Tag Archives: Project Sudarshan

‘சுதர்ஷன்’ (Sudarshan) AI ஐ பற்றி தெரிந்து கொள்ளலாம், வாங்க !

‘சுதர்ஷன்’ (Sudarshan) AI ஐ பற்றி தெரிந்து கொள்ளலாம், வாங்க ! 

Protect from Fake Investment Advice and Financial Frauds – Sudarshan AI

 

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பங்குச்சந்தை முதலீடு குறித்த தகவல்கள் YouTube, Instagram, Facebook, Telegram, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மிக வேகமாகப் பரவி வருகின்றன. இவற்றில் பல பயனுள்ள முதலீட்டுக் கல்வித் தகவல்கள் இருந்தாலும், சிலர் தவறான தகவல்கள், போலியான லாபக் கணக்குகள், உறுதியான லாபம் தருவதாகக் கூறும் வாக்குறுதிகள் ஆகியவற்றின் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றுகின்றனர். இதுபோன்ற மோசடிகளைக் கண்டறிந்து முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI (Securities and Exchange Board of India), ‘Sudarshan’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்புக் கருவியை பயன்படுத்தி வருகிறது.

செபியின் 2025-26ம் ஆண்டு அறிக்கையின்படி, சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மோசடியான உள்ளடக்கங்களையும், பதிவுகளையும் ‘சுதர்ஷன் AI’ மூலம் அடையாளம் கண்டுள்ளது. சுதர்சன் செயற்கை நுண்ணறிவு திட்டம் மற்றும் SEBI-யின் R(AI)DAR கருவி ஆகியவை பல்லாயிரக்கணக்கான மோசடிப் பதிவுகளைக் கண்டறிந்து, பதிவு செய்யப்படாத ஃபின்ஃப்ளூயன்சர்களின்(Financial Influencers) 1.2 லட்சத்திற்கும் மேற்பட்ட தவறான சமூக ஊடகப் பதிவுகளை அகற்ற உதவியுள்ளன. சுமார் 62 சதவீத முதலீட்டாளர்கள் ஃபின்ஃப்ளூயன்சர்களால் ஈர்க்கப்படுகிறார்கள் என்றும், அவர்களில் 93 சதவீத முதலீட்டாளர்கள் அவர்களை நம்பகமானவர்களாகக் கருதுகிறார்கள் என்றும் செபியின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

Sudarshan AI என்றால் என்ன?

 

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI, கடந்த 2025ம் வருடம், நவம்பர் மாத வாக்கில் தனது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சுதர்சன் திட்டத்தை(Project Sudarshan AI) சோதிக்கத் தொடங்கியது. இதன் முழுமையான உள்ளகச் செயலாக்கம் மற்றும் முறையான செயல்பாடுகள் நடப்பு மார்ச் 2026-க்குள் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் கூறியிருந்தது.

Sudarshan என்பது இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடைபெறும் அங்கீகரிக்கப்படாத நிதி ஆலோசனை நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கண்டறிய உதவும் SEBI-யின் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பக் கருவியாகும். SEBI-யிடம் பதிவு செய்யப்படாத சிலர், தங்களைப் பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் (Investment Advisers) அல்லது ஆராய்ச்சி ஆய்வாளர்கள் (Research Analysts) என்று காட்டிக்கொண்டு பொதுமக்களிடம் முதலீட்டுப் பரிந்துரைகளை வழங்குகின்றனர். இத்தகைய நபர்களின் செயல்பாடுகளைக் கண்டறிவதில் Sudarshan AI முக்கியப் பங்காற்றுகிறது. மனிதர்களால் மட்டுமே கண்காணிக்க வேண்டிய பெரிய அளவிலான டிஜிட்டல் தகவல்களைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கமாகும்.

மோசடிகளை எவ்வாறு கண்டறிகிறது?

 

Sudarshan AI, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் உரைகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் ஒலித் தகவல்கள் உள்ளிட்ட டிஜிட்டல் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க உதவுகிறது. உதாரணமாக, “ஒரு மாதத்தில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம்”, “100% உறுதியான லாபம்”, “இந்தப் பங்கை வாங்கினால் நஷ்டமே வராது” போன்ற தவறாக வழிநடத்தக்கூடிய விளம்பரங்கள் மற்றும் கூற்றுகள் ஆய்வுக்குரியவையாக இருக்கலாம். அதேபோல், போலியான வர்த்தக லாபப் படங்களைப் பயன்படுத்துவது அல்லது பதிவு பெற்ற நிபுணர் போல நடித்து மக்களிடம் பணம் பெறுவது போன்ற செயல்பாடுகளையும் ஒழுங்குமுறை அமைப்பு கவனத்தில் கொள்ள முடியும். இருப்பினும், AI ஒரு சந்தேகத்திற்குரிய உள்ளடக்கத்தைக் கண்டறிவது மட்டுமே அந்த நபர் குற்றம் செய்துவிட்டார் என்பதற்கான இறுதி ஆதாரமாகாது; உரிய ஆய்வு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அவசியம்.

