Portfolio insurance

போர்ட்ஃபோலியோ இன்சூரன்ஸ் – ஏன், எதற்கு ?

போர்ட்ஃபோலியோ இன்சூரன்ஸ் – ஏன், எதற்கு ?

Portfolio Insurance – why is it necessary ?

இன்றைய நாளில் ரிஸ்க் இல்லாத முதலீடு என்று எதுவுமில்லை. பொதுவாக முதலீட்டில் ரிஸ்க் இருக்கிறது என்று அதனை தவிர்ப்பதை காட்டிலும், ரிஸ்க்கை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். முதலீட்டில் காணப்படும் ரிஸ்க் தன்மையை பரவலாக்குதல்(Asset allocation) மற்றும் துறை சார்ந்த பல்வகைப்படுத்துதல்(Diversification) மூலம் குறைக்கலாம். பரவலாக்குதல் என்பது உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் நிலையில் உள்ளதென்றால், வெறுமென வங்கியிலோ அல்லது பங்குச்சந்தையிலோ முழுவதுமாக முதலீடு செய்யாமல், வங்கியில் கொஞ்சம், பங்குகளில் கொஞ்சம், தங்கம் மற்றும் கடன் பத்திரங்கள் என இன்னும் சில முதலீட்டு சாதனங்களை சேர்த்து கலவையாக செய்வது.

இதன் மூலம் பங்குச்சந்தை முதலீடு இறங்கினாலும், உங்களது மற்ற முதலீட்டு சாதனங்கள் அதற்குரிய வருவாய் மற்றும் முதலீட்டு பாதுகாப்பை அளிக்கும். அதே சமயத்தில் மற்ற முதலீடுகள் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை எட்ட முடியாத நிலையில், பங்குச்சந்தை ஏற்றம் உங்களது முதலீட்டு பெருக்கத்தை அதிகப்படுத்தும். பொதுவாக வங்கியில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் போது கடன் பத்திரங்களில்(Bonds) வட்டி விகிதம் சற்று அதிகமாக காணப்படும். இது போல பங்குச்சந்தை இறக்கத்தில் தங்கத்தின்(Gold) மீதான வருவாய் அதிகரிக்கும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் ஒரே துறையில் மட்டுமே முதலீடு செய்யாமல் பல துறைகள் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யும் போது, துறை சார்ந்த ரிஸ்க் தன்மையை குறைக்கலாம். சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வேறுபாட்டை நாம் தெரிந்து கொண்டால், நீண்டகாலத்தில் செல்வவளத்தை ஏற்படுத்தலாம். சேமிப்பு என கூறும் போது பாதுகாப்பு இருந்தாலும், பணவீக்கம் தான் பாதகமாக அமையும். ஆனால் முதலீடு எனும் போது பலவித ரிஸ்க் தன்மைகளை நாம் கையாள வேண்டும். எதிர்பாராமல் வரக்கூடிய இழப்பீடுகளை தவிர்க்க நாம் முதலீட்டு காப்பு செய்வது அவசியமாகும்.

முதலீட்டு காப்பு என்பது உங்கள் முதலீட்டின் மீதான விளைவுகளிலிருந்து உங்கள் அன்றாட (நிதி) வாழ்க்கையை பாதுகாக்க உதவுவது; நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு வருமானம் ஏதும் தராமலோ அல்லது நஷ்டத்தையோ ஏற்படுத்தலாம்; அந்த சமயத்தில் உங்களது தினசரி பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையை பாதிக்காத வண்ணம் காப்பது அவசியம். இதை தான் நாம் முதலீட்டு காப்பு(Investment insurance or insulation) என்கிறோம்.

தனிநபர் ஒருவர் சிறு முதலீட்டாளராக வலம் வரும் போது போதுமான தொகைக்கு டேர்ம் பாலிசி, மருத்துவ மற்றும் விபத்து காப்பீடு பெறுவது அவசியம். ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு தேவையான அவசரகால நிதி, கடன் இருந்தால் அதனை முழுவதுமாக அடைத்து விடுதல், எதிர்கால இலக்கிற்கு தேவையான தொடர் முதலீடு ஆகியவற்றை சரியாக கையாள்வது நல்லது. நிதி சொத்துக்கள்(Stocks, Bonds, Deposits, Mutual Funds, Cash) மற்றும் அசையா சொத்துக்கள்(Real Estate, Commodity, Machinery) என முதலீட்டை கலவையாக கொண்டிருக்கும் நிலையை போர்ட்ஃபோலியோ முதலீடு எனலாம்.

குடும்பத்தில் வருவாய் ஈட்டும் ஒருவர், தனது குடும்பத்திற்கு தேவையான நிதி பாதுகாப்பை உறுதி செய்ய டேர்ம் பாலிசி மற்றும் மருத்துவ காப்பீடு எடுப்பது அவசியமென சொல்லியிருந்தோம். அது போல நமது வாகனம், வீடு, கைபேசி, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த உபகரணங்களுக்கும் காப்பீடு எடுத்து வைக்கலாம். ஆனால் நீங்கள் செய்த முதலீட்டிற்கு ?

முதலீட்டிற்கு காப்பீடு செய்வது அவசியமா என்ன ?

ஆம், அவசியம் தான். உங்களது முதலீடு சிறிய அளவில் செய்யப்பட்டிருந்தால், சந்தை இறக்கத்தில் ஏற்படும் இழப்பை தவிர்க்க நாம் முதலீட்டை பரவலாக்கலாம். இல்லையெனில் தங்கத்தை ஒரு இழப்பு காப்பு சாதனமாக(Hedging) பயன்படுத்தலாம். பங்குச்சந்தை இறக்கத்தில் தங்கத்தின் செயல்பாடு இதுவரை வரலாற்றில் சாதகமாக தான் இருந்துள்ளது.

உங்களது முதலீட்டு போர்ட்ஃபோலியோ மதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், அதனை பொருளாதார மந்தநிலை காலங்களில் ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாக்க முறையான காப்பு செய்ய வேண்டியது அவசியம். உதாரணமாக ஒருவரது போர்ட்ஃபோலியோ மதிப்பு ரூ.50 லட்சம் என கொள்வோம். பங்குகளில் அவரது முதலீடு 20 சதவீதமாக உள்ளது. அதாவது 50 லட்சம் ரூபாயில் 10 லட்ச ரூபாய் பங்குகளில்.

ஏதோ ஒரு காரணத்தால் சந்தை பெரும் வீழ்ச்சியை காணும் போது, இவரது பங்குகளின் மதிப்பு 10 சதவீத இழப்பை சந்திக்கிறது. 10 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு லட்ச ரூபாய் மதிப்பு இழப்பு(அவர் உண்மையில் பங்குகளை விற்கவில்லை, இழப்பு மதிப்பில் மட்டுமே). இதனை தவிர்க்கும் வகையில், அவர் முன்னரே இழப்பு ஏற்படுவதற்கான காப்பு முறையை செய்திருந்தால், அவரது இழப்பு மதிப்பு குறையும். இதற்கு இழப்புகளை கட்டுப்படுத்த பயன்படும் ஹெட்ஜிங் உத்தி(Hedging Strategy) துணைபுரியும். அவரது போர்ட்ஃபோலியோ மதிப்புக்கு ஈடாக, ஊக வணிகத்தில்(Derivatives) ரூ.5000 க்கு காப்பீடு செய்திருந்தால், அவருக்கு ஏற்படும் இழப்பு ரூ.10,000 மட்டுமே. காப்பீட்டு பிரீமியத்தொகை  மற்றும் ஏற்படக்கூடிய இழப்பும் சேர்த்து ரூ.15,000 மட்டுமே செலவாகும். இதனை அவர் செய்யாமல் விட்டால், அவருக்கு போர்ட்ஃபோலியோ மதிப்பில் ரூ. 1 லட்சம் இழப்பாக காணப்படும். (காப்பீடு செய்ய வேண்டிய தொகையான ரூ.5,000 ஒரு உதாரணமாகவே சொல்லப்பட்டுள்ளது. சந்தையில் இந்த தொகை வேறுபடலாம். எனவே, தகுந்த நிதி ஆலோசகர் அல்லது தரகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்)

காப்பீடு செய்ய வேண்டிய தொகை, பொதுவாக உங்களது மொத்த முதலீட்டு மதிப்பில் 5 சதவீதத்திற்கு மிகாமல் இருக்குமாறு பார்த்து கொள்வது நல்லது. உதாரணமாக உங்களது பங்கு முதலீட்டு மதிப்பு ரூ.10 லட்சம் என்றால், நீங்கள் அதற்குரிய இழப்பு காப்பு தொகையாக அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை செலவழிக்கலாம். அதற்கு மேல் செலவு செய்வது உங்களது முதலீட்டிற்கே விரயத்தை ஏற்படுத்தி விடும். சந்தையில் ஏற்படும் சிறிய அளவிலான ஏற்ற-இறக்கத்திற்கு தேவைப்பட்டால் மட்டுமே காப்பு செய்ய வேண்டும். பெரும்பாலும் உலக பொருளாதார மந்தநிலை, போர் பதற்றம், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் ஊரடங்கு சமயங்களில் மட்டுமே பங்குச்சந்தை அதிக வீழ்ச்சியை காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அதனை கருத்தில் கொண்டு நாம் முடிவு செய்யலாம்.

பங்குகளில் மட்டுமில்லாமல், நாம் மற்ற முதலீடுகளின் மீது ஏற்படும் ரிஸ்க் தன்மையையும் அதற்கேற்ற உத்திகளை பயன்படுத்தி குறைக்கலாம். வெறுமெனே போர்ட்ஃபோலியோ காப்பு(Portfolio Insurance) மட்டும் செய்யாமல், பங்குச்சந்தை வீழ்ச்சியில் தங்கத்தின் மூலம் கிடைத்த பெருத்த லாபத்தை, மீண்டும் பங்குகளில் விலை குறைவாக இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி முதலீடு செய்வதும் சிறந்த உத்தி தான்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s