பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள்
Recent Changes in Public Provident Fund(PPF) – 2019
பி.பி.எப்.(PPF) என சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு, சிறு சேமிப்பு திட்டத்தின் அங்கமாகும். மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும், நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் பி.எப். கணக்கிற்கு மாற்றாகவும் இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் சட்டத்தில் பி.பி.எப். க்கான சில மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.
பி.பி.எப்.(Public Provident Fund) கணக்கு என்பது 15 வருட கால சேமிப்பு திட்டமாகும். தேவைப்பட்டால், 15 வருட காலத்திற்கு பிறகு 5 வருட கால அளவில் திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம். நடப்பில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாக உள்ளது.. ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை. பி.பி.எப். முதலீட்டிற்கு வருமான வரி சலுகையும் உண்டு.
கணக்கில் உள்ள பணத்தை திரும்ப பெறுவதென்றால், இதற்கு முன்பு 7 வருடங்களுக்கு பிறகு மட்டுமே முடியும். ஆனால் தற்போது 5 வருடங்கள் (நிதியாண்டுகள்) முடிந்தவுடன் பணத்தை திரும்ப பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு படிவம் 5 ஐ நிரப்பி, பணத்தை கோரலாம்.
முன்னர் 7 வருடங்களுக்கு பிறகு, 25 சதவீத தொகையை மட்டுமே எடுக்க கூடிய நிலை இருந்தது. தற்போது 5 நிதியாண்டுகளுக்கு பின்னர் வரவில் உள்ள 50 சதவீத தொகையை பெறலாம். பணத்தை பெறுவதற்கான காரணங்கள் கடுமையான நோய்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒருவர் நோய்க்கான சிகிச்சை தேவைக்காக, உயர்கல்வி தேவை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியராக செல்லும் பட்சத்தில் என சொல்லப்பட்டுள்ளது.
பி.பி.எப். கணக்கில் வெளிநாட்டு வாழ் இந்தியர்(NRI) முதலீடு செய்ய முடியாது என்ற சட்டத்தை சற்று மாற்றி, கணக்கை துவங்கும் போது இந்திய குடிமக்களாக இருந்து பின்னாளில் வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தாலும், முதிர்வு காலம் முடியும் வரை, முதலீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
தற்போது குழந்தைகளின் பெயரிலும்(Minor Child) பி.பி.எப். கணக்கை துவங்கலாம். கூட்டு கணக்கும்(Joint Account) தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் தொகை, கணக்கு வைத்திருப்பவருக்கு எந்தவொரு கடன் அல்லது நிதி தொடர்பாக எந்தவொரு நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது ஆணையின் கீழ் இணைக்கப்படாது.
பி.பி.எப். கணக்கில் உள்ள தொகையை கொண்டு, கடன் வசதியும் பெறலாம். முன்னர், கடனுக்கான வட்டி விகிதம் பி.பி.எப். கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் 2 சதவீதம் அதிகமாக இருந்தது. தற்போது இது ஒரு சதவீதமாக (பி.பி.எப். வட்டி மற்றும் கூடுதலாக 1 %) சொல்லப்பட்டுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வு காலத்திற்கான(Retirment Savings) திட்டமாகும். இதனை சரியாக திட்டமிட்டு, நீண்ட காலத்தில் சேமித்து வரும் பட்சத்தில் நமக்கான ஓய்வு கால கார்பஸ் தொகை பலனளிக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை