பங்குச்சந்தையில் நீண்ட காலத்திற்கு பணம் சம்பாதிக்க வேண்டுமா – இதோ ஐந்து வாய்ப்புகள்
The Profit of a Company can be distributed to Investors in Five ways – Shareholders
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்குவதற்கு முன், அந்த நிறுவனம் சார்ந்த அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis) ஆராய்வது அவசியம். நிறுவனத்தின் பங்கு என்பது நமக்கான தொழில் வாய்ப்பாகும். அவற்றில் முதலீடு செய்யும் முன், நிறுவனத்தின் தொழில் அனுபவம் மற்றும் நிதி அறிக்கையை முழுமையாக கண்டறிந்து பின்பு முதலீட்டு முடிவை எடுக்கலாம்.
நமது நண்பரோ அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள நபரோ நம்மிடம் கடனாக ஒரு தொகையை கேட்டால், உடனடியாக கொடுத்து விடுவோமா, என்ன ? சற்று யோசிக்க தான் செய்வோம். சிறு வயது முதல் அவரை பற்றி நன்கு தெரியும், நாணயமானவர் என்றால் கடன் கொடுக்க தயங்க மாட்டோம். பண விஷயத்தில் அவர் சரியில்லை என்று தோன்றினால், உதவி செய்ய யோசிப்போம். ஆனால், பங்குச்சந்தையில் மட்டும் நமது யோசனை தவறாகி விடுகிறது.
காரணம், நாம் நிறுவனத்தின் நிலைமையை புரிந்து கொள்ளாமல், பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பதனால் தான். எந்தவொரு முதலீட்டை மேற்கொள்ளும் முன், அந்த முதலீட்டு சாதனம் நமக்கு புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறதா, வருவாய் ஈட்ட நாம் எவ்வளவு காலம் காத்திருக்கலாம், அவற்றில் உள்ள ரிஸ்க் தன்மை(Risk Management) போன்றவற்றை அறிந்த பின்னரே, முதலீட்டை துவக்க வேண்டும்.
ஆம், பங்குச்சந்தை மற்ற எல்லா முதலீட்டு சாதனங்களையும் விட அதிக வருவாயை கொடுக்க கூடியது. நீண்ட காலத்தில் பணவீக்கத்தை(Inflation) தாண்டிய வருவாய் வாய்ப்பு எப்போதும் உள்ளது. அதே வேளையில், பங்குச்சந்தையில் வருவாய் ஈட்டும் முறையை புரிந்து கொள்வது அவசியம்.
பங்குச்சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்கினை நாம் வாங்கும் போது, வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு பல வகைகளில் உள்ளது. தின வர்த்தகம் மற்றும் குறுகிய கால வர்த்தகம் என்பதை ஒரு முதலீட்டாக கருத முடியாது. அவையும் பணம் பண்ணும் வாய்ப்பு தான். முதலீடு என்பது நீண்ட காலத்திற்கு உரியது. உதாரணத்திற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் எனலாம். அதனால் தான் பங்குகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாயம்(Long term Capital Gains) என்பது ஒரு வருடத்திற்கு மேலாக வைத்திருக்கும் முதலீட்டிற்கு பொருந்தும்.
நாம் வாங்கிய பங்குகளை சில வருடங்கள் வைத்திருக்கும் நிலையில், அவை ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது. பங்குச்சந்தையில் ஏற்ற – இறக்கம் இருந்தால் மட்டுமே ஒருவர் பணம் பண்ண முடியும் – இது ஒரு வியாபாரம் என்பதை மறவாதீர்கள். உதாரணமாக நாம் இன்று ரூ.100 மதிப்பை கொண்ட ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்கி வைத்திருக்கும் போது, ஒரு வருடத்திற்கு பிறகு அதன் மதிப்பு ரூ. 150 எனும் போது, நமக்கு லாபம் தானே. அதே பங்கின் விலை ஒரு வருடத்திற்கு பிறகு, 50 ரூபாய் எனில், நமக்கு நஷ்டம் தான். முதலீட்டை பொறுத்தவரை லாப, நஷ்டம் என்பது நாம் அந்த பங்கினை விற்றால் ஒழிய, ஏற்பட வாய்ப்பில்லை. நீண்ட காலம் வைத்திருக்கும் நிலையில், அதன் ஏற்ற – இறக்கங்கள் மாறுபட்டு, நல்ல வருவாயை கொண்டிருக்கும்.
Share Market – Free Course – Fundamental Analysis Registration
ஈவு தொகை(Dividend):
ஒரு நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தால் மட்டுமே, முதலீட்டாளர்களுக்கு லாபம் என்பது இல்லை. நிறுவனம் ஈட்டும் லாபத்தின் மூலமும் முதலீட்டாளருக்கு இதர வருவாய் உண்டு. அது தான் ஈவு தொகை எனப்படும் டிவிடெண்ட்(Dividend). இது வங்கியில் அளிக்கப்படும் வட்டி தொகை போன்று. ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் லாபமீட்டும் போது, அந்த லாப தொகையை கொண்டு தனது தொழிலை மேம்படுத்த பயன்படுத்தலாம். இதன் மூலம் பங்கு விலை அதிகரிக்கலாம். இல்லையெனில், அந்த லாப தொகையை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதே சிறந்தது. இவை தான் ஈவு தொகையாக வெளிப்படுகிறது.
போனஸ் பங்குகள் (Bonus Shares):
நிறுவனம் தனது லாபத்தை தொழில் வளர்ச்சிக்கு முதலீடு செய்யவில்லை. ஈவு தொகையையும் அளிக்க தயாராக இல்லை எனும் போது, அவை போனஸ் பங்குகளாக மாறலாம். அதாவது பங்குகள் வைத்திருக்கும் முதலீட்டாளருக்கு லாப தொகையை போனஸ் பங்குகளாக பகிர்ந்தளிப்பது. இவை சந்தை மதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தாது. அதே நேரத்தில், பங்கின் விலை மாறுபடும்.
பங்குகளை திரும்ப பெறுதல்(Buyback of Shares):
பங்குகளை திரும்ப பெறுவது என்பது பணமீட்டுவதற்கான மற்றொரு வாய்ப்பு. நிறுவனம் தனது லாப தொகையை கொண்டு, முதலீட்டாளர்களிடம் உள்ள பங்குகளை, நிறுவனமே திரும்ப வாங்கி கொள்வது. முதலீட்டாளர்களுக்கு வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு இங்கு ஏற்படுகிறது. இதன் மூலம் நிறுவனர்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.
உரிமை பங்குகள்(Rights Issue):
ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளருக்கு, முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில் சலுகை விலையில்(Discount rate) பங்குகள் விற்கப்படும். இவை தான் உரிமை பங்குகள் எனப்படும். அதாவது சந்தையில் ரூ. 100 என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை, ஏற்கனவே முதலீட்டாளராக உள்ள உங்களுக்கு ரூ. 80 என்ற விலையில் வாங்கி கொள்ளுங்கள் என்று சலுகை அறிவித்தால் அவை உரிமை பங்குகளாகும்.
மேலே சொன்னவாறாக ஐந்து முறைகளில் ஒரு முதலீட்டாளராக பங்குகளில் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. சொல்லப்பட்ட அனைத்தையும் ஒரு நிறுவனம் தர வேண்டிய அவசியமில்லை. ஆனால், நல்ல நிறுவன பங்குகள் இதற்கான வாய்ப்பை எப்போதும் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட பங்குகளை கண்டறிவது நமது கடமையாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை