நினைத்து பார்த்திராத கச்சா எண்ணெய் வீழ்ச்சி – பேரல் வாங்குவதற்கான விலையை கூட பெறவில்லை.
World’s Biggest Oil Price Crash – WTI Crude at USD -37.63 per Barrel
உலகளாவிய மீட்டெடுப்பு என காணப்படும் கோவிட்-19 தாக்கம், மெல்ல மெல்ல உலக பொருளாதாரத்தை அழித்து கொண்டிருக்கிறது. வளரும் நாடுகளும், வளர்ந்த அமெரிக்காவும் தங்கள் பொருளாதாரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அதன் போக்கை காட்டி கொண்டிருக்கிறது.
அனைத்து நாடுகளிலும் காணப்படும் ஊரடங்கு உத்தரவால் விமான சேவை, பொது பேருந்து சேவை மற்றும் தொழில்களுக்கான சேவை நகர முடியாதவை ஆகிய காரணங்களால் கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்து போனது. அதிகப்படியான உற்பத்தியை செய்து விட்டு, பின்பு பேச்சு வார்த்தையை ஏற்படுத்தி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க போவதாக எண்ணெய் நாடுகள் சொல்லி கொண்டன.
ஆனால், கச்சா எண்ணெய் மலிவாக கிடைத்தாலும் இப்போதைய நிலையில் எல்லா நாடுகளும் கையிருப்பாக வாங்கி வைத்து கொள்ளும் என சொல்ல முடியாது. நேற்றைய பொழுதில்(20-04-2020) அமெரிக்க கச்சா எண்ணெய் குறியீடு (WTI Crude) வரலாற்றில் இதுவரை பார்த்திராத விலை வீழ்ச்சியை சந்தித்தது.
ஆரம்ப நிலையில் 30 சதவீத இறக்கத்தில் அது 21 வருட குறைவாக சொல்லப்பட்டது. அந்த வேளையில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 15 டாலர்களுக்கு குறைவாக வர்த்தகமாகி வந்தது. பின்பு 11 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகும் போது, கடந்த 34 வருடங்களில் காணப்பட்ட குறைவான அளவு இது தான் என சொல்லப்பட்டது. ஆனால், இதன் வீழ்ச்சி அப்படியே முடியவில்லை. நேற்றைய இரவில் கச்சா எண்ணெய் விலை ஒரு கட்டத்தில் 99 சதவீதம் வீழ்ச்சி கண்டு பேரலுக்கு வெறும் 15 சென்ட்டுகளுக்கு வர்த்தகமானது.
இறுதியாக பேரலுக்கு (-37.63) டாலர்கள் என்ற நிலையில் வர்த்தகம் முடிவடைந்தது சந்தையில் உள்ளவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும், அடுத்த இரண்டு – மூன்று வருடங்கள் பொருளாதாரம் இயல்பு நிலையை பெற எடுத்து கொள்ளும் காலமாக கருதப்படும். கச்சா எண்ணெய் உற்பத்தியில்(Crude Oil Manufacturing) உள்ள சிறு வணிகர்கள் பெரும்பாலானோர் தங்கள் சேவையை நிறுத்தி விட்டனர்.
எரிபொருட்களுக்கான தேவைப்பாடு இப்போதைய நிலையில் சரியாகாது. இதனிடையே மின்னணு சார்ந்த வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் டெஸ்லா(Tesla) நிறுவனம் சீனாவிற்கு 31,000 மின்சார வாகனங்களை விற்பனை செய்திருந்தது கவனிக்கத்தக்கது.
பொதுவாக கச்சா எண்ணெய் வீழ்ச்சி, இதன் எரிபொருட்களை பயன்படுத்தும் விமான சேவை, பொது போக்குவரத்து மற்றும் பெயிண்ட் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம். இருப்பினும், நாட்டில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இது பாதகமாக அமையும்.
கச்சா எண்ணெய் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், இது நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை(Balance of Trade) சமாளிக்கலாம். அதே வேளையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. மீண்டும் கச்சா எண்ணெய் தனது பழைய நிலையை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பின், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெரும் வீழ்ச்சிடையும். இதனை சரி செய்ய அரசு டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பிழப்பு(Devalue) நடவடிக்கையை ஏற்படுத்த கூடும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
Super
LikeLike