பங்குச்சந்தையில் நீங்கள் பணத்தை இழக்க இந்த ஐந்து காரணங்கள் போதும்
5 Fundamental Things to lose your money in the Stock Market
பங்குச்சந்தையில் அவ்வப்போது காரசாரமாக பேசப்படுவது லாப-நட்டத்தில் தான். பங்குகளை ஆராய்ந்து நீண்டகால இலக்குகளுக்கு பங்குகளை வாங்கிய ஒருவர், எனது பங்கு விலை ஏறவில்லை என கவலை கொள்வார். குறுகிய நேரத்தில், செய்த முதலீட்டை காட்டிலும் பல மடங்கு லாபம் சம்பாதித்தாக ஒருவர் பெருமிதம் கொள்வார். பங்குச்சந்தை கடலில் இவையெல்லாம் சிற்றின்ப நிலை தான்.
பங்குச்சந்தையை நாம் ஒரு தொழிலாக அணுகும் போது மட்டுமே அதனை கவனத்துடன் அணுகுவோம். பங்குச்சந்தைக்கு தேவை கவனமும், கனிவும் தான். எளிமையாக சொன்னால் நீண்டகாலத்தில் பொறுமையாக இருப்பதும், சரியான நேரத்தில் லாபத்தை கையகப்படுத்துவதும் முக்கியமாகும்.
சந்தையில் நீங்கள் தின வர்த்தகராக இருந்தாலும்(Day Traders) சரி, குறுகிய கால மற்றும் நீண்டகால முதலீட்டாளராக(Investors) இருந்தாலும் சரி, அடிப்படை தன்மைகளை தாண்டி உங்களுக்கான அதிர்ஷ்டமும் சில நேரங்களில் எட்டி பார்க்கும். அதனை சரியான நேரத்தில் மற்றும் அதற்கான அளவில் லாவகமாக பிடித்து வைத்து கொள்வது நன்று. ஆனால், அந்த அதிர்ஷ்டத்தை உங்களால் கண்டறிய முடிகிறதா என்பது மிகவும் அவசியமான ஒன்று.
அதிர்ஷ்டம் சில நேரங்களில் சந்தையில் தலைகாட்டும் என சொல்லியிருந்தோம். அந்த அதிர்ஷ்டத்தின் பெயர் தான், ‘ பங்குச்சந்தையில் ஈடுபடும் தொழில் நிறுவனம்’. அந்த நிறுவனம் நேர்மையான முறையில், நீண்டகாலத்திற்கு தொழில் செய்யும் பட்சத்தில் உங்களுக்கான அதிர்ஷ்டம் நிச்சயம். நிறுவன குறிக்கோள், சிறந்த நிர்வாகம் மற்றும் முதலீட்டாளரின் நலனில் அக்கறை கொள்ளுதல் ஆகியவை ஒரு பங்கின் வருவாயினை (Not the Share Price) உயர்த்தும்.
அதே வேளையில், சொல்லப்படவுள்ள இந்த ஐந்து காரணிகளில் உங்கள் அதிர்ஷ்டம் பெரும்பாலும் செயல்படாது. பல நேரங்களில் நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணத்தை முழுவதுமாக இழக்க நேரிடும். பங்குச்சந்தையில் ஈடுபடும் பலர், ‘எனக்கு நீண்டகாலத்தில் நம்பிக்கை இல்லை, உடனடியாக பணத்தை கண்ணில் பார்க்க வேண்டும்’ என்பர். உண்மையில் ஊகத்தில் பயணம் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும். அதே வேளையில் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்கள் ஈட்டிய முழு லாபம் மற்றும் செய்த முதலீட்டையும் இழக்கும் வாய்ப்பு இங்கு அதிகம். நீங்கள் தான் தவறு செய்ய வேண்டுமென்று இல்லை. நீங்கள் முதலீடு செய்த நிறுவனம் தவறு செய்யும் பட்சத்தில், உங்கள் பணம் தான் இழப்பை சந்திக்கும்.
சுருக்கமாக சொன்னால், ‘தின வர்த்தகர்களுக்கு தேவை – திறமையான பண நிர்வாகமும்(Disciplined Money Management), முதலீட்டாளர்களுக்கு தேவை – தாங்கள் முதலீடு செய்த நிறுவனம் திறமையாக நிர்வாகம்(Discpilined Corporate Governance) செய்வதும் தான்’.
- அதிக கடன் உள்ள நிறுவனம் (High Debt)
- நிறுவனர்களின் பங்கு அடமான அதிகரிப்பு (Promoters Pledging more than 10 Percent)
- தொடர்ச்சியாக மூன்று முதல் ஐந்து நிதியாண்டுகளில் வருவாயில் நஷ்டத்தை மட்டுமே கொண்டிருப்பது (Negative Financial Trend & Unstable on Earnings)
- சொல்லப்பட்ட லாபத்திற்கு தகுந்தாற் போல், நிறுவனத்திற்கு பண வரத்து இல்லாமை (Weak Cash Flow)
- வங்கி வட்டி விகிதத்தை காட்டிலும் மிகவும் குறைவான வருவாய் (ஐந்து வருடங்களுக்கு மேல்) – Low ROE & ROCE (Less than Risk Free Rate)
மேலே சொல்லப்பட்ட ஐந்து காரணிகளில் உங்கள் அதிர்ஷ்டம் செயல்படாது. எனவே நல்ல நிறுவன பங்குகளையும், நீண்டகாலத்தில் தொழில் செய்யும் நிறுவனங்களையும் தேர்ந்தெடுப்பது ஒருவருக்கு நல்ல வருவாயை அளிக்கும். பங்குச்சந்தையில் பணம் பண்ண வெறும் விலை எண்கள் மட்டுமே உதவாது, திறமையான நிறுவனமும் அமைய வேண்டும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை