நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 5
Budget Planning for Middle Class Family – Part 5
நடுத்தர பட்ஜெட் திட்டமிடலின் ஐந்தாவது மற்றும் இறுதி பகுதிக்கு வந்துள்ளோம். நாம் ஏற்கனவே சொன்னது போல, இது ஒரு குறுந்தொடர் பகுதியாகும். வர்த்தக மதுரை முகநூல் வாசகர்களின் கோரிக்கையால் தான் இந்த தொடர் துவங்கப்பட்டது. அவர்களின் இத்தொடர் சார்ந்த வரவேற்பிற்கு, வர்த்தக மதுரை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
திரு. தங்கத்துரை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி ஆசிரியர். இரு பிள்ளைகளின் படிப்பு மற்றும் அவர்களுக்கான திருமணத்தை நன்றாக முடித்து விட்டு தனது மனைவியுடன் ஓய்வு காலத்தை கழித்து வருகிறார். மாத பென்ஷனாக (Monthly Pension) ரூ. 20,000 /- ஐ பெறும் திரு. தங்கத்துரை தனக்கென்று சொந்த வீடு இல்லாமல், மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டு வாடகையாக மாதாமாதம் ரூ. 3500 ஐ செலுத்துகிறார்.
தனது மற்றும் மனைவியின் மருத்துவ செலவுக்காக ரூ. 10,000 ஐ மாதத்திற்கு ஒரு முறை ஒதுக்கியுள்ளார் தங்கத்துரை. தனது ஓய்வூதியம் போக, பங்குச்சந்தை வர்த்தகத்தின் (Share Trading) மூலம் மாதம் 5000 ரூபாய் சம்பாதிப்பதாக கூறுகிறார். ஓய்வு காலத்தில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் நல்ல உணவும், மருத்துவ உதவியும் தான் தேவைப்படும். அவர்களுக்கான போக்குவரத்து மற்றும் ஆடம்பர செலவுகள் பொதுவான தேவையை விட குறைவாக தான் இருக்கும்.
பங்குசந்தையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, தன்னுடைய ஓய்வூதிய தொகையை காட்டிலும் சற்று அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது தங்கத்துரை அவர்களின் விருப்பம். பங்குச்சந்தையை முறையாக கற்றுக்கொண்டால் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் பெறலாம். Capital Gains என்று சொல்லக்கூடிய மூலதன ஆதாயம் மற்றும் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் என்பது பங்குசந்தையில் சுலபமான ஒன்று. ஆனால் நீண்ட காலத்தில் முதலீடு செய்து காத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
நினைவில் கொள்க:
- மருத்துவ செலவுக்கென்று மாதம் ரூ. 10,000 என்றிருக்கும் போது, தங்கத்துரை மற்றும் அவர்களின் திருமதி – இருவருக்கும் சேர்த்து மருத்துவ காப்பீடு (Health Insurance) எடுத்து கொள்வது நன்று.
- சர்க்கரை நோயை கொண்டிருக்கும் தங்கத்துரையும் (62 வயது), அவர்களின் மனைவி (58 வயது) தைராய்டு பிரச்னையால் மருந்து மாத்திரைகளை எடுத்து கொண்டு வருகின்றனர். இதற்கான செலவே மாத ஓய்வூதியத்தில் பெரும்பங்கை வகிக்கிறது. இவர்கள் இருவருக்கான ஒரு வருட மருத்துவ காப்பீடு செலவு என எடுத்து கொள்ளும் போது, 40,000 /- லிருந்து 45,000 /- ரூபாய்க்குள் (மாதம் ரூ. 3400 – 3750) இருக்கும். மருத்துவ காப்பீடு கவரேஜும் ரூ. 10 லட்சம் வரை அமையும். இதன் மூலம் அவர்களுக்கான உடல் நல பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.
- பங்குச்சந்தை என்பது அபாயத்தை கொண்டது (Risk), அதே வேளையில் நீண்ட கால நோக்கத்துடன் முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல வருமானத்தை தரும். திரு. தங்கத்துரை பங்கு வர்த்தகத்தின் மூலம் மாதம் ரூ. 5000 ஐ சம்பாதிக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் ஓய்வு காலத்தில் இருக்கும் அவருக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு, ஓய்வூதியம் தான். சந்தை இறங்கும் போது, அதனால் ஏற்படும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் அளவு தான் ரிஸ்க் எடுக்க வேண்டும். கூடுதல் ரிஸ்க், அதிகப்படியான நஷ்டத்தை தரும்.
- பொதுவாக பங்குச்சந்தையை பொறுத்தவரையில் இளைஞர்கள் ரிஸ்க் எடுத்து சம்பாதிக்கலாம், வயதானவர்கள் அல்லது வருமானத்திற்கு இனி வாய்ப்பில்லாதவர்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இளைஞர்கள் சந்தையில் பணத்தை இழந்தாலும், எதிர்காலத்தில் மீண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அவர்களுக்கான ஊதியம் ஈட்டும் வயதும் அதிகமாக உள்ள காரணத்தால் தான். அதனால் தங்கத்துரை அவர்கள் தின வர்த்தகத்தை (Intraday) விலக்கி விட்டு, நீண்ட காலத்தில் நல்ல நிறுவன பங்கினையோ (அ) பரஸ்பர நிதிகளில் மூலதனத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் திட்டங்களை (Debt Mutual Funds) தேர்ந்தெடுக்கலாம்.
( முற்றும்)
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை