ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பங்குதாரர் – ஆண்டு பொதுக்கூட்டம்
Shareholder of Reliance Group Companies warned the Promoter – Annual General Meeting
ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (30-09-2019) மும்பையில் நடைபெற்றது. திரு. அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் நிப்பான் லைப், ரிலையன்ஸ் பவர், இன்ப்ரா(Reliance Infra) மற்றும் ரிலையன்ஸ் நேவல்(Reliance Naval & Engg) ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.
அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் அனைத்தும் கடன் சிக்கலில் உள்ளன. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அதன் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பெருவாரியான பணத்தை இழந்துள்ளனர்.
ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்திற்கு கடனாக ரூ. 46,160 கோடியும், ரிலையன்ஸ் பவர்(Reliance Power) ரூ. 30,450 கோடி, ரிலையன்ஸ் இன்ப்ரா ரூ. 17,770 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ரூ. 47,600 கோடி கடனாகவும் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கும் ரூ. 10,905 கோடி கடனாக உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் நிறுவனர்களின் பங்கு அடமானத்தில்(Pledging) உள்ளது கவனிக்கத்தக்கது.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அனில் அம்பானி பேசுகையில், நிறுவனத்தின் கடன்களை குறைத்து வருவதாகவும், அடுத்த 18 மாதங்களில் மேலும் சில கடன்களை அடைப்பதற்கான தீர்வுகளை கண்டுள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் நேவல் நிறுவனமும் பெரும் நிதிச்சிக்கலில் உள்ளது.
ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வரும் கடன் சேவை, வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த சேவையை நிறுத்த உள்ளதாகவும் அனில் அம்பானி கூறியுள்ளார். ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிறுவனத்தின்(Reliance ADAG) மீது பல குறைகள் எழுப்பப்பட்டன. பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் பரிசீலிக்கப்படுவதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சமயத்தில், கூட்டத்தில் இருந்த பங்குதாரர் ஒருவர், சொல்லப்பட்ட பிரச்சனைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படவில்லை எனில், நிறுவனத்தின் மீது வழக்கு தொடர போவதாக எச்சரித்தார். அந்த பங்குதாரர் ரிலையன்ஸ் குழும நிறுவனத்தில் இதுவரை 3 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், தற்போதைய நிலையில் தான் 90 சதவீத முதலீட்டை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சொல்லப்பட்ட இழப்பிற்கு நிறுவனமே பொறுப்பாகும் எனவும், நிறுவனத்தில் முதலீடு செய்த பல முதலீட்டாளர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டதற்கு நிறுவனத்தின் நிர்வாக திறமையின்மை தான் காரணம் எனவும் கூறினார். இதுவரை கம்பெனி சட்டம் 2013ன் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மீது பங்குதாரர்கள் சார்பில் முதல் வகுப்பு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு சொல்லப்பட்ட பங்குதாரர் வழக்கை பதிவு செய்யும்பட்சத்தில், நம் நாட்டில் இதுவே முதன்முறையாக இருக்கும்.
ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 380 ரூபாய் என்ற விலையிலிருந்து 28 ரூபாய்க்கு சரிந்துள்ளது. இதே போல ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு விலை 32 ரூபாயிலிருந்து 2 ரூபாய்க்கும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்கு விலை 18 ரூபாயிலிருந்து 65 பைசாவிற்கும் வந்துள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் பங்கு ஒரு வருடத்திற்கு முன்பு 300 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த பங்கின் விலை 24 ரூபாயாக உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை