Tag Archives: stock split

பங்குப் பிரிப்புக்கு தயாராகும் இந்தியன் டோனர்ஸ் – பங்குச்சந்தை அலசல்

கடந்த 1990ம் ஆண்டு வாக்கில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராம்பூரை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்ட நிறுவனம் தான் இந்தியன் டோனர்ஸ்(Indian Toners & Developers Ltd – ITDL). இந்தியாவில் லேசர் பிரின்டர்களுக்கான டோனர் பவுடர்(Toner Powder) பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வந்திருந்தது. இதை மாற்றி, இந்தியாவிலேயே உயர்தர டோனர் பவுடரை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. 

லேசர் பிரிவில் பிரிண்டர் டோனர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மூலப்பொருட்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. லேசர் பிரிண்டர்கள், டிஜிட்டல் இயந்திரங்கள், பல-செயல்பாட்டு பிரிண்டர்கள், அனலாக் நகல் இயந்திரங்கள் (copiers) மற்றும் அகல வடிவ (wide format) பிரிண்டர்கள் மற்றும் நகல் இயந்திரங்களில் பயன்படுத்தக்கூடிய இணக்கமான டோனர்களின் (compatible toners) இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராகவும் நிறுவனம் உள்ளது. 

மொத்த அளவிலான டோனர்கள் மட்டுமின்றி, லேசர் பிரிண்டர்களில் பயன்படுத்த உயர்தர வண்ண டோனர்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது. ‘Supremo’ (சுப்ரீமோ) என்ற பிராண்டின் கீழ் மாற்றுப் பொருட்களுக்கான சந்தையிலும் (replacement market) தனது சேவையை அளிக்கிறது இந்தியன் டோனர்ஸ்.

காலப்போக்கில், இந்திய சந்தையைத் தாண்டி உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. தரம் மற்றும் ஆராய்ச்சி (R&D) மீது கவனம் செலுத்தி, பல்வேறு பிரிண்டர் பிராண்டுகளுக்கு ஏற்ற டோனர் தயாரிப்புகளையும் உருவாக்கி வருகிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அச்சுப்பொறி மை உற்பத்தியாளர்கள், மறு நிரப்புதல் நிறுவனங்கள், அலுவலக உபகரண நிறுவனங்கள், சர்வதேச விநியோகஸ்தர்கள் மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்கள் ஆகியோர் உள்ளனர். 

நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில், இதன் ஒட்டுமொத்த வருவாயில் ஏற்றுமதியின் பங்களிப்பு மட்டும் 16 சதவீதமாக உள்ளது. உள்நாட்டில் சுமார் 120க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களையும், 60க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களையும்(Dealers) இந்நிறுவனம் கொண்டுள்ளது. 

கடந்த 2025-26ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 166 கோடி ரூபாயாகவும், செலவினம் 131 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம் 35 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.27 கோடி. இயக்க லாப விகிதம்(OPM) ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. 

2026ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு ரூ.222 கோடி மற்றும் நிறுவனத்திற்கு கடன் எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 69.25 சதவீதமாக உள்ளது. தற்போது பங்கு ஒன்றின் விலை ரூ.296 (ஜூலை 7, 2026) என்ற விலையில் வர்த்தகமாகி வரும் நிலையில், வரும் ஜூலை 17ம் தேதி, இந்நிறுவனம் பங்குப் பிரிப்பு(Stock Split) நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. நடப்பில் இதன் பங்கு முக மதிப்பு ரூ.10 என்ற அளவில் உள்ள நிலையில், இதனை இரண்டு ரூபாய் முக மதிப்பாக பிரிக்க உள்ளது. அதாவது ஏற்கனவே பங்கு வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு, ஐந்து பங்குகள் என்ற விகிதத்தில் அளிக்கப்படவுள்ளது. 

Stock Split issue:

Old Face Value: Rs.10 per Share

New Face Value: Rs.2 per Share (Record Date: 17th July, 2026)

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

www.varthagamadurai.com