ஏசியன் பெயிண்ட் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ. 506 கோடி
Asian Paints net profit of Rs. 506 Crore in Q2FY19
முன்னணி பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் தனது இரண்டாம் காலாண்டில் (Q2FY19) நிகர லாபமாக 506 கோடி ரூபாயை பதிவு செய்துள்ளது. மொத்த வருமானம் 4639 கோடி ரூபாயாகவும், வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய (EBITDA) வருமானமாக 784 கோடி ரூபாயாகவும் உள்ளது.
இடைக்கால ஈவுத்தொகையாக (Dividend) ரூ. 2.85 /- ஐ ஒரு பங்குக்கு அறிவித்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலத்தில் (2017-2018 ன் இரண்டாம் காலாண்டு) நிறுவனத்தின் நிகர லாபமாக ரூ. 593 கோடியையும், மொத்த வருமானமாக ரூ. 4265 கோடியையும் பெற்றுள்ளது. தற்போது வெளியான காலாண்டின் நிகர லாபம் முந்தைய வருட காலத்துடன் ஒப்பிடுகையில் 14.7 சதவீதம் சரிவடைந்துள்ளது.
அதே நேரத்தில் காலாண்டுக்கான மொத்த வருமானம் 8.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இயக்க அளவும் (Operating margin) இரண்டு சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய வருடத்தில் இது 18.8 சதவீதமாகவும், தற்போது 16.9 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம், டாலருக்கு நிகரான மாற்றம் ஆகியவை இரண்டாம் காலாண்டு லாபத்தை குறைத்துள்ளதாக நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வீடு சம்மந்தமான பெயிண்ட் பிரிவில் 20 சதவீத வருமான வளர்ச்சியை எட்டியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை மாற்றமும் பெயிண்ட் துறையில் (Paint Industry) சிறிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த இலக்கை ஏசியன் பெயிண்ட் நிறுவனம் எட்டவில்லை என சொல்லப்படுகிறது. திங்கள் அன்று (22-10-2018) வர்த்தக முடிவில் ஏசியன் பெயிண்ட் 2.83 சதவீதம் சரிவடைந்து ரூ. 1200.40 (தேசிய பங்குச்சந்தை) என்ற விலையில் முடிவடைந்தது. கடந்த ஜூலை 25ம் தேதி ஏசியன் பெயிண்ட் நிறுவனம் ரூ. 1488 என்ற விலையில் வர்த்தகமானது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை