டி.சி.எஸ். நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 8,042 கோடி
TCS Quarterly net profit to Rs. 8,042 Crore – Q2FY20
டாட்டா குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ்.(TCS) நிறுவனம் 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை இன்று(10-10-2019) வெளியிட்டது. செப்டம்பர் மாத காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 38,977 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் 10,225 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ. 8,042 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2018ம் வருட செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 7,901 கோடி ரூபாயாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது, நடப்பில் சொல்லப்பட்ட நிகர லாபம் 1.78 சதவீத வளர்ச்சியாகும்.
கடந்த 2018-19ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனை அளவு ரூ. 36,854 கோடியாகவும், இயக்க லாபம் ரூ. 10,278 கோடியாகவும் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. நடப்பு நிதி வருடத்தின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விற்பனை வருவாய் 2 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
அதே வேளையில் ஜூன் மாத காலாண்டுடன் லாபத்தை ஒப்பிடும் போது, ஒரு சதவீத சரிவை சந்தித்துள்ளது. ஜூன் 2019 காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 8,131 கோடியாகும். நிறுவனத்தின் இயக்க லாப அளவு கடந்த 12 மாதங்களில் சராசரியாக 26 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
டி.சி.எஸ். நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 45 ரூபாய் ஈவு தொகை(Dividend) வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போதைய தேதியில் இந்த நிறுவனத்தின் பங்கு 2005 ரூபாயில் வர்த்தகமாகி உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இதன் பங்கு விலை 4 சதவீத சரிவையும், ஒரு மாதத்தில் 8 சதவீத சரிவையும் சந்தித்துள்ளது.
ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் பங்கு விலை 50 சதவீதம் மற்றும் பத்து வருட காலத்தில் 614 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்.(Tata Consultancy Services) சந்தை மதிப்பு ரூ. 7.52 லட்சம் கோடியாக உள்ளது.
நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடந்த பத்து வருடங்களில் விற்பனை சராசரி அளவு 18 சதவீதமாக உள்ளது. லாப வளர்ச்சியும் பத்து வருடங்களில் சராசரியாக 20 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை