வரவிருக்கும் வாரங்களில் சந்தையை நகர்த்தும் முக்கிய காரணிகள்
Key Factors to drive the Indian Stock Market in the Upcoming weeks – May 2020
கடந்த வார முடிவில் பாரத ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, மத்திய அரசின் கடன் நிலுவை தொகை 1.35 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் நிலையில், அது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், தினசரி கூலி வருவாயை நம்பியிருக்கும் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இது ஒரு உலக பொருளாதார காரணியாக பார்க்கப்படுகிறது. சிறு மற்றும் குறுந்தொழில்கள் மத்திய அரசின் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. அதிக வருவாயை பெறும் தனிநபர் வரிதாரர்களுக்கு, மேலும் வரி விகிதத்தை அதிகரிப்பது சம்மந்தமாக அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான குறுகிய மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயத்தில் வரி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்(GDP), பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை தகவல்கள் அடுத்து வரும் வாரங்களில் வெளியிடப்படும்.
அடுத்த வாரத்தில் அமெரிக்காவின் வங்கி வட்டி விகித முடிவுகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதங்கள்(Jobless Claims) வெளிவர உள்ளது. வீட்டுமனை விற்பனை, தனிநபர் வருவாய் மற்றும் செலவு சார்ந்த அறிக்கைகளும் வர உள்ளன.
இங்கிலாந்து மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு, மற்ற இதர நாடுகளின் பணவீக்க விகிதம், தொழில் புரிவதற்கான சாதகங்கள், வாகன விற்பனை ஆகிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும். அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருத்துவம் மற்றும் சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறையை தவிர, பெரும்பாலான துறைகள் எதிர்மறையான வருவாயை கொண்டிருக்கும்.
ஏப்ரல் – ஜூன் காலாண்டு முடிவுகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தைக்கு சவாலாக இருக்க கூடும். மேலும் பொருளாதார வளர்ச்சி விகிதமும் ஒரு சதவீதத்திற்கு குறைவாக செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை