்ளன.
ஆக, கூட்டு வட்டியின் மூலம் உங்களின் ஒவ்வொரு ரூபாயும் உங்களுக்காக வேலை பார்த்து கணிசமான வருமானத்தை தந்துள்ளன. இதற்காக நீங்கள் எந்த மெனக்கெடுத்தும் வேலை செய்யவில்லை.
இதனையே, நீங்கள் ஒரு முறை மட்டும் (முதல் மாதம் மட்டும்) ரூ. 100 ஐ சேமித்து விட்டு போகிறீர்கள். உங்களுக்கு ஒரு வருடத்திற்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகை ரூ. 108, 5 வருடங்களில் ரூ. 149 /- 10 வருடங்களில் ரூ. 222 /-
இதனை நீங்கள் உங்கள் வீட்டில், ஏதேனும் ஒரு மூலையில் ஒவ்வொரு மாதமும், 100 ரூ. வைத்திருந்தால், ஒரு வருட / 5 / 10 வருட முடிவில் உங்களுக்கு கிடைப்பதோ பழைய 100 ரூ. நோட்டுக்களும், சிறிது கறை படிந்த அழுக்குகளும் ! ஆகவே, கூட்டு வட்டியை பயன்படுத்துங்கள். உங்கள் மாத தவணைகளும்(EMI, Loan) இதன் மூலமே கணக்கிடப்படுகிறது என்பதனை மறக்க வேண்டாம்.
100 ரூபாயின் உழைப்பு :
இது தான் பணம், பணம் பண்ணும் ரகசியம். இதன் மூலமே பணக்காரர்களும், முதலாளிகளும் உருவாகிறார்கள்; விழிப்புணர்வு இல்லதாவர்களே ஏழைகளாகவும், கடனாளிகளாகவும் மாறுகிறார்கள். இந்த பூமியில் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களும், பொருளார ரீதியாக சமமாகவே படைக்கபட்டார்கள்; மனித இனத்தின் சிந்தனை தான் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகிறது.
பத்து பேரை ஒருங்கிணைத்து, ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் வளர்ச்சியையும், கிடைக்கும் பலனையும் அனுபவிப்பது கூடி வாழ்ந்தால் தான் ! இதனை நமக்கு யாரும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லை. அதே போல தான் கூட்டு வட்டியும் !
இப்போதே நகருங்கள்… கூட்டு வட்டியின் Formula ஐ தேடி… பதிவிறக்கம் செய்யுங்கள் ஒரு வட்டி(Bank Interest App) விகித செயலியை…
சேமியுங்கள் / முதலீடு செய்யுங்கள் ஒரு 100 ரூபாயை…
உங்களுடைய பகிர்வுகளுக்கு:
contact@varthagamadurai.com
– நன்றி, வர்த்தக மதுரை