UPI Payments mutual funds

மியூச்சுவல் பண்டு vs பங்குச்சந்தை – எங்கே முதலீடு செய்வது ?

மியூச்சுவல் பண்டு vs பங்குச்சந்தை – எங்கே முதலீடு செய்வது ?

Mutual Funds vs Stock (Share) Market – Where to invest ?

நம்மில் பலர் மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதியும், பங்குச்சந்தையும் ஒன்று என நினைத்து கொள்கின்றனர். அது போல, சொல்லப்பட்ட இரண்டுமே மிக அதிகமான ரிஸ்க் தன்மை கொண்டவை, அதனால் முதலீட்டுக்கு ஏற்றதல்ல என்ற தவறான எண்ணமும் உள்ளது.

உண்மையில் மியூச்சுவல் பண்டு(Mutual Funds) என்பது முதலீட்டாளர்களிடம் பெறப்படும் முதலீடு பல்வேறு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும் முறையாகும். இதற்காக பல பிரிவுகளும், திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை நிர்வகிப்பது அஸெட் மேனேஜ்மென்ட்(Asset Management Company) என சொல்லப்படும் நிறுவனங்களாகும். பெரும்பாலும் இந்நிறுவனங்கள் வங்கி சேவையிலிருந்து வந்தவை ஆகும். ஆதலால் இந்த நிறுவனங்களின் நிதி சார்ந்த அனுபவமும் நீண்ட காலத்திற்கு உரியவை.

2020ம் ஆண்டு முடிவின் படி, அமெரிக்காவின் பரஸ்பர நிதிகளின் சொத்து மதிப்பு(AUM) சுமார் 24 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய பரஸ்பர நிதிகள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ. 33 லட்சம் கோடி (மே 31, 2021). உலகளவில் முதல் பத்து இடங்களில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் நிதி(Financial Assets) சார்ந்த சொத்துக்களை மட்டுமே சேர்த்து வைத்துள்ளனர். அதாவது அவர்களிடம் நிலம், தங்கம், வைரம் போன்றவையாக இல்லாமல் வங்கி முதலீடு, மியூச்சுவல் பண்டு, பங்குச்சந்தை மற்றும் இதர நிதி சார்ந்த முதலீடுகளாக இருக்கலாம்.

பரஸ்பர நிதி சேவையில் பல திட்டங்கள் உள்ளன. இவை பல இனங்கள் சேர்ந்த ஒரு கூட்டு கலவையாக உள்ளன. சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட் ஆகியவற்றுக்கு மாற்றாக, அரசு மற்றும் தனியார் பத்திரங்கள், அந்நிய நிறுவனத்தில் முதலீடு, பங்குச்சந்தை, குறிப்பிட்ட துறை சார்ந்த என முதலீடு திட்டங்கள் பல உள்ளன. இவை அனைத்தும் கிடைக்கப்பெறும் சந்தை தான் மியூச்சுவல் பண்டு சேவையாகும்.

தனிநபர் ஒருவர் தனக்கும், தனது குடும்பத்திற்கும் தேவையான நிதி இலக்குகளை நிர்ணயித்து பின்பு அதற்கேற்ற பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். இங்கே கால அளவு என்பது முக்கியம். நீங்கள் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்ய உள்ளீர்கள் மற்றும் எப்போது இந்த முதலீடு உங்களுக்கு தேவைப்படும் என்பதையும் அறிந்திருத்தல் அவசியம். மியூச்சுவல் பண்டு முதலீடு ரிஸ்க் தன்மை கொண்டது. ஆனால் அனைத்து மியூச்சுவல் பண்டு திட்டங்களும் ஒரே அளவிலான ரிஸ்க் தன்மை கொண்டவையல்ல. ஒரு இரவில் இருந்து 20 வருடங்கள்(Overnight to Long term Funds) வரை வெவ்வேறான முதலீட்டு திட்டங்களை பிரதிபலிப்பவை.

மிகவும் குறுகிய காலத்தில் குறைந்த ரிஸ்க் அளவு கொண்ட திட்டங்கள் உள்ளன. இவற்றில் கிடைக்கப்பெறும் வருவாய் அஞ்சலகம் மற்றும் வங்கி சேமிப்பை ஒட்டி அமையும். நடுத்தர காலத்தில் அரசின் கொள்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பொறுத்து திட்டங்களின் வருவாய் இருக்கும். நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு நல்ல வருவாயை ஈட்ட முடியும். முதலீட்டை பொறுத்தவரை பணவீக்கத்தை தாண்டிய வருவாயும், நிதி இலக்குகளை எட்டக்கூடிய தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதற்கு முன்னர், உங்களுக்கு தேவைப்படும் விஷயங்கள்:

  • நிதி இலக்கு (Goal Name)
  • இலக்கிற்கான தொகை (இன்றைய  மதிப்பில்) – Goal Value / Corpus
  • இலக்கிற்கான காலம் – Goal Period
  • எதிர்பார்க்கும் வருவாய் – Expected Returns %
  • முதலீட்டு வடிவம் – மாத முதலீடு அல்லது ஒரு முறை மட்டும் முதலீடு