நிதி செல்வாக்கு செலுத்துபவர்கள் (Financial Influencers) மற்றும் முதலீட்டுக் கல்விக்கு என்ன தாக்கம்?

 

சமூக வலைத்தளங்களில் பங்குச்சந்தை பற்றிப் பேசும் அனைவரும் தவறானவர்கள் அல்ல. முதலீட்டின் அடிப்படைகள், நிறுவனங்களின் நிதிநிலை, நீண்டகால முதலீடு, இடர் மேலாண்மை(Risk Management) போன்றவற்றைப் பற்றிய கல்வித் தகவல்களை வழங்குபவர்கள் முதலீட்டாளர்களுக்கு உதவ முடியும். ஆனால், பதிவு மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்குப் புறம்பாக தனிப்பட்ட முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது, தவறான லாப வாக்குறுதிகளை அளிப்பது அல்லது முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்துவது என்பது வேறுபட்ட விஷயங்களாகும். எனவே, Sudarshan AI போன்ற கருவிகளின் பயன்பாடு நிதி உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களிடையே பொறுப்புணர்வை அதிகரிக்க உதவும். அதே நேரத்தில், உண்மையான முதலீட்டுக் கல்வியையும் தவறான நிதி விளம்பரங்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியம்.

முதலீட்டாளர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம்?

 

Sudarshan AI போன்ற தொழில்நுட்பங்கள் இருந்தாலும், முதலீட்டாளர்கள் தங்களின் நிதிப் பாதுகாப்பிற்கான அடிப்படை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். முதலீட்டு ஆலோசனை வழங்குபவர் SEBI-யிடம் பதிவு பெற்றவரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் லாபக் கணக்குகள், வாட்ஸ்அப் குழுக்களின் பரிந்துரைகள், போலியான சான்றுகள் மற்றும் அவசரமாகப் பணம் செலுத்தச் சொல்லும் அழைப்புகளை நம்புவதற்கு முன் சுயமாகச் சரிபார்க்க வேண்டும். பதிவு பெற்றவர் என்பதாலேயே அவர் வழங்கும் ஒவ்வொரு பரிந்துரையும் லாபகரமானதாக மாறிவிடாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த முதலீட்டிலும் சந்தை அபாயம்(Market Risk) உள்ளது. எனவே, கடன் வாங்கி முதலீடு செய்வது அல்லது உறுதியான லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நமது பணத்தை ஒப்படைப்பது போன்ற செயல்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

SEBI-யின் Sudarshan AI என்பது இந்தியப் பங்குச்சந்தையில் டிஜிட்டல் கண்காணிப்பையும் முதலீட்டாளர் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் முக்கியமான தொழில்நுட்ப முயற்சியாகும். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சந்தேகத்திற்குரிய நிதி உள்ளடக்கங்களைக் கண்டறிந்து, தவறான தகவல்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இது உதவுகிறது. இருப்பினும், தொழில்நுட்பம் மட்டுமே அனைத்து மோசடிகளையும் தடுக்க முடியாது. முதலீட்டாளர்களின் விழிப்புணர்வு, ஒழுங்குமுறை அமைப்புகளின் கண்காணிப்பு மற்றும் பொறுப்பான நிதிக் கல்வி ஆகிய மூன்றும் இணைந்தால் தான் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டுச் சூழலை உருவாக்க முடியும்.

முதலீட்டில் லாபத்தைத் தேடுவதற்கு முன், நம்பகமான தகவலையும் சரியான அறிவையும் தேடுங்கள்.

கவனிக்க: இந்தக் கட்டுரையில் Sudarshan AI பற்றிய விளக்கம் SEBI-யின் வெளியிடப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. SEBI-யின் Sudarshan AI எவ்வாறு போலியான முதலீட்டு ஆலோசனைகள் மற்றும் நிதி மோசடிகளைக் கண்டறிய உதவுகிறது என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம். 

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com