Your Parents are not your Emergency Fund
Your Children are not your Retirement Fund
சொத்துக்களை குவியுங்கள்; எதிர்பார்ப்புகளை அல்ல !
முன்பெல்லாம், நமக்கு கூட்டு குடும்பத்தின் மீது அதிக நம்பிக்கை இருந்தது; குடும்பத்தில் உள்ள பெரியவர் ஒருவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டும், உடன்பட்டும் நாம் வாழ்ந்ததால் குடும்ப ஒற்றுமை தலைமுறை தலைமுறையாக நிமிர்ந்தும், செழித்தும் நின்றது. நமக்கு சில விஷயங்கள் கசப்பானதாக இருந்தாலும், நமது சகிப்புத்தன்மையே ஓங்கியது. குடும்பத்தலைவர்கள் ஒரு நல்வழிகாட்டியாகவே விளங்கினார்கள்; இதை தான் இன்றும் சில பெரும் பணக்காரர்களும், தொழில் அதிபர்களும் அந்த நல்வழிகாட்டி நம்பிக்கையில் முன்னேறுகின்றனர். ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு தலைமுறை இடைவெளி காரணமாக அந்த நம்பிக்கையில் நம்பிக்கை இல்லை 🙂
நம்பிக்கையின்மையின் விளைவு, பல தனி குடும்பங்கள், தனி மனித சமுதாயமும் உருவாயின ! தொழில்நுட்ப ரீதியாக நாம் நாகரிகம் அடைந்தாலும், மனித சமுதாயமாக பக்குவப்பட்ட ஒரு நாகரிகத்தை நாம் இன்னும் அடையவில்லை என்றே சொல்லலாம். இவ்வாறாக கால மாற்றம் மனித சமுதாயத்தில் இருந்தாலும் இன்னும் நாம் ஒரு சில பழக்க வழக்கங்களால் கண்மூடித்தனமான நம்பிக்கையையே கொண்டிருக்கிறோம். இது ஒரு அறியாமையும் கூட…
“ஆயிரம் பேரிடம் போய் சொல்லி…” என்பதற்கு மாறாக, “ஆயிரம் பொய் சொல்லி…” என்பதனை போல !!
அந்த அறியாமை, பொருளாதாரத்திலும், மற்றும் நம் வாழ்வாதரத்திலும் கூட… ஆம், நாம் பணத்திற்காக பலவருடங்கள் உழைத்தாலும், பொருளாதார ரீதியாக நாம் மற்றவர்களை சார்ந்து இருக்கிறோம்… இதுவும் ஒரு அறியாமையே !
உண்மையில் நாம் தனி மனித சுதந்திரம் என்று சொன்னால், பொருளாதரத்தில் (நம்மில்) முன்னேறி இருக்க வேண்டுமே…
Your Parents are not your Emergency Fund
Your Children are not your Retirement Fund – Stable Investor
உண்மையில் ஒரு சரியான வாசகமும் கூட ; அன்று நாம் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்த நாம் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டிருந்தோம். அது மிகச்சரியே… ஆனால் இப்போதும் நாம், ஒவ்வொரும் தனி குடும்பமாக, தனி நபராக நமது வருமானம் அதிகரிக்கும் போது, நாம் ஏன் இன்னும் பொருளாதரத்திற்கு போராட வேண்டும். இன்னும் நம்மில் பல குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளுக்கு எது தேவை என்பதை அறியாமலும்,தேவையற்றதை செய்வதாலும், செலவழிப்பதாலும் தங்கள் ஓய்வு காலத்திற்கு தங்கள் வாரிசுகளை எதிர்பார்த்து கொண்டிருகின்றனர்; இன்னும் சிலரோ தங்களுக்கான தகுதி இருந்தும், வாய்ப்புகளை உருவாக்காமல் பெற்றோர்களை பொருளாதார ரீதியாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
உங்களுக்குள்ளே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி:
(உங்களுக்காக மட்டுமே 🙂 )
- உங்கள் துணைவன்/துணைவி மீது நீங்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் ?
- ஆண் பிள்ளை தான் உங்கள் வாரிசாக முடியும்; ஆண் பிள்ளை மட்டுமே உங்களை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளும்; பெண் பிள்ளை அல்ல… நீங்கள் இந்த கருத்தை ஏற்று கொள்கிறீர்களா ?
- உங்கள் குழந்தையின் படிப்பு, உங்களின் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை விட முக்கியமா ?
- உங்களுக்கு பிடித்தவர் உங்களுடன் இல்லாத போது / நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களுடன் இல்லாத போது… தங்கள் தனிமை காலத்தை தங்களால் கொண்டாட எப்போதாவது திட்டமிட்டு இருக்கிறீர்களா ?
மேலுள்ள எல்லா கேள்விகளும் உங்களுக்காக மட்டுமே என்று சொல்லியிருக்கிறேன்; அதனால் சற்று சூடாக இருக்கலாம். ஆனால் இது மிகவும் அவசியமான ஒன்று. ஒரு சுய பரிசோதனையும் கூட…
ஒரு குடும்ப நிர்வாகத்துக்கும், ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கும் ஒன்றும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. உங்களால் ஒரு குடும்பத்தை 50 % நிர்வகிக்க தெரிந்தாலே, நீங்கள் ஒரு நாட்டின் நிர்வாகத்தையும், கடமையும் புரிந்து கொள்ள முடியும்; நூறு சதவீதம் நிர்வாகம் அல்ல !
உங்கள் ஓய்வு காலத்தை விட, உங்கள் வாரிசுகளின் கல்வி ஒன்றும் முக்கியமில்லை. நாம் சினிமாவில் பார்ப்பது போன்று பெற்றோர் சுமை தூக்கு வேலை செய்து, கஷ்டப்பட்டு தன் பிள்ளையை மேல் படிப்பிற்கு படிக்க வைப்பார்; முடிவில் அவர்களது பிள்ளையான நமது ஹீரோ, வெளிநாட்டில் படித்து ஒரு நல்ல டாக்டராகவோ, இன்ஜினீராகவோ நம் நாட்டிற்கு வந்து சேவை புரிவார். இது திரையில் மட்டுமே 🙂
அப்படி நடந்து விட்டால் தான், நம் பள்ளி, கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்ற எல்லாருமே அவ்வாறு உருவாகி இருக்க வேண்டுமே ??? ஆனால் எதார்த்த வாழ்க்கை அப்படி இல்லை.
நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு அறிவு சார்ந்த விஷயங்கள், தன்னம்பிக்கை மற்றும் புதுமையை சொல்லி கொடுங்கள்; பள்ளி மற்றும் கல்லூரிகளில் லட்சங்களை கொட்டி, உங்கள் ஓய்வு காலத்திற்கு அவர்களை எதிர்பார்க்க வேண்டாம். சுயநலமான சமுதாயத்தையும், முதியோர் இல்லத்தையும் நீங்களே உருவாக்க வேண்டாமே !
உங்களை விட, உங்கள் வீடு, வாரிசுகள், மண், பொன் ஒரு பெரிய சொத்து அல்ல. நீங்கள் தான் சிறந்த ஒரு சொத்து. ஆதலால் உண்மையான சொத்துக்களை குவியுங்கள்…
உண்மையான சொத்து:
நீங்களோ (அ) உங்களை சுற்றியுள்ள உறவுகளோ யாரையும், எதையும் எதிர்பார்க்காமல், எந்த நிபந்தனையும் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக மகிழ்ச்சியாக வாழ தேவைப்படும் ஒரு தன்மை.
சொத்துக்களை குவியுங்கள்; “Rich Dad,Poor Dad” ன் ராபட் கியோஸகி(Robert Kiyosaki) சொல்வதை போல ‘உங்கள் வீடு ஒரு சொத்து அல்ல… ஒரு புதிய வீட்டை நீங்கள் வீட்டுக்கடன் மூலமோ (அ) கையில் வைத்திருக்கும் பணத்தை செலவழித்தோ அதனை கட்ட முயற்சிக்கிறீர்கள்; அந்த வீட்டிற்காக தங்கள் ஒவ்வொரு வருடமும் வரி கட்டுவதற்கும், பராமரிப்பு செலவுக்கும் உட்படுகிறீர்கள்; எந்த வருமானத்தையும் பெற்று தராமல் வெறும் செலவு செய்து கொண்டிருப்பதன் பயன் ? தனது அடிப்படை வசதிக்கு ஒரு வீடு போதுமே, ஆடம்பரமாக வீடுகள் தேவை இல்லையே !(ஆயிரக்கணக்கானோர் வீடுகளின்றி இருக்கும் போது)
எனவே, உங்களுடைய சொத்து என்று எதை நீங்கள் நினைக்கிறீர்களோ , அது உங்களுக்கு வருமானத்தை பெற்று தர வேண்டும். அரசாங்கம் கூட பழங்கால சிற்பங்கள், மன்னர் கால மாளிகைகளை பாதுகாப்பதற்கு, பராமரிப்பதற்கு மக்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கின்றன. நீங்கள் கற்கும் கல்வி கூட உங்களை மகிழ்ச்சியாக வாழ வைக்க முடியவில்லை என்றால் என்ன பயன்… அதனால் தான் கல்வி மற்றும் அறிவு சார்ந்த விஷயங்கள் ஒரு நீண்ட கால சொத்தாக கவனிக்கப்படுகிறது; நமது பள்ளி, கல்லூரி படிப்பு அல்ல 🙂
மீண்டும் நமது கவனத்திற்கு… சொத்துக்களை குவியுங்கள்; எதிர்பார்ப்புகளை அல்ல !
உங்களுக்கு நீண்ட வருமானம் தரும், வாழ்வளிக்கும்…(Passive Income)
- அறிவு சார்ந்த விஷயங்கள் (Knowledge and Creativity Skills)
- பங்குகள் (Stocks and Dividends)
- வங்கி வட்டிகள் (Interest Income)
- வாடகை வருமானங்கள் (Rental Income)
- தொழில்கள் (Business)
- அன்பு மற்றும் நன்னடத்தை (Love and Behavior)
யாரையும் நாம் எதிர்பார்த்து வாழ வேண்டாம்; எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையும், கவலையும் தரலாம்.
சொத்துக்களை குவிக்க உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.
உங்களுடைய பகிர்வுகளுக்கு:
– நன்றி, வர்த்தக மதுரை
Like this:
Like Loading...
Related