மேலே சொன்ன விஷயங்களை  கருத்தில் கொண்டு, அதனை சார்ந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது அவசியமானது. புரிவது சற்று கடினமாக இருந்தால், தகுந்த முதலீட்டு ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுங்கள். முதலீட்டு ஆலோசகர் எனும் போது, உங்களின் நிதி இலக்குகளில் அக்கறை கொண்டு, அதற்காக கட்டணம் பெற்று சரியான தரவுகளை அளிக்கும் நபர்களை கண்டறியுங்கள். ஏஜெண்ட்களிடம் மாட்டி கொள்ள வேண்டாம். அவர்களின் கமிஷன் தொகைக்காக உங்களுக்கு சம்மந்தமில்லாத முதலீட்டு திட்டங்களை பரிந்துரைக்கலாம். முடிவில் நஷ்டம் உங்களுக்கு மட்டுமே. இந்த தவறான அணுகுமுறையால் தான், இன்று நம் நாட்டில் பெரும்பாலோர் முறையான காப்பீட்டு திட்டத்தை பெற இயலவில்லை. அது முதலீட்டு திட்டங்களிலும் நடக்க வேண்டாம்.

பங்குச்சந்தை(Share Market) என்பது ஒரு தொழிலை போல. ரிஸ்க் என்பது இவற்றில் எப்போதும் அதிகம் தான். பங்குச்சந்தை மூலம் வெகு விரைவில் நான் கோடீஸ்வரராக போகிறேன் என இங்கு யாரும் வர வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விட்டால், பிறகு யாரையும் நம்ப மாட்டீர்கள். பங்குச்சந்தை முதலீடு(Equity Investing) என்பது பலதரப்பட்ட முதலீட்டாளர்களிடம் பெறப்படும் முதலீடு, ஒரு நிறுவனத்திற்கு அளிக்கப்படும். பின்பு அதனை கொண்டு அந்த நிறுவனம் தொழில் செய்யும். லாப, நட்டத்திற்கு முதலீட்டாளர்கள் தான் பொறுப்பு. பங்குச்சந்தையை நிர்வகிக்க ஜாம்பவான் செபி(SEBI) உள்ளது. சந்தையில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் ஒழுங்குமுறைப்படுத்தவது செபியின் வேலை. செபி தான் பரஸ்பர நிதி என சொல்லப்படும் மியூச்சுவல் பண்டு சேவைக்கும் தலைமை.

பங்குச்சந்தை என நினைத்து கொண்டு நம்மில் பலர் சந்தையை விட்டு, மோசடி பேர்வழிகளிடம்(Ponzi Schemes) பணத்தை இழந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையை பொறுத்தவரை ஒழுங்குமுறை ஆணையம், தரகர்கள், பதிவாளர்கள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் இருக்கும். இவை அனைத்தும் முதலீட்டாளர்களின் நலன் கருதி நிர்வாக சேவை செய்வதற்கு. பங்குச்சந்தையில் உங்களுக்கு பணம் பண்ண யாரும் உதவ மாட்டார்கள், அப்படி எதுவும் இங்கே கிடையாது. பங்குச்சந்தையை பற்றிய கல்வியை அளிக்க இங்கே எண்ணற்ற நிறுவனங்களும், புத்தகங்களும் உள்ளன. முறையாக கற்று கொண்டு, நீங்களாகவே களம் இறங்கினால் தான் உண்டு. பண விஷயத்தில் மற்றவர்களை நம்பி கொண்டு, உங்கள் கையை சுட்டு கொள்ள வேண்டாம்.

பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம், உங்கள் பணத்தை கொண்டு. உங்களிடம் உபரியாக உள்ள பணத்தை மட்டுமே, சந்தையில் முதலீடு செய்து பணம் பண்ணுங்கள். நஷ்டத்தை தவிர்க்க இயலாது, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் – பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், இவற்றில் சூதாட்டம் வேண்டாம். முதலீடு செய்யும் முன்னர், அதற்கான முறையான கல்வியை கற்று கொண்டு பின்னர் ஆயுதமாகுங்கள். உண்மையில் பங்குச்சந்தை பணம் பண்ணும் சூத்திரம், அனைவருக்கும் சாத்தியமே – முறையான கல்வியும், நீண்ட காலத்தில் பொறுமையும் இருந்தால்.

மியூச்சுவல் பண்டுக்கு பதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா ?

என்னிடம் பல நண்பர்கள் கேட்கும் கேள்வி இது. மியூச்சுவல் பண்டை விட, பங்குச்சந்தையில் அதிகம் வருமானம் கிடைக்குமாமே, மியூச்சுவல் பண்டும் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்கிறார்கள் – அப்புறம் எதற்கு நான் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வேண்டும் ?

இந்த கேள்வி தான் பெரும்பாலானவர்களிடம் !

முதலில் இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். மியூச்சுவல் பண்ட் சேவையில் பல கலவை திட்டங்கள் உள்ளன. பங்குச்சந்தை என்பது ஒரு நேரடி தொழில் போல. பரஸ்பர நிதி சேவைக்கு பெரிய கற்றல் தேவையில்லை. ஆனால், பங்குச்சந்தை அப்படியல்ல.

நீங்கள் இலக்கிற்காக முதலீடு செய்ய நினைத்தால், மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் தான் முதலீடு செய்ய வேண்டும் – ஒரு மாரத்தான்(Marathon) நடை போல…

உங்களுக்கென நிதி இலக்கு, இலக்கிற்கான காலம் உள்ளது. நீங்கள் அதனை தவிர்க்க இயலாது. உங்களது குழந்தை மேற்படிப்பு, திருமணம், ஓய்வு காலம் ஆகியவை குறிப்பிட்ட கால அளவை கொண்டவை. அதனால் முதலீட்டில் ஒரு ஒழுக்கம் தேவைப்படும். தொடர்ச்சியாக நீங்கள் முதலீடு செய்து வரும் போது, உதாரணமாக 15 வருடங்களுக்கு பிறகு உங்கள் குழந்தையின் திருமண செலவை ஏற்படுத்தலாம் அல்லது உங்கள் ஓய்வு காலமாக இருக்கலாம்.

நான், ஏன் எனது நிதி இலக்கிற்கான தொகையை பங்குச்சந்தை மூலம் சம்பாதிக்க முடியாதா ?

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கலாம். பங்குச்சந்தை என்பதே உங்களுக்கான செலவத்தை ஏற்படுத்துவது தான். ஆனால், உங்களால் நிதி இலக்கை சார்ந்து முதலீடு செய்ய சாத்தியமா என்றால் – அது தான் இல்லை. மியூச்சுவல் பண்டு பல கட்டமைப்புகளை கொண்டது. அங்கே உங்கள் பணம்,அனுபவமிக்க பண்டு மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுவாக அவர்களுக்கு தெரியும், அடுத்து என்ன சந்தையில் நடக்க போகிறது என்று. அவர்களிடம் இருப்பதோ பல லட்சம் கோடிகள் முதலீடு. ஆனால், நமக்கு தாமதமான செய்திகள் மூலம் – அதுவும் ஊடகத்தின் வாயிலாக.

பங்குச்சந்தையில் நமக்கான ஒழுக்கத்தை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். தவறினால், பணம் இழக்க நேரிடும். யூனிடெக், சுஸ்லான், ஜே.பி. அஸோஸியேட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் போன்ற பங்குகளின் விலையெல்லாம் முன்னர் எப்படி இருந்தது என்பது நமக்கு தெரியும். ஆனால், இன்று பங்குகளின் விலை மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் நிர்வாகமே தள்ளாட்டத்தில். மேலே சொல்லப்பட்ட பங்குகள் எல்லாம் ஒரு காலத்தில் பெரு நிறுவன பங்குகள். அவற்றின் விலையும் உச்சத்தில் தான் இருந்தன. முடிவில் ஒரு குமிழி(Bubble) போல உடைந்து விட்டது. பல்வேறு நிர்வாக காரணங்களால் தான் அவை நடைபெற்றுள்ளது. இது போன்ற நிறுவனங்களில் நாம் முதலீடு செய்து விட்டு, நமது இலக்கிற்கான காலத்திற்கு அருகில் வரும் போது எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டு விட்டால் !

மியூச்சுவல் பண்டை போல நீங்கள் சந்தையில் மாதாமாதம் ஒரே பங்கில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது அவ்வளவு எளிதல்ல. பங்கு உச்சத்தில் இருந்தால் நீங்கள் விற்க நேரிடும் அல்லது நிறுவனத்தை பற்றிய செய்திகள் எதிர்மறையாக இருந்தால், நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள் ? உங்களுக்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் நூறு சதவீதம் உண்மையாக இருக்குமா ? நீங்கள் வாங்கிய பங்கு ஒவ்வொரு வாரமும் இறக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் தொடர்ச்சியாக வாங்கும் மனநிலையை கொண்டிருப்பீர்களா அல்லது அதற்கான காரணத்தை அறிய முற்படுவீர்களா ? பொதுவாக பங்குச்சந்தையில், நீங்கள் முடிவெடுப்பதற்குள் அந்த நிகழ்வு முடிந்து விடும்.

மியூச்சுவல் பண்டில், சந்தை ஏற்ற இறக்கத்தை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நமது இலக்கு தொடர்ச்சியாக முதலீடு செய்வது தான். அதனால் தான் சொல்கிறேன், பரஸ்பர நிதிகள் எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை உங்கள் நிதி இலக்கிற்கு பயன்படுத்துங்கள். பங்குச்சந்தையை உங்கள் செல்வ வளத்திற்கு(Wealth Creation) பயன்படுத்துங்கள் என்று. நீங்கள் எந்த வேலை செய்தாலும், உங்களுக்கென்று பகுதி நேர தொழில் உள்ளது – அது தான் பங்குச்சந்தை. பங்குச்சந்தையில் முதலீடு செய்து செலவத்தை பெருக்க உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள். அவர்களின் நீண்ட கால இலக்கிற்கு மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s