ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் முகநூல்(Facebook) நிறுவனம்
Facebook buys 10 Percent Stake in Reliance Jio
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்திற்கு சுமார் 250 கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளனர். 2004ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், உலகின் முதல் 10 முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தற்போதைய நிலையில் முகநூல் பயன்பாடு 140 மொழிகளில் உள்ளன.
முகநூல் நிறுவனர் திரு. மார்க் சக்கர்பர்க்கின்(Mark Zuckerberg) சமீபத்திய சொத்து மதிப்பு 54.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சந்தையில் உள்ள பிரபலமான நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது. வாட்சப்(Whatsapp), இன்ஸ்டா கிராம், அக்குலஸ் வி.ஆர்.(Oculus VR) ஆகிய நிறுவனங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ நாங்கள் வெறும் நிறுவனத்தை மட்டுமே வாங்குவதில்லை. சிறந்த நபர்களை பெறுவதற்காகவே நாங்கள் நிறுவனத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறோம். சிறந்த நிறுவனர்களை கொண்ட நல்ல நிறுவனங்களில் தான் எங்கள் கவனம் உள்ளது “ என மார்க் சக்கர்பர்க் கூறுவதுண்டு.
நிறுவனத்தை கையகப்படுத்தலில் தற்போது நம் நாட்டில் உள்ள முக்கியமான நிறுவனத்தின் மீது முகநூல் ஈர்க்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப பரிமாறுதலில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைவதாக சொல்லியிருந்த முகநூல் நிறுவனம், தற்போது ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries) நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ. ஜியோ நிறுவனத்திற்கு சந்தையில் 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். ஆரம்ப நிலையில் ஜியோ தொழில்நுட்ப தளத்தில் முதலீடு செய்ய போகும் முகநூல், இதற்காக 43,570 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதன் மதிப்பு ஜியோ நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதன் மூலம் டிஜிட்டல் உலகில் ஜியோ(Reliance Jio) தனது பலத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சார்ந்த சேவைகளை மட்டுமே கொண்டிருக்காமல், இணைய வழி தொலைக்காட்சி, பண பரிவர்த்தனை, நிதி துறையில் மியூச்சுவல் பண்டு விற்பனை ஆகிய சேவையிலும் நுழைந்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை