ரிஸ்க் எடு தலைவா ! (Risk and Margin of Safety)
‘ரிஸ்க்’ (Risk) எடுப்பது எனக்கு ‘ரஸ்க்’ (Rusk) சாப்பிடுற மாதிரி ! எத்தனை பேருக்கு, ‘Rusk’ சாப்பிட பிடிக்கும். இது சாப்பாடு விஷயம் இல்லைங்க, அதாவது நம்மில் எத்தனை பேருக்கு ‘Risk’ எடுப்பது பிடிக்கும் ?
‘Risk’ – Exposure to Danger or Hazard
நிதி சார்ந்த விஷயத்தில், ‘Risk’ என்பது நமது உண்மையான வருமானத்திற்கும், நாம் எதிர்பார்க்கும் வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் தான்.
A Deviation between Actual and Expected Returns is the Risk.
- ரிஸ்குக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று ‘Positive’, மற்றொன்று ‘Negative’.
- நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு எந்த பங்கமும் ஏற்படாமல், முதல் பாதுகாப்பாக இருந்தாலே அது வெற்று அல்லது நேர்மறையாக(Positive) இருக்கும். துணிந்து செயல்பட்டால் முதலுக்கு நல்ல லாபமும் பெறலாம், நஷ்டமும் தான் பல சமயங்களில் ! இதனாலயே நாம் பெரும்பாலும், ‘ரிஸ்க்’ எடுக்க தயங்குகிறோம்; இல்லையெனில் ரிஸ்க் தன்மை மற்றும் விளைவு அறியாமல் அதள பாதாளத்தில் விழுகிறோம் (நஷ்டமடைகிறோம்); சரி, ரிஸ்க் எடுத்தால் நஷ்டமடைய வாய்ப்புள்ளது, ரிஸ்க் எடுக்கா விட்டால் சிறிதளவாது லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது (அ) முதலுக்கு பாதுகாப்பு.
உண்மையிலேயே ரிஸ்க் எடுக்காமல் இருப்பது ஆரோக்கியமானதா, ரிஸ்க் எடுக்காத முதலீடு உண்மையிலேயே நமது முதலை (முதல்) பாதுகாக்கிறதா ?
இல்லை என்றே சொல்லலாம்…
நமது ரிஸ்க் எவ்வாறு உள்ளது ?
- நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது, நீச்சல் தெரிந்தும் ஆழம் அறியாமல் இருப்பது.
- சாலையில் விபத்துக்கான வாய்ப்பு இருந்தும் அதி வேகமாக செல்வது, விதிகளை மதித்தும் எதிர் வருபவரை சரியாக அணுகாமல் போவது.
- விளையாட்டு மைதானத்தில், பள்ளி-கல்லூரிகளில், காதலில், அலுவலகங்களில், புகை மற்றும் மது பழக்கங்களில் என எல்லாவற்றிலும் நாம் தினமும் ஓரளவு ரிஸ்க் எடுக்க தான் செய்கிறோம். ஆனால் பண முதலீடு விஷயத்தில் ? ? ?
அதனை மறந்து விடுகிறோம், செயல்படுகிறோம்.
முதலீடு ரிஸ்க் என்னென்ன ?
நீங்கள் பாதுகாப்பான முதலீடை (Bank Deposits, Postal Savings,Low Return Investments) தேர்ந்தெடுத்தால் ரிஸ்க் இல்லை என்று நினைக்கிறீர்களா ? அது தான் தவறு; நீங்கள் போட்ட பணம் பாதுகாப்பாக உள்ளது என்று உங்களுக்கு நினைவில் இருக்கலாம்; ஆனாலும் இங்கே சில ரிஸ்குகள் தான் உள்ளன, உங்கள் பண முதலீடை பதம் பார்க்க… உங்கள் எதிர்கால இலக்கினை கேள்விக்குறியாக்க !
ரிஸ்க் வகைகள் (Risk Types):
- Inflation Risk
- Liquidity Risk
- Business Risk
- Interest Rate Risk
- Market Risk
Inflation Risk (பணவீக்க அபாயம்) – இது ஒரு தவிர்க்க முடியாத ரிஸ்க். தேவைக்கும், உற்பத்திக்கும்(Demand vs Supply) இடையே உள்ள தன்மையை பொறுத்து மாறுபடும். பொருட்களை வாங்கும் திறனை(Purchasing Power) பெரிதும் பாதிக்கிறது. நீங்கள் இன்று வாங்க போகும் ரூ. 100 விலையுள்ள பொருள், நாளை (அ) அடுத்த மாதம்,அடுத்த வருடம் அதே விலையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் நீங்கள் உங்கள் எதிர்கால இலக்கிற்காக வங்கியில் சேமித்து வைத்திருக்கும் பணம், முதிர்வில் பணவீக்கத்தை சரிக்கட்டுமா என்பது தான் ஐயம். எனவே தான் உங்கள் கனவுகள் பெரும்பாலும் நிறைவேறுவதில்லை – பணவீக்க ரிஸ்க்கினால் !
Liquidity Risk (நீர்மை நிறை அபாயம்) – உங்கள் முதலீடு வங்கி சேமிப்பாகவோ, நிலத்திலோ, அல்லது தங்கத்திலோ அல்லது அரசாங்க பத்திரத்திலோ, பங்கு சந்தையில் இருக்கலாம். ஆனால் உங்கள் அவசர தேவைக்கு அல்லது நீங்கள் உங்கள் இலக்கினை பூர்த்தி செய்யும் போது எளிதாக மற்றும் விரைவாக அதனை பணமாக (ரொக்கம்) மாற்றுவது மிகவும் அவசியம். சில முதலீடுகள் முதிர்வு முடியும் வரை பணமாக மாற்ற முடியாததும், நிலம் போன்ற முதலீடுகளுக்கு சில கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்பதும் நீர்மை நிறை ரிஸ்க்கினால் !
Business Risk (வணிக/ தொழில் அபாயம்) – ஒரு நிறுவனம் (அ) தொழிலை பாதிக்க கூடிய காரணிகள் என்று ஆராய்ந்தால் உற்பத்தி மூலப்பொருட்கள், கூலி செலவு, விற்பனை மற்றும் விநியோகம், போட்டி நிறுவனங்களின் சந்தையிடல் இருக்கும். இதனால் அந்த நிறுவனத்தின் / தொழிலின் இயக்க செலவுகள்(Operating Cost) அதிகரித்து விற்பனை மற்றும் லாபம் பாதிக்க கூடும்; வாடிக்கையாளர்களையும் இழக்கலாம் – நாம் அந்த தொழிலில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் – நமக்கும் Business Risk உள்ளது.
Interest Rate Risk (வட்டி விகிதம்) – நாம் ஒரு வங்கியில் (அ) அரசாங்க பத்திரத்தில் முதலீடு செய்திருக்கிறோம். நாம் முதலீடு செய்யும் போது, வட்டி விகிதம் 9 % கிடைக்கும் என்கிறார்கள்; ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு பாரத ரிசர்வ் வங்கி(RBI) வட்டி விகிதத்தை 8 % ஆக குறைக்கும் முடிவில் உள்ளது. இந்த வட்டி குறைப்பு நமது முதிர்வு கால பணத்தையும் பாதிக்கும். நாம் எதிர்பார்த்த தொகை கிடைக்காது.
பொதுவாக வங்கி வட்டி விகிதம்(Interest Rate) குறையும் போது பத்திரங்களின் மதிப்பு(Bond Rate) கூடுவதும், வட்டி விகிதம் அதிகரிக்கும் போது பத்திரங்களின் மதிப்பு குறைவதும் வழக்கம்.
Market Risk (சந்தை அபாயம்) – சந்தை விலை ஏற்ற-இறக்கத்தினால் முதலீட்டினை இழக்கும் அபாயம்; பங்கு சந்தை, பத்திரங்கள், நிலங்கள் மற்றும் தங்கம் போன்றவை சந்தையின் அபாயத்துக்கு உட்பட்டது. உலகளாவிய காரணிகள் ஏதேனும் பாதிக்கப்பட்டாலும், இவைகள் பாதிப்படைய கூடும். முதலீட்டாளர் தனது பணத்தையும் இழக்க கூடும்.
ரிஸ்க் எவ்வாறெல்லாம் நமது முதலீட்டிற்கு வருகிறது என்பதை பார்த்து விட்டோம்; சரி விடுங்கள், அதனை எவ்வாறு நாம் கையாள்வது ?
சாலையில் சாமர்த்தியமாக வாகனம் ஓட்டுவதை போல (முடிந்தவரையில்) !
Risk Tolerance:
நாம் ஒரு ரிஸ்க்கை எடுக்கும் முன், அதனை எவ்வாறு சகித்து கொள்வது என்பது ‘Risk Tolerance’. இது இரு வகையாக கையாளப்படும்.
- Risk Capacity – அபாயத்தை எதிர்கொள்ளும் திறன்
- Risk Attitude – அபாயத்தை நாம் அணுகும் முறை
அதாவது, நீங்கள் ஒரு ரிஸ்க்கை (முதலீடு) எடுக்க போகிறீர்கள், அதன் விளைவை உங்களால் எவ்வளவு தூரம் தாங்கி கொள்ள முடியும் – உங்களின் எதிர்கொள்ளும் திறன் / வலிமை (Ability to take Risk) எப்படி உள்ளது. இரண்டாவது நீங்கள் அதனை எவ்வாறு அணுகுகிறீர்கள் – இது உங்கள் மனம் சம்மந்தப்பட்ட விஷயம் (Willingness to take Risk), நீங்கள் எந்த அளவு ரிஸ்க் எடுக்க விரும்புகிறீர்கள்.
Margin of Safety:
நீங்கள் ஒரு முதலீட்டை மேற்கொள்ளும் முன் (அ) ரிஸ்க் எடுக்கும் முன், உங்கள் பாதுகாப்பு விளிம்பை(Margin of Safety) உருவாக்கி விட்டீர்களா என பார்க்க வேண்டும்.
ரிஸ்க்கினால் வரும் இழப்பினை சரி செய்ய,
- காப்பீடு(Insurance against any loss) செய்ததுண்டா ?
- போதிய பணம்(Extra / Enough Cash to Survive) கைவசம் உண்டா ?
- வருமுன் காக்கும் பழக்கம்(Prevention) உங்களுக்கு உண்டா ?
இது தாங்க, பாதுகாப்பு விளிம்பு (Margin of Safety).
நீங்கள் உங்கள் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை சந்தையில் வாங்க போகிறீர்கள். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை உள்ளது; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை உள்ளது – நீங்கள் என்ன செய்யலாம் ?
நமக்கு தேவைப்படும் போது, நமக்கு தேவையான விலையில் வாங்கினால் தான் லாபமடைய முடியும். நஷ்டத்தையும் தவிர்க்கலாம்.
தலைவா, ரிஸ்க் எடுக்கலாம் வாங்க 🙂
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !