பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு – டிசம்பர் 31, 2019
PAN – Aadhaar Linking extended to 31, December, 2019
பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நாளையுடன் (30-09-2019) முடிவடையும் நிலையில், தற்போது அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பிற்கான கடைசி தேதியாக 2019ம் ஆண்டின் டிசம்பர் 31ம் தேதியாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பான்(PAN) எண் இல்லையென்றாலும், ஆதார் எண்ணை கொண்டு வரி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வருமான வரி தாக்கல் செயல்முறையில் பான் எண்ணுக்கு மாற்றாக ஆதார்(Aadhaar) எண் சொல்லப்பட்டிருந்தது.
இருப்பினும், பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதில் எந்த மாற்றமும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் காலக்கெடுவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(Central Board of Direct Taxes) சார்பில் ஏழாவது முறையாக பான்-ஆதார் எண் காலக்கெடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தனி நபர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள், தாக்கல் செய்த பின் மின்னணு சரிபார்ப்பு(E-verify Return) செய்தால் மட்டுமே, அது முழுமையான வரி தாக்கல் செய்ததாக கருதப்படும். தற்போதைய நிலையில் மின்னணு சரிபார்ப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது.
தணிக்கைக்கு(Audited) உட்பட்ட வருவாய்க்கு, வருமான வரி தாக்கல் செய்ய உள்ளவர்களின் காலக்கெடுவும் செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து, அடுத்த மாதம் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்தை தாண்டும் பட்சத்தில், வரிப்பிடித்தம் இல்லையெனினும், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம்.
நடப்பு 2019-20ம் நிதியாண்டின் வருமானத்தை வரி தாக்கல் செய்யும் போது, ரூ. 5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி தள்ளுபடி உண்டு(Only Tax Rebate). அதே வேளையில் வரி தாக்கல் செய்தால் மட்டுமே, வரி தள்ளுபடி என்பதை மறக்க வேண்டாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை