எச்.டி.எப்.சி. வங்கி நான்காம் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 6,928 கோடி
HDFC Bank’s Standalone Net Profit of Rs. 6,928 Crore – Q4FY20
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய். ஆண்டுக்கு 10 சதவீதத்திற்கு மேல் வருவாய் வளர்ச்சியை கொண்டிருக்கும் இவ்வங்கி 2019-20ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது.
நான்காம் காலாண்டில்(Quarterly Results) வங்கியின் வருவாய் ரூ. 29,885 கோடியாகவும், இதர வருமானம் ரூ. 6,033 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 9,174 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 6,928 கோடி. கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, வருவாய் வளர்ச்சி 13.5 சதவீதமும், நிகர லாபம் 17.7 சதவீதமும் வளர்ச்சியை பெற்றுள்ளது.
மார்ச் 2020 காலாண்டு முடிவில் ஒட்டுமொத்த வாராக்கடன்(Gross NPA) விகிதம் 1.26 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.36 சதவீதமாகவும் இருந்துள்ளது. இது கடந்த சில காலாண்டுகளை காட்டிலும் குறைவாக தான் காணப்படுகிறது. 2018-19ம் நிதியாண்டின் முடிவில் வங்கி ஒட்டுமொத்தமாக ரூ. 1.05 கோடியை வருவாயாகவும், ரூ. 22,332 கோடியை நிகர லாபமாகவும் வங்கி கொண்டிருந்தது.
எச்.டி.எப்.சி. வங்கியின் வருவாய் கடந்த மூன்று வருடங்களில் 19 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இது போல லாபத்தில் 20.50 சதவீதமும் (3 வருடங்கள்) மற்றும் ஐந்து வருடங்களில் 21 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.
தற்போது சொல்லப்பட்ட முடிவுகளில் வங்கியின் வட்டி வருவாய் கடந்த காலத்தை காட்டிலும் 16 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. மார்ச் காலாண்டு முடிவில் மொத்த மூலதன போதுமான விகிதம் 18.50 சதவீதமாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவுறுத்தலின் படி, எச்.டி.எப்.சி. வங்கி முதலீட்டாளர்களுக்கு ஈவு தொகையை(Dividend) வழங்கப்போவதில்லை என கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் பொருளாதார மந்தநிலை நிலவும் இது போன்ற காலங்களில் ஈவு தொகையை நிறுத்தி வைப்பதன் மூலம் வங்கியின் மூலதனத்தை பாதுகாக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களும் கடந்த 2019-20ம் நிதியாண்டுக்கான ஈவு தொகையை இனி அறிவிக்காது என தெரிகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை